ஆழ்ந்த தூக்கம் ஒரு நபரின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆனால் நாம் செய்யும் சில சிறிய தவறுகள் நம் தூக்கத்தை கெடுக்கும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரங்களில் படுக்க செல்வது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து எபிடோர்மியல் மற்றும் கம்யூனிட்டி ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் 40 முதல் 79 வயதுக்குட்பட்ட 72,269 பேரை ஆய்வு செய்தனர். அவர்கள் ஒரு வாரத்திற்கு அவர்களின் தூக்க முறைகளைக் கண்காணிக்க ஆக்ட்டிவிட்டி டிராக்கரையும் அணிந்தனர். இந்த டேட்டாவை விரிவாக ஆராய்ந்த பிறகு, வெவ்வேறு நேரங்களில் தூங்க செல்வது இதய நோய்க்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். சுமார் எட்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் சிலர் பக்கவாதம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் சிலர் தொடர்ந்து வெவ்வேறு நேரங்களில் படுக்கைக்குச் சென்றனர். எனவே ஒரே நேரத்தில் தூங்குபவர்களை விட இவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்பவர்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்றும்,18 முதல் 64 வயது வரை உள்ளவர்கள் 7 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இழந்த தூக்கத்தை ஈடுசெய்ய வெவ்வேறு நேரங்களில் தூங்குவது பயனற்றது:
தூக்கம் வராமல் இருக்கும் போது, சிலர் பகல் மற்றும் மதியம் தூங்க முயற்சிப்பார்கள். ஆனால் இவை எதுவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுவதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வதன் மூலம் மட்டுமே இதய நோய் அபாயத்தைத் தடுக்க முடியும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வில் முக்கியமான தகவல்கள் கிடைத்தாலும், அதில் சில வரம்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆய்வில் பங்கேற்றவர்களிடமிருந்து ஒரு வார தூக்க டேட்டா மட்டுமே சேகரிக்கப்பட்டது. இந்த ஆய்வில் தூக்கத்தை துல்லியமாக கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் முடியவில்லை.
அதே சமயம், தூக்கம் ஒருவரின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வில் வெளிப்படுத்த முடிந்தது. தூங்கும் நேரம் தொடர்பான ஆய்வுகள் ஏற்கனவே விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆய்வு வெவ்வேறு நேரங்களில் தூங்குவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விவரிக்கிறது. இதய ஆரோக்கியத்தை மதிக்கும் மக்கள் சரியான நேரத்தில் படுக்கைக்குச் செல்வதற்கும், எழுந்திருப்பதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது. மேலும், தூக்கத்துடன் உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment