பலரும் மதியம் நன்கு சாப்பிட்டாலே உடனே தூக்கம் வந்துவிடும். சற்று அப்படியே படுத்து எழுந்தால் நன்றாக இருக்குமே என உடல் ஏங்கும். இதனால் சிலர் தலைக்கு மேல் வேலை இருந்தாலும் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு கூட மற்ற வேலைகளை பார்ப்பார்கள். அப்படி சாப்பிட்டவுடன் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தூக்கம் வர என்ன காரணம்..? இதற்கு வல்லுநர்கள் ’food coma’ என்று பெயர் வைத்துள்ளனர். இதற்கு என்ன பொருள், இதை சரி செய்ய என்ன வழிகள் என்று பார்க்கலாம்.
ஃபுட் கோமா என்றால் என்ன..?
ஃபுட் கோமாவின் மருத்துவ பெயர் postprandial somnolence என்று அழைக்கப்படுகிறது. அதாவது இதற்கு சாப்பிட்ட பிறகு உறக்கம் என்று பொருள். இந்த ஃபுட் கோமாவின் அறிகுறிகள் சாப்பிட்டதும் தூக்கமாக வரும், குட்டி தூக்கம் போடலாமா என்று தோன்றும், எந்த வேலையிலும் ஈடுபாடு இல்லாமல் மந்தமாக இருக்கும். இந்த சமயத்தில் உடலில் ஆற்றல் குறைவாக இருக்கும். எழுந்து சுருசுருப்பாக வேலை செய்ய நினைத்தாலும் உடல் ஒத்துழைக்காது. இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அது ஃபுட் கோமா என்கின்றனர்.
எதனால் இந்த ஃபுட் கோமா வருகிறது..?
இதற்கு மருத்துவர்கள் இரண்டு காரணங்களை வகுத்துள்ளனர்.
காரணம் 1 : அதிக கார்போஹட்ரேட் கொண்ட உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை சாப்பிட்டால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கத் தொடங்கும். இதனால் உங்களுக்கு ஃபுட் கோமா உண்டாகும். எனவே நீங்கள் சாப்பிடும் உணவின் அளவையும் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதே உணவை நீங்கள் அளவாக சாப்பிட்டால் பிரச்சனை இருக்காது. அதேசமயம் கார்போஹட்ரேட் கொண்ட உணவுகள் மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகளை அளவுக்கு அதிகமாக ஒரே நேரத்தில் சாப்பிடுவதால் நீங்கள் ஃபுட் கோமாவிற்கு செல்ல நேரிடும்.
காரணம் 2 : நீங்கள் வயிற்றுக்கு நிறைவாக மதிய உணவை சாப்பிட்டவுடன் உடலானது அதை செரிமானிக்க ரெஸ்ட் மோடிற்கு செல்லும். இந்த சமயத்தில் உணர்ச்சிகளைத் தூண்டும் வேகஸ் நரம்பு (vagus nerve) தூண்டப்படுகிறது. இது நீங்கள் சாப்பிட்ட உணவுக்கு தனது பங்களிப்பை தருகிறது. இதனால் உங்களுக்கு தூக்கம் வருகிறது.
இந்த ஃபுட் கோமாவிலிருந்து விடுபட என்ன வழி..?
இப்போது உங்களுக்கு ஏன் ஃபுட் கோமா உண்டாகிறது என்ற காரணம் புரிந்திருக்கக் கூடும். இந்த ஃபுட் கோமா அதிகரித்தது ஒர்க் ஃபிரம் ஹோமில்தான் என்று கூறப்படுகிறது. நமது உணவுப் பழக்கம் அதிகரித்தது முதல் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே திருப்பிப் போட்டுவிட்டது. இப்போது பலரும் இயல்பு நிலைக்கு திரும்பி அலுவலக வேலைக்கு சென்று வருவதால் இன்னும் ஒர்க் ஃபிரம் ஹோம் வாழ்க்கை முறையிலிருந்து மீண்டு வர சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எனவே இதிலிருந்து நீங்கள் விடுபட செய்ய வேண்டிய சில விஷயங்கள் உங்களுக்காக...
தூக்க முறையை பின்பற்றுகள் : தினசரி தூங்கும் நேரத்தை வரையறுத்து அதற்குள் தூங்கி எழ முயற்சி செய்யுகள். இரவு 8 மணி நேர தூக்கத்தை உறுதிப்படுத்துங்கள்.
குறைவான உணவு : ஃபுட் கோமாவிற்கு முக்கிய காரணமே அதிகமான உணவுதான். எனவே உங்கள் உணவின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள். அதேபோல் ஹெவி மீல்ஸ் அல்லாமல் மிதமான உணவு வகைகளை சாப்பிடுங்கள். பின் நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்.
ஆக்டிவாக இருங்கள் : சாப்பிட்டவுடனே இருக்கையில் அமர்ந்துவிடாதீர்கள். அங்கும் இங்கும் நடக்கும் வேலைகள், உங்களை சுருசுருப்பாக வைத்துக்கொள்ளும் வேலைகளை திட்டமிடுங்கள்.
உணவுச் சமநிலை : உணவு சமநிலையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதை உறுதி செய்யுங்கள். அதற்காக கார்போஹைட்ரேட்டை தவிர்க்காதீர்கள். ஆற்றலுக்கு கார்போஹைட்ரேட் அவசியம். அதோடு புரோட்டீன், ஹெல்தி ஃபேட் மற்றும் காய்கறிகள் இருக்குமாறு உணவை உட்கொள்ளுகள்.
உணவை சரியான நேரத்தில் சாப்பிடுங்கள் : மூன்று வேலை உணவையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட்டுவிடுங்கள். குறிப்பாக இரவு உணவை 8 மணிக்கு முன் சாப்பிடுங்கள். 10 மணிக்கு மேல் சாப்பிடுவது, சாப்பிட்ட உடனே தூங்கிவிடுவது போன்ற விஷயங்களை தவிர்த்துவிடுங்கள். இந்த பழக்கம் உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், நீர்ழிவு போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கலாம்.