தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம், கைவினை கலைஞர்களுக்குக் கடன் திட்டம் ஆகியவற்றின் கீழ் கடன்கள் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பைச் சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ளார்.
டாம்கோ கடனுதவித் திட்டம்:
டாம்கோ மூலம் செயல்படுத்தப்படும் கடனுதவித் திட்டங்கள் மூலம் தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம், கைவினை கலைஞர்களுக்குக் கடன் திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.
கடனுதவித் திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வட்டி விகிதம்:
திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000 வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது.
கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- வரை கடன் வழங்கப்படுகிறது.
சுய உதவிக்குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- வரை கடன் வழங்கப்படுகிறது.
சிறுபான்மையின் மாணவ/மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுகலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாகத் திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2 -ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலான கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
டாம்கோ கடன் உதவி பெறுவது எப்படி?
கடன் மனுக்களுடன், மத சான்றிதழ், ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை, ஒட்டுநர் உரிமம் மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அதே போல், கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது / செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
கடன் உதவி பெறவிரும்பும் சென்னை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயக்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் கடன் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அருகாமையில் உள்ள கூட்டுறவு வங்கி கிளைகளில் ஒப்படைத்து டாம்கோவில் கடன் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம்.
Click here for latest employment news