தேநீர் மீதான காதல் இந்தியர்களிடம் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஒற்றுமை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இந்தியாவில் டீ பிரியர்கள் அதிகம். காலை எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு டீ குடிப்பது தான் நம்மில் பலரது முதல் வேலையாகவே இருக்கும். தேநீர் குடித்த உடன் நமக்கு ஏதோ புதுவித ஆற்றல் கிடைத்ததாக நாம் உணர்வோம். அந்த ஆற்றலை கொண்டு நாள் முழுவதும் ஓட்டி விடுவோம். அந்த அளவுக்கு டீயானது நமது வாழ்க்கையில் வேரூன்றி உள்ளது. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு டீ குடிப்பதால் தவறொன்றும் இல்லை. ஆனால் அதிக அளவில் டீ குடிப்பது நிச்சயமாக நம் உடலில் நாள்பட்ட சிக்கல்களை ஏற்படுத்தும்.
இது போன்ற சூழ்நிலையில் டீயை ஒரேடியாக தவிர்த்து விடுவது நல்லதா? ஒரு மாதத்திற்கு டீ குடிக்காமல் இருந்தால் நம் உடலில் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்? இந்த கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
முற்றிலுமாக டீயை தவிர்ப்பதால் கிடைக்கக்கூடிய பலன்கள்: ஒரு மாதத்திற்கு டீ குடிக்காமல் இருப்பதால் நமது உடலில் காஃபைன் உட்கொள்ளல் குறைகிறது. இதன் காரணமாக நமக்கு ஆழ்ந்த மற்றும் மேம்படுத்தப்பட்ட தூக்கம் கிடைப்பதோடு பதட்டம் குறைகிறது.
டீயில் டையூரிடிக் விளைவுகள் இருப்பதன் காரணமாக டீயை அதிக அளவில் குடிப்பதால் நம் உடலில் இருக்கக்கூடிய நீர்ச்சத்து குறைகிறது.
எனவே டீ குடிப்பதை கைவிடுவது டீஹைட்ரேஷன் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதற்கு உதவும். அதுமட்டுமல்லாமல் டீ குடிப்பதை விடுவது நமது செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்கிறது. இதன் காரணமாக செரிமான பிரச்சனைகள் மற்றும் ஒரு சில வகையான புற்று நோய்கள் தடுக்கப்படுகிறது.
டீயை முற்றிலுமாக தவிர்ப்பதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்: ஒரு சிலருக்கு டீ குடிப்பது சௌகரியம் மற்றும் ஒரு வித ஓய்வை அளித்து வந்ததால் டீ குடிப்பதை நிறுத்தியவுடன் மன ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. டீ குடிப்பதை விட்டவுடன் சிலருக்கு சோர்வு, மந்தத்தன்மை, தூக்க கலக்கம், தலைவலி, கவனிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் உண்டாகலாம். எனினும் இதுபோன்ற அறிகுறிகள் சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். உடலானது தேநீர் இல்லாமல் இருப்பதற்கு தன்னை பழகிக் கொண்டவுடன் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
டீக்கு பதில் என்ன குடிக்கலாம்? ஒருவேளை உங்கள் டயட்டிலிருந்து டீயை முற்றிலுமாக நீக்குவதற்கு நீங்கள் முடிவு செய்து இருந்தால், நீங்கள் டீக்கு பதிலாக மூலிகை தேநீர், பழச்சாறு அல்லது வெந்நீர் போன்றவற்றை முயற்சி செய்யலாம்.
சாமந்திப்பூ, புதினா போன்ற காஃபைன் இல்லாத தனித்துவமான சுவை கொண்ட மூலிகை தேநீர்கள் நம் உடலுக்கு சாதகமான பல விளைவுகளை தருகிறது.
குறிப்பாக ஆப்பிள் அல்லது கிரான்பெர்ரி போன்ற பழச்சாறுகள் இயற்கையாகவே காஃபைன் இல்லாத காரணத்தினால் நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.
அதுமட்டுமல்லாமல் வெந்நீருடன் எலுமிச்சை அல்லது தேன் சேர்த்து குடிப்பது தேநீரைப் போல நமக்கு கதகதப்பையும், சௌகரியத்தையும் தர உதவுகிறது.
எனினும், ஒரு சில நபர்கள் கட்டாயமாக டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது. உணர்திறன் கொண்ட வயிறு (சென்சிடிவ் ஸ்டொமக்) அல்லது நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படும் நபர்கள் காஃபைன் மற்றும் டானின் உள்ள டீயை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் டீயை மிதமான அளவு உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அதிகப்படியான தேநீர் வளர்ந்து வரும் சிசுவை பாதிக்கலாம்.
இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்த சோகையினால் அவதிப்படும் நபர்கள் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
டீயில் உள்ள டானின் இரும்புச்சத்து உறிஞ்சுதலை தடுக்கிறது. எனவே ரத்த சோகை நிலை இன்னும் மோசமாக கூடும்.
இறுதியாக உங்கள் தனிப்பட்ட ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நீங்கள் டீ குடிக்கலாமா, ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம் என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலை தெரிந்து கொள்ள நீங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.