இளம் பொறியாளர் பட்டதாரி திட்டம் – 2023 இன் கீழ் புதிதாக 700 பொறியாளர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 58% பேர் பெண்கள் என்றும் ஆல்ஸ்டாம் (Alstom) நிறுவனம் தெரிவித்துள்ளது.
இளம் பொறியாளர் பட்டதாரி திட்டத்தின் கீழ் நாட்டிலேயே அதிகபட்ச ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று ஆல்ஸ்டாம் நிறுவனம் கூறியுள்ளது. வேலைவாய்ப்பில் உள்நாடு மற்றும் சர்வதேச அளவிலான தேவைகளுக்கு ஏற்ப திறன் வாய்ந்த பொறியாளர்களை உருவாக்கும் நோக்குடன் இளம் பொறியாளர் பட்டதாரி திட்டத்தை ஆல்ஸ்டாம் நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது.
இதன் கீழ் தேர்வு செய்யப்படும் பொறியாளர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. அப்போது ஆல்ஸ்டாம் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பை இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலமாக இந்த நிறுவனத்தின் செயல்பாடு, வணிக நடவடிக்கைகள், திட்டம் மற்றும் நோக்கம் ஆகியவை குறித்து பொறியாளர்கள் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.
இளநிலை பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் என இரண்டு வகையாக தேர்வர்கள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. செயல்திட்ட பொறியாளர், ரயில் வடிவமைப்பு பொறியாளர், ரயில் இயக்க பொறியாளர், பரிசோதனை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொறியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
பின்னர் உள்நாட்டு அளவிலும், வெளிநாட்டு அளவிலும் செயல்பட்டு வருகின்ற ஆல்ஸ்டாம் நிறுவனத்தின் 4 பொறியாளர் கேந்திரங்கள், 6 உற்பத்தி ஆலைகள் ஆகியவற்றில் இந்த பொறியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
We are set to onboard 700 graduate engineers talent and train them to take up roles catering to domestic & international mobility projects🚀#YEGP2023
— Alstom India (@AlstomIndia) July 4, 2023
இதுகுறித்து ஆல்ஸ்டாம் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரயில் போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு தொடர்பான தொழில்துறை மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. அதன் தேவைக்கு ஏற்ப இளம் பொறியாளர் பட்டதாரிகளை தேர்வு செய்வதில் நாங்கள் பெருமை அடைகிறோம். எதிர்காலத்திற்கு தேவையான திறன் வாய்ந்த இந்திய பணியாளர்களை உருவாக்குவதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்” என்று கூறினார்.
மும்முரமாக நடைபெற்ற ஆள்சேர்க்கை: தங்கள் நிறுவனத்திற்கு திறன் வாய்ந்த பொறியாளர்களை தேர்வு செய்யும் விதமாக நாடெங்கிலும் ஆல்ஸ்டாம் நிறுவன அதிகாரிகள் சுற்றுப்பயணம் செய்து பணியாளர்களை தேர்வு செய்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்கள் முதல் குஜராத் வரை, காஷ்மீர் முதல் கேரளா வரை என 26 மாநிலங்களில் பயணித்துள்ளனர்.
சிறப்பு வாய்ந்த 54 பல்கலைக்கழகங்களுக்கு நேரில் சென்று மாணவர்களிடம் நேர்காணல் நடத்தி பணியாளர்களை தேர்வு செய்துள்ளனர். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமெண்டேஷன் போன்ற பிரிவுகளின் கீழ் பயின்ற மாணவர்களை இந்த நிறுவனம் தேர்வு செய்துள்ளது.