அமெரிக்காவில் உள்ள இண்டியானாவை சேர்ந்த 2 குழந்தைகளின் தாயான ஆஷ்லே சம்மர்ஸ் (Ashley Summers), கடந்த மாத இறுதியில் கொளுத்தும் வெயிலுக்கு நடுவே கடுமையான டிஹைட்ரேஷனை உணர துவங்கி இருக்கிறார். 35 வயதான இவர் தனது கணவர் மற்றும் 2 இளம் மகள்களுடன் லேக் ஃப்ரீமேன் என்ற இடத்தில் வசித்து வந்தார்.
டிஹைட்ரஷனாக உணரும் போதிலும் திருப்தி அடையும் அளவுக்கு தன்னால் தண்ணீர் குடிக்க முடியவில்லை என்று தன் குடும்பத்தாரிடம் இவர் கூறியிருக்கிறார். இந்த சூழலில் டிஹைட்ரேஷனை சமாளிக்க மற்றும் தனக்கு ஏற்பட்ட அதீத தாகத்தைத் தணிக்க குறைந்த நேரத்திற்குள் மிக அதிக தண்ணீரை அவர் குடித்திருக்கிறார். இதன் காரணமாக அவர் வாட்டர் டாக்ஸிட்டி (water toxicity) எனப்படும் அறிய நிலையால் பாதிக்கப்பட்டு இறுதியில் உயிரிழந்திருக்கிறார். மிக குறுகிய நேரத்தில் அதிக தண்ணீர் குடிப்பதன் காரணமாக ஏற்படும் அரிய மற்றும் ஆபத்தான விளைவு நீர் நச்சுத்தன்மை எனப்படும் வாட்டர் டாக்ஸிட்டி.
20 நிமிடங்களுக்குள் சுமார் 2 லிட்டர்:
water toxicity-ஆல் உயிரிழந்த ஆஷ்லேவின் சகோதரர் டெவோன் மில்லர் கூறுகையில், தாகம் மற்றும் டிஹைட்ரேஷனை தணிக்கும் நோக்கில் 20 நிமிடங்களுக்குள் சுமார் 2 லிட்டர் தண்ணீரை தனது சகோதரி குடித்ததாக கூறி இருக்கிறார். நாளொன்றுக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க பொதுவாக நிபுணர்கள் பரிந்துரைக்கும் நிலையில், ஒரு நாளுக்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு நீரை மிக குறுகிய நேரத்திற்குள் குடித்திருக்கிறார் ஆஷ்லே. இதுவே அவருக்கு எமனாக மாறி இருக்கிறது.
ஆஷ்லே அனுபவித்த டிஹைட்ரேஷன் அறிகுறிகள்:
ஆஷ்லே தனது குடும்பத்தினரோடு ஒரு பயணத்தில் இருந்திருக்கிறார். பயணத்தின் கடைசி நாளில் தன்னால் போதுமான அளவு தண்ணீர் குடிக்க முடியவில்லை என ஆஷ்லே உணர்ந்திருக்கிறர். லேசான தலைசுற்றல் மற்றும் தீவிர தலைவலி இருப்பதாக தனது குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார்.இது போன்ற பல அறிகுறிகளோடு பயணத்தை நிறைவு செய்த ஆஷ்லே, தனது கேரேஜ் வந்த பிறகு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக குடும்பத்தினர் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர், சிகிச்சை அளித்தும் அவர் சுயநினைவிற்கு திரும்பவில்லை. ஒருகட்டத்தில் water toxicity காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
நீர் நச்சுத்தன்மை (Water toxicity) என்றால் என்ன?
Water toxicity என்பது வாட்டர் பாய்சனிங் அல்லது வாட்டர் இன்டாக்ஸிகேஷன் என்றும் குறிப்பிடப்படுகிறது. மிக குறுகிய நேரத்தில் அதிக தண்ணீர் உட்கொள்ளும் போது அல்லது அடிப்படை சுகாதார நிலைமைகள் காரணமாக சிறுநீரகங்கள் அதிக நீரை தக்க வைத்து கொண்டால் Water toxicity பிரசசனை ஏற்படுகிறது. உடல்நிலை சரியில்லாமல் போவது, தசைப்பிடிப்பு, வலி, குமட்டல் மற்றும் தலைவலி போன்றவை நீர் நச்சுத்தன்மை சிக்கலின் அறிகுறிகளாகும்.
நீர் நச்சுத்தன்மையால் ஏன் ஒருவர் இறக்கிறார்.?
கொளுத்தும் கோடை வெயில், தொடர்ந்து வெளியிடங்களுக்கு வெயிலில் சென்று வேலை செய்வது அல்லது அடிக்கடி அதிக உடற்பயிற்சி செய்வதால் ஒருவர் டிஹைட்ரேஷனுக்கு ஆளாகலாம். இதனால் தாகத்தை தணிக்க அல்லது இழந்த நீர்ச்சத்தை மீட்க ஒருவர் குறுகிய நேரத்தில் மிக அதிக அளவு தண்ணீர் ஒருவர் குடித்தால், அவர்கள் உடலில் திடீரென அதிக அளவு தண்ணீர் அதிகரிப்பதோடு, போதுமான சோடியம் அவர்களது உடலில் இருக்காது. இதன் காரணமாகவே உயிரிழப்பு அபாயம் ஏற்படுகிறது. ஒருவர் டிஹைட்ரேஷனை எதிர்கொண்டால் எலக்ட்ரோலைட்டுகள், சோடியம் மற்றும் பொட்டாசியம் கொண்ட திரவங்களை குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.
சமீபத்தில் பதிவான மற்றொரு பாதிப்பு...
75 Hard என்ற சவாலுக்காக 12 நாட்களுக்கு தினமும் 4 லிட்டர் வரை தண்ணீரைக் குடித்த கனடாவைச் சேர்ந்த டிக் டாக்கர், ஒரு கட்டத்தில் நீர் விஷமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு நாளுக்கு தேவையான தண்ணீரை ஒரு சில மணிநேரங்களில் குடிப்பதால், ஒருவர் குடிக்கும் நீரே அவருக்கு விஷமாகிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.