2003ம் ஆண்டு முதல் உலகம் முழுக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு நாள் முன்னெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடம் ஒரு கருப்பொருளுடன் இந்த தினம் முன்னெடுக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக, ‘தற்கொலை எண்ணத்தை மாற்றுவது’ ‘உரையாடலை துவங்குவது’ என முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலை எண்ணங்களை தடுப்பது குறித்தும் முன்பே கண்டறிந்து மீள்வது குறித்தும் நியுஸ் 18 தமிழ்நாடு சார்பாக உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்திடம் பேசினோம்.
இந்த வருட கருப்பொருள் மூலம் சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும்?
இதைப் பற்றி வெளியில் பேசுவதே கிடையாது. அதன் காரணமாக பேசுவதை ஊக்கிவிக்கவும், புரிதலை அதிகரிக்கவும், இதைப் பற்றிய பேச்சுகள் அதிகரிக்கவுமே இந்தக் கருப்பொருள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் மூலம், ஒருவருக்கு மற்றொருவர் ஆறுதல் கொடுக்கும் மனப்பாங்கு வரவேண்டும் என்பதும் முன்னெடுக்கப்படுகிறது.
தற்கொலை தொடர்பான எண்ணங்கள் வரும்போது அதில் இருந்து விலகுவதற்காக அரசு உதவி எண் அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனையும் தாண்டி அரசு என்ன மாதிரியான விஷயங்களை எல்லாம் மேற்கொள்ள வேண்டும்?
ஒருவருக்கு தற்கொலை தொடர்பான எண்ணம் இருக்கிறது என்றால் அது முதலில் வெளியே தெரியாது. அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து திடீரென ஒரு கட்டத்தில் தவறான முடிவை எடுத்துவிடுவார்கள். ஒருவருக்கு மன அழுத்தம் இருக்கிறது என்றாலே அவர்களை மன நலம் பாதித்தவர்களைப் போல் பார்க்கும் வழக்கம் இருக்கிறது. அப்படி இல்லாமல், அந்தப் பார்வையை மாற்ற வேண்டும். உங்களுக்கு தற்கொலை தொடர்பான எண்ணங்கள் வருகிறது என்றாலே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர் என யாரிடமாவது பேச வேண்டும். தற்கொலை தொடர்பான எண்ணம் வரும்போது நிறைய நபர்கள் என்னிடம் பேசியுள்ளனர். அப்படி பேசியப்பின் அவர்களுக்கு அந்த எண்ணமே மாறியிருக்கிறது. எனவே உங்களுக்கு ஒரு தவறான எண்ணம் வருகிறது என்றால் முதலில் பேச வேண்டும். பேசினாலே சரியாகும்.
இரு விதமாக இதனை பார்க்க வேண்டும். ஒருவருக்கு தற்கொலை எண்ணம் இருக்கிறது என்றால் அதனை கண்டறிய அவருக்கும் தெரிய வேண்டும். அவருடன் இருப்பவர்களுக்கும் அதனை கண்டறிய தெரியவேண்டும்.
ஒருவரிடம் எந்த மாதிரியான மாற்றம் வரும் போது நாம் அவர்களுடன் இருக்க வேண்டும்? அல்லது அவர்கள் ஒருவரை அனுக வேண்டும்?
ஒருவருக்கு அப்படியான எண்ணம் இருக்கிறது என்றால் அவரின் நடவடிக்கையில் மாற்றம் இருக்கும். அது அவருக்கு தெரிவதற்கு முன்பாக அவருடன் நெருங்கி பழகுபவர்களுக்கு தெரியவரும். அவர்கள் அதனை முறையாக கண்டறிந்தால் அந்த நபரை அதில் இருந்து காத்துவிடலாம். தற்கொலை செய்துக்கொள்ள நினைப்பவர்கள் ஏதாவது ஒரு தருணத்தில் கண்டிப்பாக தற்கொலை பற்றி பேசுவார்கள். அதனை சாதாரனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது, மாறாக அவர்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். அது அவர்களை அந்த முடிவில் இருந்து மாற வைக்கும்.
தற்கொலை பற்றி பேசுவார்கள், அதீத தூக்கம் அல்லது தூக்கமின்மை என அவர்களது தூங்கும் முறை மாறும். உணவிலும் அதற்கான அறிகுறிகள் தெரியவரும், ஒன்று அதிகம் உண்ணுவார்கள் அல்லது உணவையே தவிர்ப்பார்கள். அதுபோக தங்களை தாங்களே குற்றம் சொல்லிக்கொள்ளுதல் அதிகமாக இருக்கும். குறிப்பாக அந்த நேரத்தில் அனைவரின் தொடர்பையும் தவிர்த்துவிட்டு தனித்து இருப்பார்கள். அடுத்து தற்கொலை தொடர்பாக தேட ஆரம்பிப்பார்கள். இந்த சமயத்தில் ஒன்று அவர்களே கொஞ்சம் மனம் மாற்றி யாருடனாவது பேச வேண்டும். அல்லது அந்த நபரை சுற்றி இருப்பவர்கள் இதனைக் கண்டறியும்போது அவர்கள் அந்த நபருடன் பேச வேண்டும்.
