காலை 9 மணி முதல் மாலை 5 வரை அலுவலகத்தில் உட்கார்ந்த இடத்திலே பணிபுரிபவர்கள் ஊட்டச்சத்துள்ள உணவுகளை சரியான நேரத்தில், சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் தேவையற்ற உடல் நல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்கக்கூடும் என எச்சரிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
இன்றைக்கு உள்ள பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்துக்கொள்வதற்கு கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். காலையில் எழுந்து அவசர அவசரமாக காலை டிபன் மற்றும் மதிய உணவு இரண்டையும் தயார் செய்து, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது என சுறுசுறுப்பாகப் பணிகள் செய்யும் நாம் நம்முடைய உணவுபழக்கவழங்கங்களை முறையாகப் பின்பற்றுவதில்லை. இதனால் தான் பல்வேறு உடல் நலப்பிரச்சனைகளை அடிக்கடி நாம் சந்திக்க நேரிடுகிறது.
குறிப்பாக எந்த வேலையை எடுத்துக்கொண்டாலும் பெரும்பாலும் பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தான். இந்த நேரங்களில் உட்கார்ந்த இடத்திலேயே பணிபுரியும் சூழலில் ( A 9-to-5 Job) உள்ள நபர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதோடு பல உடல் உபாதைகளும் ஏற்படும். எனவே சரியான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். இத்தகைய பரப்பான சூழலில் பணிக்கு கிளம்பினாலும் காலை, மதியம், சிற்றுண்டி என அனைத்தையும் சரியான விகிதத்திலும் ஊட்டச்சத்துள்ளதாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்நிலையில் தான் 9-5 மணி வரை பணியில் உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என விளக்கம் அளிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணரான Nmami Agarwal.. இதோ அவை என்ன? என நாமும் அறிந்துக்கொள்வோம்..
இரவு தூங்கி எழும் நாம் காலை உணவை எடுத்துக்கொள்வதற்கு முன்னதாக ஒரு கையளவு ஊட்டச்சத்து நிறைய ஏதாவதொரு பருப்புகளை உட்கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து காலை உணவை உட்கொள்ள வேண்டும். இட்லி – சாம்பார், தோசை, ஆம்லெட், சப்பாத்தி போன்றவற்றுடன் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுப்பொருள்களை காலை உணவாக எடுத்துக்கொள்ளும் போது உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.
இதுப்போன்று மதிய உணவிற்கு ரொட்டி, பருப்பு, சப்ஜி, சாப்பாடு சிறந்ததாகக் கூறும் ஊட்டச்சத்து நிபுணர் இதை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைக்கிறார். இதோடு ஒரு கிளாஸ் மோர், இளநீர் அல்லது ஏதாவது பழம் சாப்பிடும் போது பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். உட்கார்ந்த இடத்திலேயே பணிபுரிந்தாலும் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை ஏதாவது ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக வறுத்த சுண்டல், ஹம்முஸ் போன்றவற்றை சிறிதளவு உட்கொள்ளலாம். இதோடு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது ஏதாவது ஒரு பழங்களை உட்கொள்ளலாம்.
இவ்வாறு நம்முடைய உணவு முறையை சரியான நேரத்தில், சரியான அளவில் உட்கொள்ளும் போது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் எந்தவிதமான நொறுக்கு தீனிகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. இதனால் காலை 9 மணி முதல் 5 வரை உட்கார்ந்த இடத்திலேயே பணிபுரிந்தாலும் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பில்லை. இதோடு மட்டுமின்றி உடற்பயிற்சி நீங்கள் மேற்கொள்ள வேண்டும். ஒரு வேளை உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை என்றால் பணி முடிந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது தூரம் நடக்கலாம் அல்லது பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் இருந்து நடந்தே வர முயற்சிக்கலாம் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர். இந்த நடைமுறை நிச்சயம் உங்களது உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும்.