கடந்த 2022 இல் மட்டும் இந்த புற்றுநோயால் சுமார் 3.5 லட்சம் இறப்புகள் பதிவாகியுள்ளன. கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கருப்பை வாயின் செல்களில் உருவாகிறது. கருப்பையின் கீழ் பகுதியில் பிறப்புறுப்புடன் இது இணைகிறது. இந்த புற்றுநோய் குறித்து பெரும் அச்சுறுத்தல் இருந்தாலும், ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கலாம் அல்லது திறம்பட சிகிச்சையளிக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதிக ஆபத்துள்ள ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தான், பெண்களின் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பொதுவான காரணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்பது, பாலியல் தொடர்பு மூலம் பரவும் ஒரு பொதுவான தொற்று ஆகும். தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, உலகளவில் 70% கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களுக்கு எச்பிவி 16 மற்றும் எச்பிவி 18 ஆகியவை அதிக ஆபத்தை விளைவிப்பதாக தெரிவித்துள்ளது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள் பெரும்பாலும் புலப்படுவதில்லை. இதனால் அதைக் கண்டறிவது பெண்களுக்கு சவாலான விஷயமாக இருக்கிறது. எனவே, பெண்கள் இந்த புற்றுநோய் பற்றி அறிந்திருக்க வேண்டும் மற்றும் அதன் அபாயத்தைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
ஆரம்ப அறிகுறிகளைப் புறக்கணிக்க வேண்டாம்: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள் பெரும்பாலும் வெளிப்படையாக இல்லை என்றாலும், அசாதாரண ரத்தப்போக்கு (குறிப்பாக உடலுறவுக்குப் பிறகு), தீவிர இடுப்பு வலி அல்லது அசாதாரண வெளியேற்றம் போன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
வழக்கமான பரிசோதனை: பாப் ஸ்மியர் சோதனைகள் அல்லது எச்பிவி சோதனைகள் போன்ற வழக்கமான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகள், கருப்பை வாயில் அசாதாரண சூழல் அல்லது அசாதாரண செல் செயல்பாடுகளைக் கண்டறிய உதவும். குறிப்பாக, 21 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படுகிறது. இதன் வழக்கமான பரிசோதனைகள், புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியவும், உயிரைக் காக்கவும் உதவுகிறது.
எச்பிவி தான் முக்கிய காரணம்: பெரும்பாலான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வழக்குகள், ஹீயூமன் பாப்பிலோமா வைரஸால் (HPV) ஏற்படுகின்றன. இது பாலியல் தொடர்புகளின் போது பரவும் ஒரு பொதுவான தொற்று ஆகும். அனைத்து எச்பிவி தொற்றுகளும் புற்றுநோய்க்கு வழிவகுக்காது என்றாலும், சில தொடர்ச்சியான தொற்றுகள் இதன் ஆபத்தை அதிகரிக்கும். எனவே, எச்பிவி தடுப்பூசியை போட்டுக் கொள்வது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும்.
வாழ்க்கை முறை தேர்வுகள்: வழக்கமான வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஒருவரது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதும் அடங்கும். மேலும், புகைப்பிடிப்பதை விட்டுவிட்டு பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்வதும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
No comments:
Post a Comment