தமிழக அரசுப் பள்ளிகளில் நன்னெறி வகுப்புகள் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: "உலகப் பொதுமறையாக உள்ள திருக்குறளில் இருக்கும் அறத்துப்பால், பொருட்பாவில் உள்ள 105 அதிகாரங்களை உள்ளடக்கி 6 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நன்னெறி கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருக்குறளை வாழ்வியல் நெறியாக பின்பற்ற ஏதுவாக இந்த நன்னெறிக் கல்வியை மாணவர்களுக்கு பள்ளிகளில் புகட்டுவதற்கு சில வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கல்வித்துறை அதிகாரிகள் நன்னெறி வகுப்புகள் பள்ளிகளில் நடைபெறுவதை கள ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். பள்ளிகளில் நடக்கும் ஆண்டு ஆய்வுக் கூட்டங்களில் நன்னெறி கல்வியின் நீடித்த பயன் தரும் விளைவை விளக்கிட வேண்டும். திருக்குறளை நாள்தோறும் காலை வணக்கக் கூட்டத்தில் பொருளுடன் மாணவர்கள் கூற வேண்டும். மேலும், தமிழ் இலக்கிய மன்ற கூட்டங்களில் திருக்குறள் சார்ந்த கதை, கவிதை, நாடகம், வினாடி- வினா ஆகியவற்றை திட்டமிட்டு பள்ளி அளவில் நடத்திட வேண்டும்.
இது தவிர, பள்ளி அளவில் 100 குறட்பாக்களுக்கு அதிகமாக ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து உரிய பரிசுத்தொகையான ரூ.200 வழங்கி பாராட்ட வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப் பட்டுள்ளன. இதுமட்டுமின்றி திருக்குறள் வழியிலான வாழ்வியல் நெறிகளை பின்பற்ற உரிய வழிகாட்டுதல்களை பள்ளி அளவில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வழங்க வேண்டும்" என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
0 Comments:
Post a Comment