ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தற்போதும் தொடர்ந்து வருவது கவலைக்குரியதாக இருக்கிறது. ஏனென்றால் ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் சில நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கும்.
ஒப்பீட்டளவில் சில ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கலாம். சோர்வு, தலைசுற்றல், விரல்களில் கூச்சம், தசை பலவீனம் மற்றும் எலும்பு வலி வரை பல கோளாறுகள் ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும். எனவே தங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் மிகவும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகளை பெண்கள் அறிந்து கொள்வது அவசியம்.
இந்திய பெண்களுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகள் இங்கே...
கால்சியம் குறைபாடு :
பற்கள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. அது போல நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கால்சியம் அவசியம். எலும்புகளின் வலிமைக்கும் இது மிகவும் முக்கியமானது. கால்சியம் குறைபாடு காரணமாக பலவீனமான எலும்பு, பற்களில் பிரச்சனை, தசைப்பிடிப்புகள், சீரற்ற இதயத் துடிப்பு உள்ளிட்டவை ஏற்படலாம். பால் மற்றும் பால் பொருட்களை தவிர சோயா பால், டோஃபு, ப்ரோக்கோலி, பீன்ஸ், பாதாம், எள், சியா விதைகள், உலர்ந்த அத்திப்பழங்கள் மற்றும் கடுகு கீரை உள்ளிட்டவற்றை டயட்டில் சேர்ப்பதன் மூலம் கால்சியம் குறைபாட்டை சரி செய்யலாம்.
வைட்டமின் டி பற்றாக்குறை :
உடலின் வழக்கமான மற்றும் ஆரோக்கிய செயல்பாட்டிற்கு வைட்டமின் டி மிக அவசியம். நல்ல எலும்பு தாது அடர்த்தியை பராமரிக்க தேவையான கால்சியம் உறிஞ்சுதலுக்கு வைட்டமின் டி3 பொறுப்பாகும். இதன் மூலம் எலும்பு முறிவுகளின் அபாயம் குறையும். குறிப்பாக சூரிய ஒளியில் இருந்து பெறக்கூடிய ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்தாக இருக்கிறது. இதில் ஏற்படும் பற்றாக்குறை முதுகுவலி, முடி உதிர்வு, அதீத சோர்வு உள்ளிட்ட பல அறிகுறிகளை ஏற்படுத்தும். மீன் மற்றும் மீன் எண்ணெய் சப்ளிமெண்ட், சீஸ், போர்ட்ஃபிட்டட் மில்க், முட்டையின் மஞ்சள் கரு உள்ளிட்டவை வைட்டமின் டி-யின் வலுவான ஆதாரங்கள்.
அயோடின் குறைபாடு :
இயல்பான தைராய்டு செயல்பாடு மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு அயோடின் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். உடலில் போதுமான அயோடின் இல்லாவிட்டால் உடல் வளர்சிதை மாற்றம், உடல் வெப்பநிலை மற்றும் பலவற்றைக் கட்டுப்படுத்த உதவுவதற்கு போதுமான தைராய்டு ஹார்மோன்கள் உருவாகாது. எடை அதிகரிப்பு, பலவீனம், சோர்வு, முடி உதிர்வு உள்ளிட்ட பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். பால், உப்பு, முட்டை, கோழி, கடற்பாசி உள்ளிட்டவை அயோடின் நிறைந்தவை.
வைட்டமின் பி12 பற்றாக்குறை :
இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் மேலும் இதை நம் உடலால் இயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது, உணவுகளில் இருந்து தான் பெற வேண்டும். இந்த வைட்டமின் மூளை மற்றும் நரம்பு செல்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் டிஎன்ஏ உற்பத்தியை எளிதாக்குகிறது. ரத்த சிவப்பணுக்களை உருவாக்குவதற்கும், ஆரோக்கியமான செரிமானத்தை மேம்படுத்துவதற்கும், நரம்பியல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் இது முக்கியமானது. B12 விலங்கு உணவுகளில் போதுமான அளவு காணப்படுகிறது. பால், முட்டை, தயிர், கொழுப்பு நிறைந்த மீன்கள், சிவப்பு இறைச்சி, செறிவூட்டப்பட்ட தானியங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் வைட்டமின் பி 12 பெறலாம்.
ஃபோலேட் குறைபாடு :
இது வைட்டமின் பி-9 அல்லது ஃபோலிக் ஆசிட் என்றும் குறிப்பிடப்படுகிறது. தீவிர சோர்வு, ஆற்றல் பற்றாக்குறை, மூச்சுத் திணறல், தலைவலி, பார்வையில் தொந்தரவு, வாய் புண்கள், தசை பலவீனம், மனச்சோர்வு மற்றும் அதிக குழப்பம் உள்ளிட்ட பல அறிகுறிகள் இந்த ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும். ஃபோலேட் உடலில் சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது மற்றும் ஆரோக்கிய செல் வளர்ச்சி ஊக்குவிக்கிறது. பெண்களுக்கு காணப்படும் ஃபோலேட் குறைபாடு கர்ப்ப காலத்தில் பிறப்பு குறைபாடுகளின் அபாயத்தை ஏற்படுத்த கூடும். குழந்தை பெற்று கொள்ள திட்டமிடும் பெண்கள் கருத்தரிப்பதற்கு முன், ஃபோலேட் அளவு அதிகமாக இருப்பதை உறுதிசெய்ய தகுந்த வைட்டமின்களை உட்கொள்ள நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அடர்ந்த இலை கீரைகள், பீன்ஸ், பழங்கள், முழு தானியங்கள், நட்ஸ் & சீட்ஸ்களில் ஃபோலேட் காணப்படுகிறது.
இரும்புச்சத்து குறைபாடு :
போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் ஏற்படும் குறைபாடுகளின் பட்டியலில் ரத்த சோகை முக்கியமனது. ரத்த சோகைக்கு மிகவும் பொதுவான காரணமாக இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது. கர்ப்பிணிப் பெண்களில் காணப்படும் ரத்த சோகையானது கர்ப்பம் அல்லது பிரசவத்தின் போது பெண்களின் மரண அபாயத்தை அதிகரிக்கிறது. மாதவிடாய் காரணமாக ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, ரத்த சோகைக்கு முக்கிய காரணமாகிறது. இந்த இழப்பை ஈடுசெய்யாமல் போவதால் பெண்களில் இரும்புச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. இழக்கும் இரும்புச்சத்தை மீட்டெடுக்க கடல் உணவுகள், சிவப்பு இறைச்சி, பீன்ஸ், கீரைகள், உலர் திராட்சை, பாதாமி போன்றவற்றை பெண்கள் டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.