பள்ளி மாணவர்களின் உயர் கல்விக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக மாவட்டம்தோறும் வழிகாட்டி மையங்களை அமைக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி பயிற்சி முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விவரங்கள், விழிப்புணர்வு தகவல்கள் விளக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேக வழிகாட்டி மையங்களை தொடங்க தற்போது பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி மாவட்டங்களின் எல்லை அளவை பொறுத்து முதல்கட்டமாக 2 அல்லது 3 வழிகாட்டி மையங்கள் அமைக்கப்பட உள்ளன இவற்றில் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க உதவுதல், அதற்கான பயிற்சிகளுக்கு வழிகாட்டுதல், பிளஸ் 2 முடித்து உயர் கல்வியில் சேருவற்கான ஆலோசனைகள், அறிவுறுத்தல்கள் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஆங்காங்கே நடைபெறும் வன்முறை சம்பவங்களை தவிர்ப்பதற்காக நீதி போதனை வகுப்புகளை கட்டாயமாக்குதல் உள்ளிட்ட அறிவிப்புகளை துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நாளை (ஏப்.25) வெளியிட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
0 Comments:
Post a Comment