ரூ.2000 வரையிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு 18% வரை ஜிஎஸ்டி விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி 54ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், கூகுள் பே, போன் பே போன்ற இடைத்தரக நிறுவனங்கள் மூலம் ரூ.2000 வரை மக்கள் மேற்கொள்ளும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு அந்த இடைத்தரகர்களிடம் (கூகுள் பே, போன் பே போன்றவை) ஜிஎஸ்டி வரியை விதிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் நடைபெறும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில், ரூ.2000 கீழ் உள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தான் அதிகம் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் தான் வரும் ஜிஎஸ்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
அப்படி வரியை விதித்தால், வாடிக்கையாளர்களிடமும் இந்த நிறுவனங்கள் வரி வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மொபைல் ரீச்சார்ஜ், மற்ற பில் கட்டணங்களுக்கு வரியை இந்த நிறுவனங்கள் வசூலிக்கிறது. இந்த வரி ஒருவேளை விதிக்கப்பட்டால், அதைப் பொறுத்தே அந்த நிறுவனங்கள் முடிவெடுக்கலாம் என கூறப்படுகிறது.
ஏன் இந்த வரி?:
ஜிஎஸ்டி பிட்மென்ட் கமிட்டியின் பரிந்துரைகள் படி, இந்த நிறுவனங்கள் இடைத்தரகர்களாகவே செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் வங்கிகள் கிடையாது. ஜிஎஸ்டி விதியின்படி, இடைத்தரகராக உள்ள நிறுவனங்களிடம் வரி விதிக்கப்படும். எனவே இந்த ஆண்டு முதல் ரூ.2000க்கு குறைவான பரிவர்த்தனைகளுக்கும் வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை ஏன் வரி இல்லை?:
மத்திய அரசு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மக்களிடம் ஊக்குவிக்க முயன்ற போது, இந்த நிறுவனங்களிடம், ரூ.2000 குறைவான பரிவர்த்தனை நடைபெற்றால் வரி இல்லை என தெரிவித்தது. இதனால், இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமும் வரியை வசூலிக்காமல் சேவை செய்து வந்தது. ஆனால் தற்போது நாட்டில் பெரும்பான்மையினர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதால், இந்த வரியை அமல்படுத்தப்போவதாக கூறப்படுகிறது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news