உப்பில்லாத உணவு குப்பையிலே என்ற பழமொழிக்கு ஏற்ப, சரியான அளவில் உப்பு இல்லாத உணவு சுவை குறைவாக இருக்கும். இனிப்புச் சுவை உணவுகளுக்குக் கூட உப்பை கொஞ்சம் சேர்ப்பது சுவையை பல மடங்கு அதிகரிக்கும். உப்பில் பல வகைகள உள்ளன என்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம். இயற்கையாகவே சில சத்துக்கள் மற்றும் குணமாக்கும் பண்புகள் கொண்ட பல வகையில் உப்பு இருக்கிறது. இதில் இந்துப்பு என்று கூறப்படும் பிங்க் நிற உப்பு, கருப்பு உப்பு, கடல் உப்பு, தூள் உப்பு என்று பல வகைகளில் எதை உணவில் சேர்க்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
உப்பு என்பது சுவைக்காக மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் நீர்ச்சத்தை சரியான அளவில் வைப்பதிலும், உடல் ரீதியான ஒரு சில செயல்பாடுகள் சீராக இருப்பதற்கும் உதவியாக இருக்கிறது
உப்பு எந்த அளவுக்கு ஆரோக்கியமானதோ, உணவின் சுவைக்கு எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு அதிக உப்பு என்பது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய தன்மையையும் கொண்டுள்ளது. அதிகமாக உப்பு சேர்க்கப்படும் உணவுகளை சாப்பிடும் பொழுது எலெக்ட்ரோலைட் இம்பேலன்ஸ் ஏற்படும்; நரம்புகள் அனுப்பும் சமிக்ஞைகள் பாதிக்கப்படும்; தசைகளில் இருக்கும் ஊட்டச்சத்து குறையும்; உடலில் இருக்கும் நீர்ச்சத்து வற்றும் அபாயம் ஏற்படும்; இதுமட்டும் அல்லாமல் இன்றைய கால கட்டத்தில் உயிர் கொல்லியாக அறியப்படும் ஹைபர்டென்ஷன் என்று சொல்லப்படும் உயர் இரத்த அழுத்தத்திற்கு அதிக உப்பு காரணமாக கூறப்படுகிறது. எனவே எந்த வகை உப்பை உணவில் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொண்டு பயன்படுத்துவது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
கடல் உப்பு : கடல் உப்பு என்பது இயற்கையாகவே கனிமச்சத்துக்கள் நிறைந்த கடலில் இருந்து நேரடியாக எடுக்கப்படும் ஒரு உப்பு வகையைக் குறிக்கிறது. பொதுவாக நம் சமையலறையில் கல்லுப்பு என்று சொல்லப்படும் சின்ன சின்ன கற்கள் போல வெள்ளை நிறத்தில் இருக்கும் உப்புதான் கடலுப்பு. ஆனால் இந்த கடல் உப்பு, வெண்மை நிறம் பெறுவதற்காக பல விதமான ரசாயனங்கள் மற்றும் கெமிக்கல் பிராசஸ்களுக்கு உட்படுத்தப்படுகின்றது. கடல் நீரை ஆவியாக்கி, அதிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் உப்பில் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகிய மூன்று முக்கிய கனிமங்களும் இருக்கின்றன. கடல் உப்பு, டேபிள் சால்ட் என்று கூறப்படும் தூள் உப்பை விட மிகவும் ஆரோக்கியமானது.
பிங்க் சால்ட் (இந்துப்பு) : வெளிர் பிங்க் நிறத்தில் காணப்படும் பிங்க் சால்ட் என்று அழைக்கப்படும் இந்துப்பு, இமாலய மலைப் பிரதேசங்களில் கிடைக்கிறது. மலைகளில் இது பாறைகளாக வெட்டி எடுக்கப்பட்டு சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. எந்த விதமான ரசாயனங்கள் அல்லது கெமிக்கல் ப்ராஸசிங்கிற்குக்கு உட்படுத்தப்படவில்லை என்பதால், இதில் அதிக சத்துக்கள் உள்ளன மற்றும் உடலுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. வழக்கமாக நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் டேபிள் சால்ட் மற்றும் கல் உப்பை விட, இதை தினசரி உணவில் சேர்த்தால் உடலுக்கு தேவையான சோடியம் மற்றும் இயற்கையான கனிமச் சத்துக்கள் போதுமான அளவு கிடைக்கும். அது மட்டுமல்லாமல் குறைவாக உப்பு சாப்பிட வேண்டும் என்று விரும்புபவர்கள், பிங்க் சால்ட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கருப்பு உப்பு : பிங்க் சாட்டை போலவே ஒரு சில மலைப்பாங்கான இடங்களில் பழுப்பு முதல் கருப்பு நிறங்களில் கனிமங்கள் நிறைந்த, கருப்பு உப்பு கிடைக்கும். இதுவும் ஒருசில மலைப்பிரதேசங்களில் கிடைக்கக்கூடிய உப்பு வகைகளில் ஒன்று. கருப்பு உப்பு ஒரு விதமான வித்தியாசமான வாசனையை கொண்டிருப்பதால் ஒரு சிலருக்கு பிடிக்காமல் போகலாம். அதேபோல ஒரு சிலருக்கு இதை சாப்பிடும் பொழுது ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
டேபிள் சால்ட்: டேபிள் சால்ட் என்பதை நாம் தினசரி சமையலில் பயன்படுத்தக்கூடிய மற்றும் பொதுவாக பலவிதமான பாக்கெட்டில் வரும் உணவுகளில் அதிகமாக பயன்படுத்தக்கூடிய தூள் உப்பை குறிக்கிறது. இது வெள்ளை நிறமாக இருப்பதற்காக பலவித ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. எனவே டேபிள் சால்ட்டை குறைவாக பயன்படுத்த வேண்டும்.
உணவில் உப்பு சேர்ப்பதை தவிர்க்கவே முடியாது. ஆனால் எந்த அளவு சேர்க்கிறோம் என்பது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் வெளியான டயட்டரி கைடுலைன்கள் அடிப்படையில், ஒரு நாளைக்கு ஒரு நபர் 2300 மில்லி கிராம் அளவிற்கு மேல் உப்பை உட்கொள்ளகூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் சராசரியாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 3393 மில்லி கிராம் அளவுக்கு சோடியம் உட்கொள்கிறார்கள். தூள் உப்பில், சின்ன சின்ன துகள்களில் சோடியம் அதிகமாக இருக்கிறதுல் எனவே இதற்கு பதிலாக கிரிஸ்டல்களாகவும் கற்கள் போல இருக்கும் உப்பை பயன்படுத்தலாம்.