ஆஸ்டியோபோரோசிஸ் என்பது நம்முடைய எலும்புகளை வலுவிழக்க செய்து அடிக்கடி ஃபிராக்ச்சர் ஏற்படுவதற்கான சாத்தியங்களை அதிகப்படுத்தும் ஒரு நிலையாகும். இது குறிப்பாக இடுப்பு, முதுகெலும்பு மற்றும் மணிக்கட்டு பகுதியில் ஏற்படுகிறது. வயது, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக ஏற்படும் எலும்பு இழப்பின் விளைவாக இந்த பிரச்சனை உருவாகிறது.
போதுமான அளவு கால்சியம், வைட்டமின் D எடுத்துக் கொள்ளாதது மற்றும் உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பது ஆகியவை ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். இந்த நோயை தவிர்ப்பதற்கு வழக்கமான முறையில் எலும்பு அடர்த்தி சோதனைகளை செய்து பார்ப்பது அவசியம்.
கூடுதலாக கால்சியம் மற்றும் வைட்டமின் D நிறைந்த உணவு மற்றும் அன்றாட உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வலுவான எலும்புகளை பெறுவதன் மூலமாக ஃபிராக்ச்சர் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கலாம்.
ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுப்பதற்கும், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உங்கள் டயட்டில் என்னென்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
கால்சியம் : ஒரு நாளைக்கு 1000 முதல் 1200 மில்லி கிராம் கால்சியம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். பால், தயிர், சீஸ், பச்சை காய்கறிகள், பாதாம் பால், சோயா பால், டோஃபு போன்றவற்றில் கால்சியம் அதிகமாக உள்ளது.
வைட்டமின் D : இந்த வைட்டமின் கால்சியம் உறிஞ்சப்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. போதுமான அளவு வைட்டமின் D இல்லாவிட்டால் நம் உடலில் உள்ள கால்சியத்தை அதனால் திறம்பட பயன்படுத்த இயலாது. கொழுப்பு நிறைந்த மீன்கள் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் D காணப்படுகிறது.
மெக்னீசியம் : எலும்பின் அமைப்பு மற்றும் கால்சியம் சத்தை செயல்படுத்துவதற்கு மெக்னீசியம் அவசியம். நட்ஸ், விதைகள், பீன்ஸ் வகைகள், கீரைகள் மற்றும் முழு தானியங்களில் மெக்னீசியம் சத்து காணப்படுகிறது.
வைட்டமின் K : கால்சியத்தை எலும்புகளோடு பிணைப்பதற்கும், எலும்பு உருவாக்கத்திற்கும் இந்த வைட்டமின் அவசியம். ப்ரோக்கோலி, கீரை மற்றும் பால் சார்ந்த பொருட்களில் வைட்டமின் K உள்ளது.
புரோட்டீன் : எலும்பு சேதங்களில் இருந்து தன்னை சரி செய்து கொள்வதற்கும், எலும்பு வலுவாக இருப்பதற்கும் அத்தியாவசியமான புரோட்டீன் எலும்பின் அமைப்பில் 50 சதவீதம் காணப்படுகிறது. சிக்கன், மீன், முட்டைகள், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் புரோட்டீனின் சிறந்த மூலமாக கருதப்படுகிறது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்: வீக்க எதிர்ப்பு பண்புகள் நிறைந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எலும்பு அடர்த்தியை அதிகரிப்பதற்கு உதவுகிறது. கொழுப்பு நிறைந்த மீன்கள், ஆளி விதைகள், சியா விதைகள் மற்றும் வால்நட்டுகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக காணப்படுகிறது.
பொட்டாசியம் : இந்த ஊட்டச்சத்து எலும்புகளை அரிக்கும் அமிலங்களை சமநிலைப்படுத்தி, எலும்புகளில் கால்சியம் தக்கவைக்கப்படுவதற்கு உதவுகிறது. வாழைப்பழங்கள், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, அவகாடோ மற்றும் தக்காளிகளில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
No comments:
Post a Comment