இந்தியாவில் இதய நோயால் ஏற்படும் மரணம் சமீப ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. உலகெங்கிலும் உள்ள மக்களை விட இந்தியர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பே இதய நோய் தாக்குவது நம் உடல் ஆரோக்கியம் பற்றிய அச்சத்தை மேலும் அதிகரித்து உள்ளது.
இந்தியாவில் குறிப்பாக 30 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களிடையே மாரடைப்பு பாதிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் மாரிமுத்து இன்று காலை திடீர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இது திரைத்துறை மட்டுமன்றி மக்களிடையேயும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இவர் பரியேறும் பெருமாள் , ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். 56 வயதே ஆன இவர் காலையில் திடீரென மாரடைப்பால் இறந்தது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
பல பிரபலங்கள் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது சாதாரண மக்களாகிய நம் மனதில் ஒரு கேள்வியை எழுப்புகிறது. மாரடைப்பைக் கணிக்க முடியுமா.? என்பது தான் அது..இது குறித்து கூறும் பிரபல இதய நிபுணர் டாக்டர் அங்கூர் பதர்பேகர், ஆரம்ப கட்டத்தில் மாரடைப்பை கண்டறிவது மக்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். இருப்பினும், மார்பு வலியுடன் கூடிய அதிக வியர்வை நாம் காணக்கூடிய பொதுவான அறிகுறியாகும். அதிக வியர்வை, மூச்சுத் திணறல், அசௌகரியம் போன்றவற்றுடன் தொடர்புடைய மார்பு வலி பல நேரங்களில் தீவிர இதய கோளாறுகள் இருப்பதற்கான அறிகுறியாகும்.
ஆனால் மக்களோ அசிடிட்டி அல்லது தசை வலியாக இருக்கலாம் என்று நினைத்து புறக்கணிக்கிறார்கள். இதுபோன்ற அறிகுறிகளை உணர்ந்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று ECG செய்து மருத்துவ கவனிப்பை பெறுவது மிகவும் அவசியம்.
சில நேரங்களில் அதிகப்படியான களைப்பு மற்றும் சோர்வும் கூட மாரடைப்பிற்கான அறிகுறிகளாகும். எனவே இயல்பாக இல்லாத எந்த அறிகுறிகளும் எப்போதும் மருத்துவர்கள் மூலம் பரிசோதிக்கப்பட வேண்டும். இதய ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க மாதந்தோறும் ECG டெஸ்ட் செய்து கொள்வது நல்லது.
அதே போல இளைஞர்கள் தங்களுக்கு எற்படும் இடது பக்க நெஞ்சு வலி மாரடைப்பு காரணமாக இருக்கும் என்று நினைப்பதில்லை. அறிகுறிகள் முற்றிய பிறகு மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். எனவே சிறிது சிறிதாக அடைப்புகள் அதிகரிக்கின்றன. கடுமையான எந்த அடைப்பும் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதய கோளாறு அல்லது உயர் ரத்த அழுத்தத்திற்கு முன்கூட்டியே சிகிச்சை அளிக்காவிட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்.
அடல்ட் கார்டியாலஜி நிபுணரான டாக்டர் ஜெய்தீப் மேனன் கூறுகையில், பெரும்பாலான நபர்களுக்கு மாரடைப்பின் உண்மையான வலிக்கு முன் ஒரு புரோட்ரோம் உள்ளது. இது வாயு வெடிப்பு, குடல் இயக்கத்திற்கான தூண்டுதல், குமட்டல், அமைதியின்மை, சோர்வு போன்றவையாக உள்ளது.
இது மாரடைப்பு நிகழ்வு ஏற்படுவதற்கு சில மணிநேரங்கள் அல்லது நாட்களுக்கு முன்னதாக ஏற்படலாம். குறிப்பாக இதய நோய்க்கான ஆபத்து உள்ள நபர்களில் அறிகுறிகள் எதுவும் தொடர்ந்து இருக்காது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. வெப்பம் மற்றும் குளிர் ஆகியவை உச்சத்தில் இருக்கும் போது கடும் இதய கோளாறு பாதிப்புகளும் நாட்டில் அதிகரிக்கிறது. மாரடைப்பால் ஏற்படும் இறப்பைத் தடுக்க, அவசர CCU கவனிப்பு தேவை என்றார். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், குடும்ப உறுப்பினர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தால் ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
Click here for more Health Tip
Click here to join whatsapp group for daily health tip