அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகள் வரையான வகுப்பு ஆசிரியர்களையும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்; தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விவரங்கள் பயிற்சியாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் அனைத்து மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த விழிப்புணர்வு தகவல்கள், மனநலன் மற்றும் வாழ்வியல் திறன் செயல்பாடுகள் முழுமையாக சென்றடைய வேண்டும். இதற்காக உயர்கல்வி வழிகாட்டி திட்டத்துக்கு தற்போது கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியருடன், கூடுதலாக 9 முதல் 12-ம் வகுப்புகள் வரை உள்ள பிரிவு வரையான வகுப்பு ஆசிரியர்களையும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
மாணவர்கள் உயர்கல்வியை தொடருவதை ஊக்குவிக்கும் விதமாக என்னென்ன உயர்கல்வி படிக்கலாம், அதற்கு என்ன பாடங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை அதற்கென ஒதுக்கப்பட்ட பாடவேளையில் எடுத்துரைக்க வேண்டும். மேலும், தினமும் காலை வணக்க கூட்டத்தில் மனநலன் மற்றும் வாழ்வியல் திறன்சார்ந்த கருத்துகளை மாணவர்கள் சிந்திக்கும் வகையில் தலைமை ஆசிரியர்கள் பகிர வேண்டும். உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு, மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் மதிப்பீடு ஆகியவை 3 மாதங்களுக்கு ஒரு முறை வகுப்புத் தேர்வாக நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment