இன்றைய நவீன காலக்கட்டத்தில் காற்று மாசுபாடு என்பது மிக முக்கியமான சுகாதார அபாயங்களில் ஒன்றாகும். மாசுபட்ட காற்று ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இது கடுமையான நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. காற்று மாசுபாடு நுரையீரல் மற்றும் சுவாசத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடல் ஆரோக்கியத்தில் காற்று மாசுபாடு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அவை மனநலனில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியுமா?
ஆம், காற்று மாசுபாட்டின் விளைவுகளைக் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வில், மனநலத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது உங்கள் மனநிலையை மாற்றுகிறது மற்றும் மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
இது தவிர மனச்சோர்வு, டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீங்கள் ஏற்கனவே இந்தப் பிரச்சனைகளுக்கு ஆளாகியிருந்தால், காற்று மாசுபாடு அவற்றை மோசமாக்கும். மாசுபடுத்திகள் மற்றும் அசுத்தமான காற்றை தொடர்ந்து வெளிப்படுத்துவது மன அழுத்த ஹார்மோன்களின் வெளியீட்டை அதிகரிக்கிறது. இது மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், பல வகையான உடல் உபாதைகளுக்கு மக்கள் பலியாகி வருகின்றனர். இதுமட்டுமின்றி, அதிகரித்து வரும் மாசுபாடு நமது உடல் ஆரோக்கியத்தில் மட்டுமின்றி, மனநலத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சுற்றுச்சூழலில் உள்ள சிறிய மாசுபடுத்திகள் இரத்த ஓட்டத்தில் நுழைந்து பின்னர் மூளையை அடையலாம். இது வீக்கத்தையும், ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸையும் ஏற்படுத்துகிறது. இது அறிவாற்றல் வீழ்ச்சி மற்றும் மனநல கோளாறுகளின் அபாயத்துடன் தொடர்புடையது. இது தவிர, அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அமைதியின்மை பிரச்சனையையும் ஏற்படுத்தும்.
மேலும், காற்று மாசுபாடு ஆரம்பகால வாழ்க்கையில் மூளையின் வளர்ச்சியை பாதிக்கிறது. இது குறித்து நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில், சுற்றுச்சூழல் மற்றும் வளிமண்டல மாசுபாட்டின் வெளிப்பாட்டின் மூலம் நரம்பியல் வளர்ச்சி எதிர்மறையாக பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. காற்று மாசுபாட்டால் வெளிப்படும் குழந்தைகளுக்கு மன அழுத்தம், பதற்றம், நடத்தையில் பிரச்சனைகள், தூக்கக் கலக்கம் மற்றும் ADHD போன்ற அறிகுறிகள் அதிக அளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
காற்று மாசுபாட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளை குறைப்பதற்கான உதவிக் குறிப்புகள்:
1. காற்றின் தரத்தைக் கண்காணிக்க, ஏர் பொல்லுஷன் மானிட்டர்களை பயன்படுத்தவும் அல்லது ஆன்லைனில் ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ்களைப் பார்க்கவும். காற்று மாசுபாடு அளவு அதிகமாக உள்ள நாட்கள் மற்றும் இடங்களில் வெளியில் செல்வதையோ அல்லது உடற்பயிற்சி செய்வதையோ தவிர்க்கவும்.
2. தீங்கு விளைவிக்கக்கூடிய காற்று மாசுபாட்டின் வெளிப்பாட்டைக் குறைக்க N95 மாஸ்க்குகள் அல்லது சுவாசக் கருவிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தவும்.
3. குறிப்பாக காற்று மாசுபாடு அளவு அதிகமாக இருக்கும் நாட்களில் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருங்கள். ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைப்பதன் மூலம் வீட்டின் உட்புற காற்று மாசுபாட்டைக் குறைக்க முடியும்.
4. தினமும் உடற்பயிற்சி, சீரான உணவு மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய சில உடல்நல பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகின்றன.
5. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இது காற்று மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகளை உங்கள் உடல் சமாளிக்க உதவுகிறது.
6. மன அழுத்தமானது காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய சில உடல்நல பிரச்சனைகளை அதிகரிக்கலாம். எனவே மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் அல்லது யோகா போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்.
No comments:
Post a Comment