பள்ளிக் கல்வித்துறையில் 47,013 பணியிடங்கள் புதிய நியமனமா? ஒழிக்கப்படப்போகும் 5418 பணியிடங்களில் ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை?
பள்ளிக் கல்வித்துறையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆசியர்கள், அலுவலகப் பணியாளர்கள் தொடங்கி இரவுக் காவலர் வரையிலான பல்வேறு பணியிடங்கள் அந்தந்த காலகட்டத் தேவையை முன்வைத்து 1997 முதல் தற்காலிகமாக உருவாக்கப்பட்டன.
இவ்வாறு 2022 வரை மொத்தமாக 52,578 பணியிடங்கள் தேவை கருதி தற்காலிகமாக உருவாக்கப்பட்டாலும், அதன் தேவை தொடரும் வரை அதில் பணியாற்றுவோருக்கு அரசின் முழுமையான காலமுறை ஊதியம் வழங்கப்படும். சில நேரங்களில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு பின்னர் காலமுறை ஊதியமாக மாற்றப்பட்டதும் உண்டு.
ஒவ்வொரு ஆண்டும் இப்பணியிடங்கள் இனியும் தேவைதானா என்பதைப் பொறுத்து அப்பணியிடத்திற்கு கால நீட்டிப்பு வழங்கப்படும். தேவையில்லை எனில் அப்பணியிடத்தை அரசு இரத்து செய்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரே அப்பணியிடத்திற்கான ஊதியம் ஒதுக்கப்படும். ஒப்புதல் காலதாமதமாகும் போது ஊதியம் உரிய காலத்தில் பெற இயலாத சூழலும் ஏற்படுவதுண்டு.
இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் தொடர் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்த 52,578 பணியிடங்களில் 47,013 நிரந்தரமாகத் தேவைப்படும் பணியிடங்கள்தான் என்று இது சார்ந்து ஆராய 2022ல் அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளித்தது. அதன்படி, இனி இந்த 47,013 பணியிடங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஒப்புதல் நீட்டிப்பு செய்யவேண்டிய தேவையைத் தவிர்த்து அவற்றை நிரந்தரமாகத் தேவைப்படும் பணியிடங்களாக அரசாணை (ப.க.து. G.O.9 நாள் 27.01.2025) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருக்க இதே குழுவின் ஆய்வு முடிவின்படி 3035 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உட்பட 5418 பணியிடங்களுக்கு மூடுவிழா அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களில் பணிபுரிந்து வருவோர் ஓய்வு பெற்றபின் மீண்டும் அவை நிரப்பப்படாது, அப்பணியிடமே ஒழிக்கப்பட்டுவிடும்.
எனவே, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 3035 தொழிற்கல்வி ஆசிரியர்களின் பணியிடங்கள் இனி நிரப்பப்படப் போவதேயில்லை என்பதால், இனி அந்தப் பாடப் பிரிவுகளே பள்ளிகளிலிருந்து தூக்கப்படப் போகிறது என்பதோடே அப்பணியிடத்திற்கான தனிப்பட்ட சிறப்புத் தகுதியோடே பல ஆண்டுகளாகக் காத்திருப்போரின் வேலைவாய்ப்பும் பறிபோயுள்ளது.
மொத்தத்தில் இந்நடவடிக்கை என்பது 47,013 பணியிடங்களை நிரந்தரமாக்கும் அதிரடி அறிவிப்பாக மட்டுமே ஊடகங்களில் ஊதிப் பெரிதாக்கப்பட்டாலும், 5418 பணியிடங்கள் ஒழிக்கப்பட்டதன் வழி 5418 வேலைவாய்ப்புகள் ஒழிக்கப்பட்டதோடே, குறிப்பாக 3035 தொழிற்கல்வி ஆசிரியர் (Vocational Group) பணியிடங்கள் ஒழித்துக்கட்டப்பட்டதோடே தொழிற்கல்வி சார்ந்த பள்ளி மாணவர்களின் விருப்பத்திற்கும் தேவைக்கும் முடிவுகட்டப்பட்டுள்ள செய்தி முழுமையாகத் தவிர்க்கப்பட்டுள்ளது என்பதே விவாதத்திற்குரிய விடயமாகும்.
✍🏼செல்வ.ரஞ்சித் குமார்
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment