இளம் வயதினரிடையே பெருங்குடல் புற்றுநோயானது ஆபத்தான விகிதத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால் எளிய உணவு மாற்றங்கள் மூலம் இதை மாற்ற முடியும் என்று புதிய ஆய்வு கூறுகிறது. ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் இந்த ஆராய்ச்சி, சிறந்த உணவுப் பழக்கம் பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட செரிமானப் புற்றுநோய்களின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் எனக் கூறுகிறது.
பெருங்குடல் புற்றுநோய்களில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் 54 வயது மற்றும் அதை விட இள வயதினருக்கு ஏற்படுகிறது. இது 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விகிதத்தை விட இருமடங்காகும். இந்த அதிகரிப்பு தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் இதில் உணவுமுறை ஒரு முக்கிய பங்கு வகிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் சக்தி
நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான நிறைவுறா கொழுப்புகள் நிறைந்த உணவுகள் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை 15 சதவிகிதம் குறைக்கும் என்று ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்புகள், தினசரி உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.
“அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை ஊக்குவிக்கின்றன. இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது” என்று ஃபிளிண்டர்ஸ் ஹெல்த் அண்ட் மெடிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் உள்ள ஊட்டச்சத்து தொற்றுநோயியல் நிபுணர் யோஹன்னஸ் மெலகு கூறுகிறார். அதேப்போல் ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் சேர்ப்பதோடு சர்க்கரை மற்றும் மதுபான உட்கொள்ளலைக் குறைப்பதும் முக்கியமானது.
ஆரோக்கியமற்ற உணவுகள் ஆபத்தை அதிகரிக்கும்
இதற்கு நேர்மாறாக, சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரை பானங்கள் மற்றும் ஆல்கஹால் ஆகியவை பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை 14 சதவிகிதம் அதிகரிக்கின்றன.
அதிக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் முழு தானியங்களை உட்கொள்பவர்கள் பெருங்குடல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை 17 சதவீதம் குறைவாக அனுபவித்தனர். இது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் பாதுகாப்பு விளைவை எடுத்துக்காட்டுகிறது.
பெருங்குடல், மலக்குடல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களை உள்ளடக்கிய இரைப்பை குடல் புற்றுநோய்கள், உலகளவில் 4 புற்றுநோய்களில் ஒன்றாகவும் மற்றும் 3 இல் 1 புற்றுநோய் இறப்புகளுக்கும் காரணமாக இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆபத்தான விஷயம் என்னவென்றால், 50 வயதிற்குட்பட்டவர்களில் செரிமான புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
செரிமான புற்றுநோய் விகிதங்கள், குறிப்பாக இளைய மக்களிடையே உயர்ந்து வருவதால் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை இந்தக் கண்டுபிடிப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மேலும் செயலூக்கமான ஊட்டச்சத்தின் மூலம் செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், செயல்படவும் சரியான நேரம் வந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நார்ச்சத்து நிறைந்த மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சர்க்கரை பானங்களைக் கட்டுப்படுத்துவது நீண்ட கால ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.
No comments:
Post a Comment