Blockages In Heart: இதயத்தில் அடைப்புகள் உள்ளதை வெளிப்படுத்தும் சில முக்கிய அறிகுறிகள்..! - Agri Info

Adding Green to your Life

January 18, 2025

Blockages In Heart: இதயத்தில் அடைப்புகள் உள்ளதை வெளிப்படுத்தும் சில முக்கிய அறிகுறிகள்..!

 

Blockages In Heart | மார்பு இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வு, மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது உடற்பயிற்சியின் போது தாடை அல்லது கைகளில் குறிப்பாக தோள்பட்டை பகுதிகளில் வலி உள்ளிட்டவை ஏற்பட்டால் உடலில் இருக்கும் ஒரு சிக்கலை இவை குறிக்கலாம்.

தற்போதைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே இதய ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானது. இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளின் அறிகுறிகளை சரியாக புரிந்து கொள்வது நம்முடைய அல்லது நமக்கு நெருக்கமானவர்களின் உயிரை காக்கக் கூடும். இதயத்தில் அடைப்புகள் உள்ளதை வெளிப்படுத்தும் சில முக்கிய அறிகுறிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

பிளட் பேனல்ஸ் மற்றும் எலக்ட்ரோ கார்டியோகிராம்கள் (EKGs) போன்ற மேம்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் இதய பாதிப்புகளை கண்டறிய தேவைப்படும் அவசியமான நோய் அறிதல் கருவிகளாக இருந்தாலும், இதயத்தில் ஏதேனும் அடைப்புகள் உள்ளதா? என்பதை கண்டறிய நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய பரிசோதனைகள் உள்ளன. இதய கோளாறு இருப்பதற்கான அறிகுறிகள் உங்கள் உடலில் இருக்கிறதா என்பதை எவ்வாறு கண்டறிவது என்பதை பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெர்மி விளக்கி உள்ளார்.


உங்கள் உடல் என்ன சொல்கிறது என்பதை கவனிப்பதன் முக்கியத்துவம்...

  • நம் உடலில் ஏதாவது பாதிப்புகள் இருக்கும்போது உடல் பெரும்பாலும் சிக்னல்களை வெளிப்படுத்துகிறது. எனவே இந்த அறிகுறிகளை கூர்ந்து கவனித்து பாதிப்புகளை வெளிப்படுத்தும் சிக்னல் தான் இது என்பதை புரிந்து கொள்வது இதயத்தில் இருக்கும் அடைப்புகளை கண்டறிவதற்கான சாத்தியமான முதல் படியாகும்.
  • உடல் செயல்பாடுகளின் போதோ அல்லது உடல் உழைப்பின் போதோ ​​இதயத்திற்கு அதிக ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் தேவைப்படுகிறது. உதாரணமாக அடைப்பு இருந்தால், அடைப்புக்குக் கீழே உள்ள பகுதி உரிய ரத்த விநியோகமின்றி பாதிக்கப்படும். இது அசௌகரிய உணர்வு ஏற்பட அல்லது வலி ஏற்பட வழிவகுக்கும். அதேநேரம் நீங்கள் ஓய்வெடுக்கும் போது, ​​இதயத்திற்கான ஆக்ஸிஜன் தேவை குறைகிறது. மேலும் இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்கியபோது தோன்றிய அறிகுறிகள் தற்காலிகமாக மறைந்து போகக்கூடும்.
  • மார்பு இறுக்கமாக இருப்பது போன்ற உணர்வு, மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது உடற்பயிற்சியின் போது தாடை அல்லது கைகளில் குறிப்பாக தோள்பட்டை பகுதிகளில் வலி உள்ளிட்டவை ஏற்பட்டால் உடலில் இருக்கும் ஒரு சிக்கலை இவை குறிக்கலாம். எனிமும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த அறிகுறிகள் ஓய்வெடுத்த பிறகும் நீடிக்கிறதா அல்லது குறைகிறதா என்பது தான். இந்த அறிகுறிகள் ஏற்பட காரணம் தமனிகளில் (arteries) ஏற்படும் அடைப்பு இதயத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவது தான்.

    அறிகுறிகள் இல்லாதது இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துமா?

