ஆரோக்கியமற்ற செரிமான அமைப்பானது மனம் மற்றும் உடல் சார்ந்த பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனினும், ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்க உதவும் ஒரு சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக நாம் உண்ணும் முறையும், உணவுகளும் தற்போது மாறிவிட்டன. அதிகப்படியான ப்ராசஸ் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது எரிச்சல் கொண்ட குடல் நோய் குறி, லாக்டோஸுக்கான சகிப்புத்தன்மை மற்றும் கசிவுக் குடல் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமற்ற செரிமான அமைப்பானது மனம் மட்டும் உடல் சார்ந்த நோய்களை உண்டாக்கும் என்பது நாம் பலரும் அறிந்ததே. செரிமான அமைப்பின் ஆரோக்கியம் மோசமாக இருந்தால் நமது வாழ்க்கையின் தரம் பாதிக்கப்படும். மேலும் மன ரீதியான சிக்கல்கள் உண்டாகும்.
ஆரோக்கியமான செரிமான அமைப்பு என்பது என்ன? சீரான முறையில், சரியான செரிமானம் நடைபெற்று ஊட்டச்சத்துக்களின் உறிஞ்சுதல் முறையாக நடைபெறுமாயின் அது ஆரோக்கியமான செரிமான அமைப்பாக கருதப்படுகிறது. மேலும் ஆரோக்கியமான செரிமான அமைப்பில் வீக்கம் மற்றும் அசௌகரியம் குறைவாகவே இருக்கும். செரிமான அமைப்பில் காணப்படும் சிறு குடல் மற்றும் பெருகுடல் நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. உணவுகளை செயலாக்கி அதிலிருந்து கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுதல் முதல் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதரவு அளிப்பது வரை செரிமான அமைப்பு பல வேலைகளை செய்கிறது. ஆரோக்கியமற்ற செரிமான அமைப்பு வாழ்க்கையின் தரத்தை பாதிக்கக்கூடும். உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு சில வீட்டு வைத்தியங்கள் இங்கே உள்ளன.
இஞ்சி : இஞ்சியில் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகள் காணப்படுவதால் இது செரிமான அமைப்பில் ஏற்படக்கூடிய வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இஞ்சி டீ பருகுவது, குழம்பு சமைக்கும் போது ஒரூ துண்டு இஞ்சி சேர்ப்பது போன்றவை உங்களுக்கு உதவக்கூடும்.
ப்ரோபயோடிக்கள் : ப்ரோபயோடிக்கள் என்பது செரிமான அமைப்பில் உள்ள பாக்டீரியாக்களை சமநிலைப்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்களை ஆகும். புளிக்க வைக்கப்பட்ட உணவுகளான தயிர், மோர் மற்றும் ஒரு சில காய்கறிகள் ப்ரோபயோடிக்கள் பெற சிறந்த வழியாகும். ஒரு சுகாதார நிபுணரை சந்தித்து ப்ரோபயாட்டிக் சப்ளிமென்ட்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
புதினா எண்ணெய் : புதினா எண்ணெயில் காணப்படக்கூடிய அமைதிப்படுத்தும் விளைவுகள் செரிமானத்தை மேம்படுத்தி வயிற்று உப்புசம் மற்றும் செரிமான கோளாறுகளை சரி செய்கிறது. தேநீர் தயாரிக்கும் பொழுது ஒரு சில புதினா இலைகளை சேர்த்து பருகலாம் அல்லது புதினா அத்தியாவசிய எண்ணெயை வாங்கியும் பயன்படுத்தலாம்.
சிலிப்பொி எல்ம் (Slippery elm) : சிலிப்பொி எல்ம் என்ற மூலிகை பல நூற்றாண்டுகளாக செரிமான கோளாறுகளை சரி செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது செரிமான அமைப்பில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குவதன் மூலமாக வீக்கத்தை குறைத்து குடலை ஆற்ற உதவுகிறது. நீங்கள் கடைகளில் கிடைக்கக்கூடிய சிலிப்பொி எல்ம் சப்ளிமெண்டுகளை பவுடர் அல்லது காப்ஸ்யூல் வடிவில் வாங்கி பயன்படுத்தலாம்.
எலும்பு சூப் : எலும்பு சூப்பானது எலும்புகள், இறைச்சி மற்றும் காய்கறிகள் கொண்டு செய்யப்படுவதால் இது ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பானமாக கருதப்படுகிறது. இதில் ஏராளமான கொலாஜன், ஜெலட்டின் மற்றும் செரிமான அமைப்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. கடைகளில் எலும்பு சூப் விற்பனை செய்யப்பட்டாலும் அதனை வீட்டில் தயார் செய்து சாப்பிடுவது சிறந்தது.
ஒருவரது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த வீட்டு வைத்தியங்கள் உதவினாலும் இதனை ஒரு மருந்துகளுக்கு மாற்றாக ஒருவர் கருதக்கூடாது. நீங்கள் நாள்பட்ட செரிமான பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தால், உங்கள் நிலை குறித்து தெரிந்து கொள்ள நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.