இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். மேலும், 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் 80.33% ஆகும். இதை தொடர்ந்து, தொழில்துறை அமைப்பான அசோசம் நடத்திய கணக்கெடுப்பின்படி, தொடக்க மற்றும் நடுநிலைக் கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பின்பற்றப்படும் கல்வி முறைகள் பற்றி இப்பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
அதாவது, இந்தியாவில் State Board, CBSE, ICSE, NIOS மற்றும் AISSCE என ஐந்து முக்கிய கல்வி வாரியங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பாடத்திட்டங்கள், கற்றல் முறைகள், மதிப்பீட்டு அளவுகோல்கள் மற்றும் தேர்வுகளை நடத்துவதற்கான வாரியங்களை கொண்டுள்ளன. இருப்பினும் தமிழகத்தில் 3 கல்வி வாரியங்கள் மட்டுமே பரவலாக அறியப்படுகிறது.
அதில் முதலாவதாக, “மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ” ஆகும். இது, மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. மேலும், இது பொது மற்றும் தனியார் பள்ளிகளுக்கிடையே தேசிய அளவில் ஒரே கல்வி தரத்தை வழங்கி வருகிறது. இந்த வாரியம் மூலம் தேசிய அளவில் ஒரே பாடத்திட்டம் கற்பிக்கப்படுகிறது.
இரண்டாவதாக, “மாநில கல்வி வாரியம் (State Board)” ஆனது மாநில அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளையும் நிர்வகிக்கிறது. இம்முறையில் மாநில அரசால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் கற்பிக்கப்படுகிறது. இறுதியாக, “இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் வாரியம்(ICSE)” ஆனது அதன் சர்வதேச கல்வித் தரநிலைகள் மற்றும் விரிவான பாடத்திட்டத்திற்கு பெயர் பெற்றது. மேலும், ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கும் ICSE வாரியம், மாணவர்களுக்கு பரந்த அளவிலான கல்வி மற்றும் தொழில்முறை நோக்கங்களை கற்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி வாரியங்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் அதற்கென சொந்த கல்வி வாரியத்தைக் கொண்டு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான தேர்வுத் தரங்களை தீர்மானிக்கிறது.
No comments:
Post a Comment