தற்கொலை தொடர்பாக ஒருவர் தேடும்போதே அவரை கண்காணித்து அரசு தரப்பில் இருந்து ஏதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் நடைமுறை தற்போது உள்ளதா?
ஒருவர் தற்கொலை தொடர்பாக தேடுகிறார் என்றாலே முதலில் அந்த எண்ணத்தில் இருந்து மீள்வதற்கான உதவி எண் தான் வரும். ஆனால், தனக்கு உதவியே வேண்டாம் மரணிக்கிறேன் எனும் எண்ணத்தில் இருப்பவர்கள் அந்த உதவியையே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்குதான் முன்னதாகவே நாம் கண்டறிந்து அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்.
பள்ளியில் படிக்கும் மாணவர்கள், நீட் பயிற்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி போன்றவற்றில் படிக்கும் மாணவர்கள் கூட இப்படியான தவறான முடிவை எடுக்கிறார்கள் அவர்களுக்கு என்ன மாதிரியான ஆலோசனை வழங்குவது?
மாணவர்களை பொறுத்தவரை இப்படியான எண்ணம் ஏன் வருகிறது என்றால் சிறு வயது முதலே ஒரு விஷயம் தான், தன் அடையாளம் என தீர்க்கமாக முடிவு எடுத்துவருவது. உதாரணத்திற்கு அதிக மதிப்பெண் பெற வேண்டும், அல்லது இதில் வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்துக்கொண்டு அது இல்லை என்றால் வாழ்வே இல்லை என நினைத்துக்கொள்வது. முதலில் ஒருவர் தன்னை தானே காதலிக்க வேண்டும்.
இது ஒருபுறம் இருக்கிறது. அதேசமயம், புற அழுத்தங்களும் அதிகமாக இருக்கிறது அல்லவா? அதில் இருந்து எப்படி மீள்வது?
படிப்பை தாண்டி, மனவலிமை பயிற்சி என்பது மிகவும் முக்கியம். பிரச்சனையை எதிர்க்கொள்ளும் திறன் மிகவும் முக்கியம். உதாரணத்திற்கு ஒரு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அது மட்டும் தான் நம் அடையாளமா? இல்லை நமக்கு வேறு பல அடையாளங்கள் உள்ளன என்பதை அறிய வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் விதம் குறித்து பயிற்சி இருக்க வேண்டும்.
பாடத்தை தாண்டி மாணவர்களுக்கு இப்படியான பயிற்சிகளை வழங்குவதற்கு வகுப்புகள் எல்லாம் இல்லையா?
உளவியல் ஆலோசகர் இருக்க வேண்டும் என இருக்கிறது. ஆனால், முழுமையாக நடைமுறையில் இல்லை. அப்படியே அது வந்தாலும் அது ஒரு மாரல் சைன்ஸ் வகுப்புப் போல் இருந்துவிடக்கூடாது. சட்டங்களை போடுபவர்களும் அதனை அமல்படுத்துபவர்களும் வெவ்வேறானவர்கள்.
ஒரு சட்டத்தை இறுதியில் நடைமுறை செய்யும்வரை அரசு முக்கியத்துவம் தரவேண்டும். செயல்படுத்தவில்லை என்றால் அதன் பிரச்சனை என்னவாக இருக்கும். அல்லது செயல்படுத்திய பிறகு அதன் முடிவுகள் என்ன என்பதுவரை கவனிக்க வேண்டும். இதனை கல்வி நிறுவனங்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும். அதன் முடிவுகள் என்னவென்றும் கல்வி நிறுவனங்கள் அரசுக்கு அனுப்பவேண்டும். அப்படி அனுப்பவில்லை என்றால் கல்வி நிறுவனம் நடத்துவதற்கான அனுமதியில் பிரச்சனை வரும் என்ற அளவிற்கு அரசு இதனை கொண்டு செல்ல வேண்டும். முதலில் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்க வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் இதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல, தற்கொலை எண்ணம் வந்தாலோ அல்லது மன அழுத்தம் இருந்தாலோ, அதில் இருந்து மீள்வதற்கு அரசு சுகாதார சேவை உதவி மையம் 104 தொடர்பு கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment