குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக 213 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) காலியாக உள்ள அரசுப் பணிகளுக்கு பல்வேறு நிலை தேர்வுகளை நடத்தி வருகிறது.
அந்தவகையில் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.
குரூப்-2 பணியில் தொழிலாளா் உதவி ஆய்வாளா், துணை வணிக வரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளா், சென்னை மாநகர காவல் தனிப் பிரிவு உதவியாளா் உள்பட 507 இடங்களும்
குரூப் 2 ’ஏ’ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நோ்முக உதவியாளா், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளா், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளா் என 48 துறைகளில் 1820 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.
இந்த பணிகளுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்றது.
தமிழக முழுவதிலும் இருந்து மொத்தமாக 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5.81 லட்சம் பேர் எழுதினர்.
இந்நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை கூடுதலாக 213 சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி இன்று அறிவித்துள்ளது. இதன் மூலமாக தற்போது மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,540 ஆக அதிகரித்துள்ளது.
முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் இதில் வெற்றி பெறுபவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news