செங்கல்பட்டு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும்18-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்துடன் இணைந்து காலை 9 மணி முதல் 2 மணி வரை மறைமலை நகர் அடிகளார் சமுதாயகூடம், ஜே.ஆர்.கே. மேல்நிலைப்பள்ளி அருகில் இம்முகாமை நடத்துகிறது.
இதில் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான ஆட்களை, நேர்முகத்தேர்வு நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.இ.இ, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இதில் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்என மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது என்றும் அந்த அறிக்கையல் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து அவரது அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஐாபாத் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரகம், நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, தீன் தயாள் உபத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ், தனியார் துறை வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டுதகுதியான நபர்களை தேர்வு செய்யஉள்ளனர். பயிற்சி முடித்தும் வேலைவாய்ப்பு கிடைக்காத காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
Click here for latest employment news