உலகின் பல பகுதிகளிலும் அரிசி உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஆசிய மக்களின் பிரதான உணவாக அரிசி சாதம் இருக்கிறது. அதிலும் தென்னிந்திய மக்களை பற்றி சொல்லத் தேவையில்லை. அரிசி சாப்பாடு இல்லாத நாள் இருக்கவே முடியாது.
நம் தினசரி வாழ்வில் இரண்டறக் கலந்துள்ள அரிசி என்ற சொல்லைக் கேட்டதும் நம் மனதுக்கு சட்டென்று நினைவுக்கு வருவது வெள்ளை நிற அரிசி தான். ஆனால், அரிசி பல நிறங்களில் இருக்கின்றன. ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. உதாரணத்திற்கு பாரம்பரிய அரிசி வகைகளான பிரவுண் அரிசி, சிவப்பரிசி, கருப்பு அரிசி போன்றவற்றை நம் மக்கள் மீண்டும் உபயோகப்படுத்த தொடங்கியுள்ளனர். பல நிறங்களில் அரிசி இருந்தாலும், உங்களுக்கு எது ஒத்து வரும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கரிமா கோயல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ள விவரங்களை பின்வருமாறு பார்க்கலாம்.,
வெள்ளை அரிசி : உலகெங்கிலும் மிக அதிகமாக உட்கொள்ளப்படும் அரிசி வகை இதுதான். இதுகுறித்து கரிமா கோயல் கூறுகையில், ‘மற்ற அரிசி வகைகளை ஒப்பிடும்போது வெள்ளை அரிசியில் மாவுச்சத்து மிக, மிக அதிகம். குறைவான கலோரி கொண்ட உணவை சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள் இதனை எச்சரிக்கையுடன் எடுத்துக் கொள்ளவும். வெள்ளை அரிசியின் தோற்றம் பாலிஷ் செய்யப்பட்டதை போல இருக்கும். இதில் நார்ச்சத்து குறைவு’’ என்று தெரிவித்தார்.
பிரவுண் அரிசி : வெளிப்புற தவிடு லேயர் மட்டுமே இதில் நீக்கப்பட்டிருக்கும். உட்புற பிரான் மற்றும் ஜெர்ம் போன்ற லேயர்கள் அப்படியே இருக்கும். இதுகுறித்து கரிமா கோயல் குறிப்பிடுகையில், “இந்த அரிசி பாலிஷ் செய்யப்பட்டதைப் போல இருக்காது. இதில் வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம், செலீனியம், தியமைன், நியசின், வைட்டமின் பி6 போன்ற மினரல்கள் அதிகம். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது’’ என்றார்.
சிவப்பு அரிசி : இதனை ஹிமாலயன் அரிசி அல்லது பூட்டான் அரிசி என்று குறிப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு போன்றவற்றை கட்டுப்படுத்தி, எலும்புகளை பலப்படுத்தக் கூடியது என்று கரிமா கோயல் கூறினார். இரும்புச்சத்து நிறைந்த இந்த அரிசி மிக ஆரோக்கியமானது என்றும் அவர் கூறினார்.
கருப்பு அரிசி : இது மண் வாசனை நிரம்பியதாக இருக்கும். இதுகுறித்து கரிமா கோயல் கூறுகையில், “கருப்பு அரிசியில் வைட்டமின்கள், மினரல்கள், ஆண்டிஆக்ஸிடண்ட் போன்றவை மிகுதியாக இருக்கும். விட்டமின் இ மற்றும் இரும்புச்சத்து மிகுதியாக இருப்பதால் தான் இது கருப்பு நிறத்தில் உள்ளது. இருப்பதிலேயே மிக அதிகமான நார்ச்சத்து, புரதம், ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த கருப்பு அரிசி மற்ற எல்லாவற்றையும் விட ஆரோக்கியமானது’’ என்று தெரிவித்தார்.