இருமல், சளி, தலைவலி மற்றும் பலவற்றிற்கான வீட்டு மருந்தாகவும் கிராம்பு செயல்படுகிறது.
கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் மற்றும் பல மசாலாப் பொருட்கள் ஒவ்வொரு வீட்டு சமையலறையில் நிச்சம் இடம் பிடிக்கும் பொருட்கள். இந்த மசாலாப் பொருட்கள் நறுமணமுள்ளவையாகவும், நமது அன்றாட சமையலில் பரவலாகப் பயன்படுத்தபவையாகவும் உள்ளன. மேலும், இவை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்டும், பழங்காலத்திலிருந்தே பாரம்பரிய மருத்துவ நடைமுறையின் ஒரு பகுதியாகவும் இருந்து வருகின்றன.
இந்த மசாலா பொருட்களை நாம் சரியான அளவில் எடுத்துக் கொண்டால், நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பருவகால நோய்களைத் தடுக்கவும், உள்ளிருந்து நம்மை ஊட்டவும் உதவும்.
அந்த வகையில் கிராம்பு பல மருத்துவ மற்றும் ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஒரு நறுமண மூலிகையாக உள்ளது. இவற்றின் நன்மைகளை பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் வாழ்க்கை பயிற்சியாளருமான லூக் குடின்ஹோ தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்துள்ளார். அவற்றை நாங்கள் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
கிராம்பு தரும் ஆரோக்கிய நன்மைகள்
கிராம்பு மிகவும் பிரபலமான மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். இவை சமையலில் அதன் விரிவான பயன்பாடு தவிர, இருமல், சளி, தலைவலி மற்றும் பலவற்றிற்கான வீட்டு மருந்தாகவும் செயல்படுகிறது. இது சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்கும். அழற்சி எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, கார்மினேட்டிவ் மற்றும் வாயு எதிர்ப்பு பண்புகள் நிறைந்தும் காணப்படுகிறது.
“கிராம்பு (மற்றும் கிராம்பு எண்ணெய்) ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான ஆதாரங்களில் ஒன்றாகும். இது ஒரு கிருமி நாசினியாகவும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. குறிப்பாக பல்வலி மற்றும் வயிற்று வலியில் இருந்து பாதுகாக்கிறது.” என்று டாக்டர். அசுதோஷ் கௌதம் கூறியுள்ளார்.
“கிராம்புகளை சரியான அளவில் எடுத்துக் கொண்டால், நமது உடலில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். இந்த சூடான மற்றும் இனிப்பு மசாலாவில் நிக்ரிசின் உள்ளது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. மேலும் சர்க்கரையை தடுக்கிறது. அதோடு பல் வலி, வாய் துர்நாற்றம், அஜீரணம், குமட்டல், வாந்தி உள்ளிட்ட பலவற்றையும் தடுக்க இது உதவுகிறது” என ஊட்டச்சத்து நிபுணர் லூக் குடின்ஹோ அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கிராம்புகளை எவ்வாறு உட்கொள்ள வேண்டும்? (மருந்தளவு)
“கிராம்புகளை மெல்லவோ அல்லது விழுங்கவோ கூடாது. அதற்கு பதிலாக உங்களால் முடிந்தவரை ஒரு கிராம்பு அல்லது இரண்டை எடுத்து உறிஞ்சவும்.
இது பெரும்பாலான மக்களுக்கு சரியாக வேலை செய்யும். ஆனால் சிலருக்கு அது வேலை செய்யாமல் போகலாம். உங்களுக்கு பொருத்தமாக இருந்தால் அதை முயற்சி செய்யுங்கள், இல்லையென்றால் வேண்டாம்,” என்று லூக் குடின்ஹோ விளக்கியுள்ளார்.