80/60, 90/60 போன்றே பிரஷர் எப்போதும் இருந்தால் அதிர்ச்சியடையத் தேவையில்லை என்றும் அது நார்மல்தான் என்றும் மருத்துவர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு ஏற்படும் இயல்பான சந்தேகங்களைத் தனது ஃபேஸ்புக் பதிவுகள் மூலம் தீர்த்து வருகிறார் மருத்துவர் ஹரிஹரன். தற்போது பிபி குறித்து நிறைய கருத்துகள், சந்தேகங்கள் நிலவி வரும் சூழலில் லோ பிபி குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஃபேஸ்புக் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:
அமெரிக்கப் பெண்களிடம் சென்ற வருடம் செய்த ஆராய்ச்சியில், பெண்களின் சிஸ்டாலிக் பிரஷர் 100க்கு கீழ் இருப்பவர்களை விட 100க்கு மேல் இருப்பவர்களுக்கு இதய வியாதி மற்றும் ஸ்ட்ரோக் வர அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறது. (குறிப்பு-ஒருவரின் பிரஷர் 120/80 என்றால், மேலே உள்ள 120 என்பது சிஸ்டாலிக் எனப்படும்).
இன்றைக்கு யாரைக் கேட்டாலும், "எனக்கு லோ பிரஷர் இருக்கு, கிறுகிறுனு வந்துடும்" என ஃபேஷனாகச் சொல்வார்கள். அவர்கள் புரிதலே தவறு. என் கிளினிக்கில் கடந்த 16 வருடமாக நான் பார்த்த பெண்களில், முக்கால்வாசி பேருக்கு 90/60, 80/60 தான் இருந்தது. கிறுகிறுப்பிற்கு அனீமியா போன்ற ஆயிரம் காரணங்கள் பெண்களுக்கு உண்டு.
இவ்வாறு மருத்துவர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.