குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக 213 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) காலியாக உள்ள அரசுப் பணிகளுக்கு பல்வேறு நிலை தேர்வுகளை நடத்தி வருகிறது.
அந்தவகையில் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.
குரூப்-2 பணியில் தொழிலாளா் உதவி ஆய்வாளா், துணை வணிக வரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளா், சென்னை மாநகர காவல் தனிப் பிரிவு உதவியாளா் உள்பட 507 இடங்களும்
குரூப் 2 ’ஏ’ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நோ்முக உதவியாளா், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளா், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளா் என 48 துறைகளில் 1820 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.
இந்த பணிகளுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்றது.
தமிழக முழுவதிலும் இருந்து மொத்தமாக 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5.81 லட்சம் பேர் எழுதினர்.
இந்நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கூடுதலாக 213 சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி இன்று அறிவித்துள்ளது. இதன் மூலமாக தற்போது மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,540 ஆக அதிகரித்துள்ளது.
முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் இதில் வெற்றி பெறுபவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது.
ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 6, 244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.
குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வர்கள் 15-க்குள் கட்டணம் செலுத்த வேண்டும்
டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குரூப்-1 மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தேர்வர்கள், அனைத்து அசல் சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து செப்.16-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.200-ஐ செப்.15-ம் தேதிக்குள் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் அக்கட்டணத்தை செலுத்திய பின்னரே தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாவிட்டால், அத்தகைய விண்ணப்பதாரருக்கு மெயின் தேர்வெழுத விருப்பமில்லை எனக் கருதி அவர்களின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
இதுவரை சிறப்புத் தேர்வாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு, குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதோடு அடிப்படை கல்வித்தகுதியும் மாற்றப்பட்டு வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்) டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர் , கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. இதே அந்தஸ்துள்ள உதவி வனப்பாதுகாவலர் பணிக்கு குரூப்-1-ஏ தேர்வும், இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் பதவிக்கு குரூப்-1-பி தேர்வும், மாவட்ட கல்வி அதிகாரி பணிக்கு குரூப்-1-சி தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுகின்றன. இவை தவிர, குரூப்-1 அந்தஸ்துடைய தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு சிறப்புத் தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கு தொழிலாளர் சட்டம் தொடர்பான முதுகலை படிப்பு அல்லது பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தொழிலாளர் சட்டம் தொடர்பான டிப்ளமா அல்லது முதுகலை டிப்ளமா படித்திருக்க வேண்டும். அதேசமயம் குரூப்-1 தேர்வெழுத ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தாலே போதும்.இந்நிலையில், இதுவரை சிறப்புத் தேர்வாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு, குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலர் கொ.வீரராகவ ராவ் இன்று வெளியிட்டுள்ளார்.
இந்த அரசாணையின்படி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வுக்கு தற்போது நடைமுறையில் இருந்து வரும் அடிப்படை கல்வித் தகுதி (தொழிலாளர் நலன் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தொழிலாளர் நலன் டிப்ளமா படிப்பு) மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்படுவதால் இதற்கும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும்.
மேலும், முன்பு பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 30 ஆக இருந்தது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) வயது வரம்பு கிடையாது. ஆனால், தற்போது குரூப்-1 தேர்வுடன் இத்தேர்வு இணைக்கப்பட்டுள்ளதால் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு கட்டுப்பாடு இதற்கும் பொருந்தும். குரூப்-1 தேர்வில் வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 34 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வர்கள் வேண்டுகோள்: டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் கடந்த 2 ஆண்டுகளாக தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு இடம்பெற்றும் பின்னர் அதிலிருந்து நீக்கப்பட்டு தேர்வு நடத்தப்படவில்லை. இத்தேர்வை எதிர்பார்த்து தொழிலாளர் சட்டம் தொடர்பான முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்களும், தொழிலாளர் சட்டம் தொடர்பான டிப்ளமா படிப்பை படித்த பட்டதாரிகளும் படித்து வருகின்றனர். இந்நிலையில், இத்தேர்வு திடீரென குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்பட்டு வயது வரம்பும் கொண்டுவரப்பட்டிருப்பதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “உதவி ஆணையர் தேர்வை எதிர்பார்த்து கடந்த 2 ஆண்டுகளாக படித்து வருகிறோம். முன்பு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. தற்போது வயது வரம்பு 39 என நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் 39 வயது கடந்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது. தொழிலாளர் சட்டம் படித்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வயது வரம்பு தளர்வை குறைந்தபட்சம் ஒருமுறையாவது வழங்க வேண்டும். நாங்கள் எங்களுக்கு வேலை கேட்கவில்லை. வேலைக்கான தேர்வை எழுதுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என்றுதான் கேட்கிறோம். எனவே, எங்களின் நியாயமான கோரிக்கையை தொழிலாளர் நலத்துறை கனிவுடன் பரிசீலிக்க வேண்டுகிறோம்,” என்றனர்.