ஒரு நாளின் பெரும்பகுதியை வீட்டில்தான் செலவிடுகிறோம். கொரோனா பரவலுக்கு பிறகு வீட்டிற்குள் செலவிடும் நேரம் அதிகரித்துவிட்டது. நோய்த்தொற்றுகளின் தாக்கத்தால் வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு முன்பை விட அதிக அக்கறை செலுத்துகிறார்கள்.
அழுக்குகள், தூசுகள், ஆவியாகும் கரிம சேர்மங்கள், மாசு விளைவிக்கும் வாயுக்கள், நுண் துகள்கள், ஒவ்வாமை போன்றவை மூலம் காற்று மாசுபாடு ஏற்படக்கூடும்.
குளியல் அறை, சமையல் அறைகளில் இருந்து வெளிப்படும் வாசமும் மாசுபாட்டுக்கு வழிவகுக்கும். பெரும்பாலும் இத்தகைய மாசுக்கள் கண்களுக்கு தெரிவதில்லை. ஒருசில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் காற்று மாசுக்களை கட்டுப்படுத்தி வீட்டுக்குள் ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும்.
1. துப்புரவு பொருட்கள்:
சமையலறை, குளியலறை, ஜன்னல்கள், தரைத்தளங்கள் போன்றவற்றில் காணப்படும் மாசுக்களை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தும் துப்புரவு பொருட்களில் கலந்திருக்கும் ரசாயனங்கள் மூலம் கூட மீண்டும் மாசுக்கள் உருவாகக்கூடும். எனவே இயற்கையான துப்புரவு பொருட்களை பயன்படுத்துவது, மாசுபாட்டுக்கு வழிவகுக்காத பொருட்களை உபயோகிப்பது என மாற்று வழிமுறையை பின்பற்றுவது வீட்டின் உட்புற மாசுபாட்டை குறைக்க உதவும்.
2. வெற்றிடம்:
வைரஸ்கள், பாக்டீரியாக்கள், கரப்பான் பூச்சி மற்றும் நாய் மூலம் உருவாகும் அலர்ஜி போன்றவை நாம் உட்காரும், விளையாடும், தூங்கும் இடங்களில் அதிகமாக காணப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தரை விரிப்புகள், தரை தளங்களில் செல்லப்பிராணிகளின் முடிகள் உதிர்ந்து கிடப்பது, அவற்றின் அழுக்குகள் படிந்திருப்பது மூலமாகவும் மாசுக்கள் அதிகரிக்கலாம். ஷோபாவை தூசு தட்டும்போதோ, குஷனில் அமர்ந்து விளையாடும்போதோ காற்றில் தூசு பறப்பதை காண முடியும். அவற்றில் தங்கி இருந்த தூசுவை நாம் சுவாசிக்க நேரிடும்போது நோய்த்தொற்று ஏற்படக்கூடும்.
எந்தவொரு பொருளையும் சில நாட்கள் உபயோகிக்காமல் இருந்தால் அவற்றில் தூசுக்கள் படிந்திருப்பதை காணலாம். வீட்டுக்குள் தூசுக்களை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி, வெற்றிடமாக வைத்திருப்பதுதான். அதாவது தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி அதிக வெற்றிடங்களை உருவாக்க வேண்டும்.
3. வாசனை திரவியங்கள்:
நிறைய பேர் அறைக்குள் நிலவும் கெட்ட வாசத்தை போக்குவதற்கு 'ரூம் பிரஷ்னர்களை' உபயோகிப்பார்கள். அவை நல்ல வாசத்தை கொடுக்கும் என்றாலும் அதனை நுகர்வதை தவிர்க்க வேண்டும்.
அறை முழுவதும் வாசனை திரவியத்தை ஸ்பிரே செய்துவிட்டு உடனே அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். அதன் வாசம் நீங்கிய பிறகு அறைக்குள் நுழையலாம். ஏனெனில் அவற்றில் இருக்கும் ரசாயனங்கள் காற்றிலும், மாசுக்களிலும் கலப்பதை நாம் சுவாசிக்கும்போது ஒவ்வாமை பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.
4. சமையல்:
சமைக்கும்போது கையாளும் சில வழிமுறைகள் கூட மாசுபாட்டை உருவாக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எண்ணெய்யில் பொரிக்கும்போது அவற்றில் இருந்து வெளிப்படும் துகள்கள் மாசுபாட்டை உருவாக்கும். சமையல் அறையில் இருந்து வெளிப்படும் புகையும் மாசுவை அதிகப்படுத்திவிடும். ஆதலால் சமைக்கும்போது காற்றோட்டமான சூழலை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
வெளிப்புற காற்று மாசுபாடு பிரச்சினை இல்லாவிட்டால் ஜன்னலை திறந்துவைத்துக்கொள்ளலாம். சுத்திகரிப்பானையும் நிறுவலாம். சமையல் அறை மட்டுமின்றி மற்ற அறைகளிலும் காற்று சுத்திகரிப்பானை நிறுவுவது மாசு பிரச்சினையை கட்டுப்படுத்தும்.