    மேற்கண்ட அறிகுறிகள் இருப்பதால் மட்டுமே உங்கள் தமனிகளில் அடைப்புகள் இருக்கிறது என்று அர்த்தமில்லை. ஏனென்றால் பாதிப்புகள் கண்டறியப்பட்ட சிலருக்கு குறிப்பிடத்தக்க அறிகுறிகள் ஏதும் இல்லாமல் இருந்த போதும் அடைப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த நிலை "silent ischaemia" என்று அழைக்கப்படுகிறது. எனவே தான் வயதிற்கு பின்னர் அனைவருமே, குறிப்பாக அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், புகைப்பழக்கம் கொண்டவர்கள், நீரிழிவு நோய் அல்லது இதய நோயின் குடும்ப வரலாறு போன்ற ஆபத்து காரணிகளை கொண்டவர்கள் வழக்கமான அடிப்படையில் சுகாதார பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


    வீட்டில் செய்யக்கூடிய எளிய சோதனை

    இதயத்தில் இருக்கும் அடைப்பை கண்டறிய வீட்டிலேயே துல்லியமான முடிவை தர கூடிய சோதனை எதுவும் இல்லை என்றாலும், நம்முடைய அன்றாட நடவடிக்கைகளின் போது உடலில் ஏற்படும் எதிர்வினைகளைக் கவனிப்பது நமக்கு மிக முக்கியம். நீங்கள் கவனிக்க வேண்டியவை குறித்து பார்க்கலாம்.

    மார்பு அசௌகரியம்

    உடற்பயிற்சியின் போது மார்பில் இறுக்கம், அழுத்தம் அல்லது வலி போன்ற எந்தவொரு உணர்வையும் நாம் முக்கியமானதாக கருத வேண்டும். குறிப்பாக இந்த அறிகுறிகள் நாம் ஓய்வெடுக்கும் போது குறைந்துவிட்டால் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.

    வலி பரவல்

    தாடை, இடது கை அல்லது முதுகு வரை வலி பரவுவது இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதை குறிக்கலாம்.

    மூச்சுத்திணறல்

    உங்களின் அன்றாட செயல்பாடுகளின்போது வழக்கத்திற்கு மாறாக மூச்சுத்திணறல் ஏற்படுவது உங்கள் இதயம் ரத்தத்தை திறம்பட பம்ப் செய்ய சிரமப்படுவதை குறிக்கலாம்.

    சோர்வு

    மார்பு வலி இல்லாவிட்டாலும், தொடர்ச்சியாக அல்லது அசாதாரண சோர்வு உங்களுக்கு நீடிக்கிறது என்றால் அது இதய பிரச்சனைகள் இருப்பதை குறிக்கும் நுட்பமான அறிகுறியாக இருக்கலாம்.
    மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதை நீங்கள் கவனித்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். சிகிச்சையை தாமதப்படுத்துவது மாரடைப்பு உள்ளிட்ட கடும் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். உங்கள் இதயம் மற்றும் தமனிகளின் நிலையை மதிப்பிட EKG, மன அழுத்த சோதனை அல்லது இமேஜிங் ஆய்வுகள் போன்ற சோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்.

    இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க சில எளிய வழிமுறைகள்...


    பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் லீன் ப்ரோட்டீனை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதேநேரம் நிறைவுற்ற கொழுப்புகள், டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகளை எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்துங்கள்.

    வழக்கமான அடிப்படையில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்கள் இதயத்தை பலப்படுத்துகிறது மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் செயல்பாட்டில் ஈடுபடுங்கள்.

    நாள்பட்ட மன அழுத்தம் இதயத்தைப் பாதிக்கலாம். தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் அல்லது யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    புகைப்பழக்கம் ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது மற்றும் அடைப்புகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இப்பழக்கம் இருந்தால் நிறுத்துவது உங்கள் இதயத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.

    சீரான இடைவெளியில் மேற்கொள்ளப்படும் வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் உயர் ரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் போன்ற ஆபத்து காரணிகளை முன்கூட்டியே கண்டறிய உதவும்.


    (பொறுப்புத் துறப்பு: இங்கு வழங்கப்பட்டவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே; மருத்துவ ஆலோசனை இல்லை. இதுதொடர்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். News18Tamilnadu இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

No comments:

Post a Comment