ஒரு சில நாட்களில் காலை எழுந்திருக்கும் பொழுதே ஆற்றல் குறைவாகவும், சோகமாகவும் நாம் உணர்வோம். அதற்கான காரணம் கூட நமக்கு தெரியாது. ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு அல்லது டிராமா போன்றவை காரணமாக உண்டாகும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் விளைவாக இந்த சோகமான மனநிலை ஏற்படலாம். எனினும், உங்கள் மனநிலையை மேம்படுத்தி உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்க நீங்கள் முயற்சி செய்யக் கூடிய பல வழிகள் உள்ளது. இதனைச் செய்வதற்கு உங்கள் சோகத்திற்கான காரணம் தெரிய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. அப்படி என்ன வழியாக இருக்கும்? தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளதா… வாருங்கள் பார்ப்போம்!
புதியதொரு நாளுக்கு நன்றி சொல்லுங்க: உங்களுக்கு மற்றுமொரு அற்புதமான நாள் பரிசாக கிடைத்துள்ளது. உங்களை சிறந்த முறையில் மேம்படுத்திக் கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாளை உங்களால் முடிந்தவரை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இந்நாளுக்கு நன்றி தெரிவியுங்கள். உங்களுக்கு ஆதரவு தரக்கூடிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். உங்கள் மனது எதிர்மறையான எண்ணங்களை பற்றி சிந்திக்கும் பொழுது ஒரு நிமிடம் அப்படியே எதுவும் செய்யாமல் இருந்து, நன்றாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும். உங்கள் மனதை அமைதிப்படுத்த முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு காத்திருக்கும் வாய்ப்புகளை கற்பனை செய்து பாருங்கள். அமைதியான மனதால் மட்டுமே நன்மைகளை அடையாளம் காண முடியும். இன்றைய நாள் சிறப்பாக அமையப்போகிறது என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.
நல்ல விஷயங்களில் கவனம் செலுத்தவும்: உங்களுக்கு என்னதான் கஷ்டங்கள் இருந்தாலும் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டிய பல நன்மைகளும் உங்கள் வாழ்க்கையில் இருக்கும். அவை கட்டாயமாக உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை காட்டிலும் அதிகமாகவே இருக்கும். அவற்றில் மட்டுமே உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனை மூலமாக உங்களுக்கு நிச்சயமாக ஒரு நன்மை கிடைக்கும் என்பதை ஆழமாக நம்புங்கள். உங்களுக்கு கிடைத்திருக்கக் கூடிய அனுபவங்கள், மக்கள், வாய்ப்புகள் மற்றும் சாதனைகளை நினைத்துப் பாருங்கள்.
எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விலகி இருக்கவும்: உங்கள் மனதை சீர்குலைக்க கூடிய கெட்ட எண்ணங்களில் இருந்து விலகி இருங்கள். அவற்றை வளர விடாமல் தடுப்பது உங்கள் வேலை. நம்மில் பெரும்பாலானோர் நமது உணர்வுகளை அடையாளம் கண்டு அதனுடன் மட்டுமே ஒன்றி செல்ல முயற்சி செய்கிறோம். எனினும், தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்தி, அதன் மீது அன்பு காட்ட முயற்சி செய்யுங்கள். இது உங்கள் பதட்டத்தை குறைத்து, மனதை அமைதிப்படுத்த உதவும்.
மகிழ்ச்சி தரக்கூடிய செயல்களில் ஈடுபடவும்: உங்களுக்கு அதிக மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அள்ளித் தரக்கூடிய ஏதாவது ஒரு செயலை செய்ய முயற்சி செய்யுங்கள். நீங்கள் சோகமாகவோ அல்லது குறைந்த ஆற்றலுடன் இருக்கும்பொழுது இது போன்ற செயல்பாடுகளை செய்வது உடலில் ஹாப்பி ஹார்மோன்களை வெளியிட உதவும். இயற்கை வெளியில் அல்லது பூங்காவில் நடப்பது, ஸ்கிப்பிங் செய்வது, நீச்சல் குளத்தில் நீந்துவது அல்லது யோகா பயிற்சி செய்வது போன்றவை மன அழுத்தத்தை குறைக்க உதவும் ஒரு சில செயல்பாடுகள்.
அன்புக்குரியவர்களின் உதவியை நாடுங்கள்: தனிமையாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் நீங்கள் அதிகம் நம்பிக்கை வைத்துள்ள மற்றும் உங்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் பேசுவதன் மூலமாக உங்களது தற்போதைய மனநிலை மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவர்களுடன் பேச ஆரம்பிக்கும் பொழுதே உங்களிடம் உள்ளது எதிர்மறையான எண்ணங்கள் மெல்ல மெல்ல மறைய தொடங்கும். எனவே உங்கள் நீங்கள் நினைப்பதை அப்படியே மனதில் பூட்டி வைக்காமல் பிறரிடம் உதவி கேட்க தயங்காதிர்கள்.