நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களும், தனியார் துறை நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின், இணைய பாதுகாப்பு முதலான வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்து வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், நிறுவனங்களின் வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் டிஜிட்டல் திறன்களை அடிப்படைத் தகுதிகளாக கோரும் விகிதம் கிட்டத்தட்ட 100% அதிகரித்துள்ளதாக பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சராசரி திறன்களைக் காட்டிலும், இயந்திர கற்றல் (Machine learning) ,பெருந்தரவுகள்(Big data) முதலானவற்றில் முன்அனுபவம் உள்ளவர்களை பணியில் அமர்த்துவதற்கு திட்டமிட்ட வருகின்றன. அதாவது, சராசரி திறன்களுக்கான தேவையைக் காட்டிலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை சார்ந்த வேலை வாய்ப்புகள் உருவாகும் விகிதம் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
எனவே, இந்த துறையில் உள்ள சாத்தியங்கள் பயன்படுத்திட மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வது முக்கியமானதாகும். இந்த துறை தொடர்பாக மத்திய/மாநில கல்வி நிறுவனங்கள் ஸ்வயம் தளத்தின் மூலமாக பல்வேறு இலவச பயிற்சிகளை வழங்கி வருகின்றன. இந்த பயிற்சிகளை கற்றுக்கொண்டால் கை நிறைய சம்பளத்துடன் வேலையையும் எதிர்காலத்தில் நீங்கள் பெறலாம். அதில், சிலவற்றை இங்கு பார்ப்போம்.
தகவல் பகுப்பாய்வு (Data Analytics) :
1. சென்னை ஐஐடி-ன் என்பிடிஇஎல் (NPTEL - National Programme on Technology Enabled Learning) மத்திய கல்வி அமைச்சகத்தின் ஸ்வயம் (SWAYAM) தளத்தின் மூலம் தகவல் பகுப்பாய்வு போன்ற பல்வேறு பாடங்களை கட்டணமில்லாமல் வழங்கி வருகிறது.
தகவல் பகுப்பாய்வு துறையில் ஆர்வமுள்ளவர்கள் மாணவர்கள், ஸ்வயம் மூலம் Data Science for Engineers, Essentials Of Data Science With R Software (I & II), Python for data science உள்ளிட்ட பாடங்களில் சேரலாம்.
ஐ.ஐ.டி பேராசிரியர்களால் கற்பிக்கப்படும் இந்த பாடங்கள் முற்றிலும் இலவசம். மாணவர்கள், ஆன்லைனில் வீடியோக்களைப் பார்த்துப் புரிந்து, வாராந்திர/ மாதாந்திர அடிப்படையில் பணிகளைச் சமர்ப்பிக்க வேண்டும். விரும்பினால் இறுதித் தேர்வுக்கும் பதிவு செய்து கொள்ளலாம். சான்றிதழ் பெற விரும்பினால், நேரடித் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வுக்கு மட்டும் குறைந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படும்.
எனவே, மேற்கூறிய படிப்புகளில் சேர, 2023 ஜனவரி மாதம் 30ம் தேதிக்குள் ஸ்வயம் தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இணைய பாதுகாப்பு (Cyber Security):
அவினாசிலிங்கம் நிகர்நிலை பெண்கள் பல்கலைக்கழகம் (Avinashilingam Institute for Home Science & Higher Education for Women,Coimbatore) இணைய பாதுகாப்பு தொடர்பான படிப்பை ஸ்வயம் தளத்தில் உருவாக்கியுள்ளது.
நீங்கள், வீட்டில் இருந்த படியோ, அலுவலகத்தில் இருந்த படியோ, கற்றுக்கொள்ளலாம். வாய்ப்பளிக்கின்றன. இந்த தொகுப்பில் சேர கடைசி தேதி 2023 ஏப்ரல் 30 ஆகும். அடிப்படைக் கணினி இருந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயந்திர கற்றல் (Machine learning) :
ஐஐடி சென்னை, டெல்லி, கரக்பூர் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயந்திர கற்றல் தொடர்பான பல்வேறு பாடங்களை ஸ்வயம் தளத்தின் மூலமாக வழங்கி வருகின்றன. இதில், குறிப்பாக தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில், Introduction to Machine Learning என்ற பாடம் தமிழில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த படிப்புகளில் சேர, 2023 ஜனவரி மாதம் 30ம் தேதிக்குள் ஸ்வயம் தாளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.