ஒரு குழந்தை எப்படி வளர்கிறது என்பதை பெரும்பாலும் குழந்தையை வளர்க்கும் பெற்றோரை பொருத்தே அமைகிறது. இதைத் தவிர நமது சமூக மற்றும் பாரம்பரிய கட்டுப்பாடுகளும் குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்த ஒரு பெற்றோருமே முழுவதும் சிறந்த பெற்றோராக இருக்க முடியாது.
ஆனால் முடிந்த அளவு தன் குழந்தையை வளர்க்கும் முறையை அவர்கள் சிறப்பாக மாற்ற முயற்சி செய்யலாம். குறிப்பாக இந்திய பெற்றோர்கள் சில விஷயங்களில் மற்ற நாட்டு பெற்றோர்களை விட சிறப்பானவர்களாகவே இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. அந்த வகையில் இந்திய பெற்றோர்கள் எந்தெந்த வகையில் சிறந்தவர்கள் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
எப்போது எதைக் கொடுக்க வேண்டும் என்று தெரியும்! இந்திய பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளுக்கு எந்த விதமான செய்திகளை எப்போது சொல்ல வேண்டும் என்பதைப் பற்றி நன்றாக தெரியும். இதை தவிர அவர்கள் எப்போது எதை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் அவர்கள் தெளிவாக உள்ளார்கள்.
உதாரணத்திற்கு இணையதளத்தை பயன்படுத்துவது, டிவி பார்ப்பது, கடுஞ்சொற்கள் பேசுவது ஆகியவற்றை தங்கள் குழந்தை கற்றுக்கொள்வதில் இருந்து எப்போதும் அவர்களை தள்ளி வைக்கவே முயற்சி செய்வார்கள். அவர்கள் மனதளவில் முதிர்ச்சியாக மாறும் வரை இது போன்ற சிக்கலான விஷயங்களில் அவர்கள் மாட்டிக் கொள்வதை விரும்புவதில்லை.
நடத்தை: இந்திய பெற்றோர்கள் எப்போதுமே தங்கள் குழந்தைகளுக்கு மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்பதை பற்றி தான் முதலில் கற்றுக் கொடுக்கிறார்கள். முரட்டுத்தனமாக இருப்பதையும், மரியாதை குறைவாக பேசுவதையும் அவர்கள் எப்போதும் விரும்புவதில்லை. முக்கியமாக மரியாதை குறைவாக நடப்பதை அவர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. பெற்றோரிடமோ, சகோதர சகோதரிகளிடமோ அல்லது வெளியாட்களிடமோ நாகரீகமாக எவ்வாறு நடந்து கொள்வது என்பதை மிக இளம் வயதிலேயே தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.
கல்வியின் முக்கியத்துவம்: படிப்பு என்று வந்து விட்டாலே இந்திய பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்வார்கள். வகுப்புகளை புறக்கணிப்பதையும் தேவையற்ற விடுமுறை எடுப்பதையும் அவர்கள் விரும்புவதில்லை. மேலும் வேண்டுமென்றால் உங்களது கல்விக்காக அதிகம் செலவு செய்யக் கூட அவர்கள் தயாராக இருக்கிறார்கள். சுய ஒழுக்கத்தையும் பெற்றோர்கள் இளம் வயதிலேயே அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.
ஆன்மீகம்: இந்திய கலாச்சாரத்தில் ஆன்மீகம் மிகவும் முக்கியமான ஒன்று. ஆன்மீகத்தைப் பற்றி இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக இளம் வயதிலேயே கற்றுக் கொடுத்து விடுகிறார்கள். அவ்வப்போது கோவிலுக்கு அழைத்துச் செல்வது வீட்டிலேயே ஜபம் செய்வது ஆகியவை இந்தியர்களின் வீட்டில் நடக்கும் வழக்கமான நிகழ்வுகள். மேலும் இளம் வயதிலேயே தங்கள் குழந்தைகளுக்கு புராணக் கதைகளை கூறி ஆன்மீக நாட்டத்தை ஊக்குவிக்கின்றனர்.
நட்பு வட்டம்: தங்கள் குழந்தைகளை விட அவர்களுடன் பழகும் நண்பர்களை பற்றி இந்திய பெற்றோர்களுக்கு எப்போதுமே நன்றாக தெரியும். எப்போதும் தங்கள் குழந்தைகளை தீய நட்பு வட்டத்திடமிருந்து ஒதுக்கி வைப்பதையே அவர்கள் விரும்புகின்றனர். மேலும் குழந்தைகளிடம் பழகும் நண்பர்களை பற்றி மிக எளிதாகவே அவர்கள் கண்டறிந்து விடுவார்கள். ஒருவேளை அந்த நண்பர்கள் சுயநலம் மிக்கவராகவோ அல்லது பொறாமை கொண்டவராகவோ, கெட்ட பழக்க வழக்கங்கள் கொண்டவராகவோ இருந்தால் உடனடியாக தங்கள் குழந்தைகளை அவர்களிடமிருந்து விலக்கி வைத்து விடுவார்கள்.