Search

உங்களுக்கு ப்ரீ டயாபடீஸ் இருக்கா..? ஆரம்பநிலையிலேயே அதை கட்டுப்படுத்தும் வழிகள்.!

 தற்போது நீரழிவு நோய் என்பது இந்தியாவில் அதிக அளவு மக்களை பாதித்து வரும் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்கு முந்தைய நிலையான ப்ரீ டயாபடீஸ் என்பது நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஒரு எச்சரிக்கை அறிகுறியாக அமைகிறது. ப்ரீ டயாபடீஸ் என்பது பெயர் குறிப்பிடுவதைப் போலவே டயாபடீஸ் போல அதிக அளவு சர்க்கரை இல்லாவிட்டாலும் வழக்கத்தை விட சற்று கூடுதலான ரத்த சர்க்கரை அளவுகளை கொண்டுள்ள ஒரு நிலையாகும். நமது உடல் இன்சுலினுக்கு எதிர்ப்பு திறனை வெளிப்படுத்த ஆரம்பிக்கும் நிலை ப்ரீ டயாபடீஸ் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு வேலை உங்களுக்கு ப்ரீ டயாபடீஸ் இருந்தால் அடுத்த ஒரு வருடத்தில் உங்களுக்கு வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 10 சதவீதம் உள்ளது. மேலும் உங்களுடைய வாழ்நாளில் வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு தோராயமாக 70% இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. எனவே இந்த ப்ரீ டயாபடீஸ் நிலையை ஒருவரால் கட்டுப்படுத்த முடியுமா? நிச்சயமாக முடியும். அதனை தெரிந்து கொள்வதற்கு முன்பு ப்ரீ டயாபடீஸ் நிலையை எப்படி அடையாளம் காண்பது என்பதை பார்க்கலாம்.


ப்ரீ டயாபடீஸ் நிலையை உணர்த்தும் அறிகுறிகள் ப்ரீ டயாபடீஸ் வெளிப்படுத்தும் பொதுவான அறிகுறிகளில் அதிக தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவை அடங்கும். சர்க்கரை அளவுகள் அதிகரிப்பதால் நமது சிறுநீரகங்கள் தொடர்ந்து கடுமையாக பாடுபட்டு ரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸை உறிஞ்சுகிறது. இதனால் நீர்ச்சத்து இழப்பு உண்டாகி, அதிக தாகம் ஏற்படுகிறது.

அடுத்தபடியாக சோர்வு ப்ரீ டயாபடீஸ் நிலைக்கான மற்றொரு அறிகுறி. ஆற்றலுக்கு தேவையான குளுக்கோஸை உறிஞ்சுவதில் உடல் கடுமையாக உழைத்துக் கொண்டே இருக்கும் காரணத்தால் ஒருவர் எப்பொழுதும் சோர்வாகவும், சோம்பேறித்தனமாகவும் உணர்கிறார்.


மேலும் உடல் எடையில் திடீரென்று ஏற்படும் மாற்றங்கள் ப்ரீ டயாபடீஸ் நிலையின் அறிகுறிகள். இது தவிர சருமத்தில் குறிப்பாக கழுத்து அல்லது அக்குள் பகுதிகளில் கருமை நிறத் தட்டுகளும் ஃப்ரீ டயாபடீஸ் நிலைக்கான எச்சரிக்கை அறிகுறி.

ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிப்பதால் கண்களில் உள்ள லென்ஸ் பாதிக்கப்பட்டு ஒரு சிலர் மங்கலான பார்வையை அனுபவிக்கின்றனர்.

News18

ஃப்ரீ டயாபடீஸ் நிலையை கட்டுப்படுத்த உதவும் வைத்தியங்கள்

ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பின்பற்றினாலே உங்களுடைய ரத்த சர்க்கரை அளவுகளை குறைத்து, நீரழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பினை நீங்கள் குறைக்கலாம். அவ்வாறான சில வைத்தியங்கள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

ப்ரீ டயாபடீஸ் நிலையை கட்டுப்படுத்துவதற்கு உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சரிவிகித உணவு அவசியம். பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அடங்கிய ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிடவும். அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை நிறைந்த பானங்கள் மற்றும் கலோரி அதிகமாக உள்ள தின்பண்டங்களை தவிர்த்து விடுங்கள்.

ப்ரீ டயாபடீஸ் நிலையை கட்டுப்படுத்துவதற்கு நிச்சயமாக நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்களாவது மிதமான உடற்பயிற்சி செய்வது நல்லது. உதாரணமாக நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது அல்லது நீச்சல் போன்றவற்றை நீங்கள் செய்யலாம்.அதிகப்படியான உடல் எடை காரணமாக இன்சுலின் உணர்திறன் ஏற்பட்டு, வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. எனவே உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு போதுமான அளவு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அவ்வப்போது ரத்த சர்க்கரையை அளவுகளை கண்காணித்து அதில் ஏற்படக்கூடிய மாற்றங்களை பொறுத்து உங்கள் உணவுகளை மாற்றி அமைப்பது நல்லது.
நல்ல தரமான தூக்கம் பெறுவது குளுக்கோஸ் அளவை திறம்பட கட்டுப்படுத்துவதற்கு உதவும். எந்தவித தடங்கல்களும் இல்லாத 7 முதல் 9 மணி நேர தூக்கம் அவசியம். ஏனெனில் தரமற்ற தூக்கம் ஒரு சில ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைத்து அதனால் ப்ரீ டயாபடீஸ் நிலை மோசமாகலாம்.

நாள்பட்ட மன அழுத்தம் ரத்த சர்க்கரை அளவுகளை அதிகரித்து அதனால் இன்சுலின் உணர்திறன் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு தியானம், யோகா, ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி அல்லது இயற்கையோடு நேரத்தை செலவிடுதல் போன்ற விஷயங்களை நீங்கள் செய்யலாம். இந்த குறிப்புகளை பின்பற்றி ப்ரீ டயாபடீஸ் நிலையை கட்டுப்படுத்தி நீரிழிவு நோய் ஏற்படுவதை நீங்கள் நிச்சயமாக தவிர்க்கலாம்.

0 Comments:

Post a Comment