ஒரு சிலரை பார்க்கும் போது அமைதியாக, சாந்தமாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அவர்கள் மனதிற்குள் கவலைகளும் பதட்டமும் நிரம்பிக்கிடக்கும். எதனால் ஒருவருக்கு இதுபோன்ற கவலைகள் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணத்தை அவ்வுளவு எளிதில் கூறிவிட முடியாது. ஏனென்றல் இது நபருக்கு நபர் மாறுபடும். கடந்த காலத்தில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவங்கள், மன அழுத்தம் நிறைந்த தினசரி வாழ்க்கை, கலாச்சார விதிமுறைகள், சமூக எதிர்பார்ப்புகள், மரபணு, போன்றவை இதற்கு பொதுவான காரணமாக இருக்கலாம்.
ஒருவர் கவலையாக இருக்கிறார் என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. சிலர் கவலையாக இருந்தாலும் வெளியுலகிற்கு சந்தோஷமானவராக காட்டிக் கொள்வார். கவலை என்பது ஒருவித மனநோய். இது நம் தினசரி வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவரை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாத்தித்து அவரது அறிவாற்றலை சீரழிக்கும். ஆகவே இவ்வுளவு முக்கியத்துவம் வாய்ந்த கவலை தொடர்பான எச்சரிக்கை அறிகுறிகளை நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
கவலை, பதட்டம் போன்றவற்றின் பொதுவான அறிகுறிகள் :
எதிலும் பரிபூரணம்: சிலர் எல்லாவற்றிலும் பரிபூரணமாக இருக்க வேண்டும், எதிலும் கச்சிதமாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஒருவேளை அப்படி இல்லாதபட்சத்தில் அவர்களுக்கு மனச்சோர்வு உண்டாகிறது.
அதிகப்படியான யோசனை: எப்போதும் கடந்த காலத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது எதிர்காலத்தில் எப்படியிருக்கப் போகிறோம் என அடிக்கடி கவலைப்படுவதால் மனச்சோர்வு அதிகமாகிறது.
அடிக்கடி கவலைப்படுவது: வாழ்க்கையை பற்றியோ, வேலை, உறவுகள், உடல்நலம் மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புகள் பற்றி அடிக்கடி கவலைப்படுவது.
உடல்ரீதியான அறிகுறிகள்: தலைவலி, வயிற்று வலி அல்லது தூக்கமின்மை, தசைபிடிப்பு போன்றவை கவலை காரணமாக வரும் உடல்ரீதியான அறிகுறிகளாகும்.
புறக்கணித்தல்: உங்களுக்கு கவலை, பதட்டத்தை உண்டாக்கும் சந்தர்ப்பங்களை, மனிதர்களை அல்லது நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது.
விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளாமை: உங்களை பற்றி யாராவது விமர்சித்தால், அதை தனிப்பட்ட தாக்குதலாக கருதுவது அல்லது அந்த விமர்சனம் குறித்து அதிகப்படியாக சிந்திப்பது.
காலம் கடத்தல்: ஒரு விஷயத்தை நம்மால் செய்ய முடியுமா என்ற பயம் அல்லது பதட்டம் காரணமாகவோ அல்லது இதை செய்தால் நாம் தோல்வி அடைந்துவிடுவோமா என ஒரு விஷயத்தை செய்யாமல் தள்ளிப்போடுவது.
அடுத்தவர்களின் கவனத்தைக் கோருவது: நமது செயல்களுக்கு அடுத்தவர்களின் பாராட்டை, கவனத்தை எதிர்பார்ப்பது. எல்லாரிடமும் நல்லவராக இருக்க வேண்டும் என உங்கள் உண்மையான தோற்றத்தை அடுத்தவர்களிடம் மறைப்பது
முடிவெடுப்பதில் சிரமம்: தவறான முடிவு எடுத்துவிடுவோமோ என்றும் அதற்கான பின்விளைவுகளை நாம்தான் சந்திக்க வேண்டும் என்றும் பயந்து எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாமல் சிரமப்படுவது.
கவலைகளை குறைக்கும் வழிமுறைகள்:
நீங்கள் கவலைப்படுவதால், எந்தளவிற்கு உங்கள் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகிறது என்பதை முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான சிந்தனைகளை எப்படி வளர்த்துக்கொள்வது மற்றும் கவலைகள், பதட்டங்களில் இருந்து எப்படி வெளியேறுவது போன்றவற்றை தெரிந்துகொள்ள அறிவாற்றல் பழகுமுறை சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.
சரிவிகித உணவுப்பழக்கம் மற்றும் சீரான உடற்பயிற்சி உங்களின் கவலையை குறைத்து புத்துணர்ச்சியை உண்டாக்கும்.
ஒரே நேரத்தில் அதிகப்படியான வேலையை செய்யாமல், அதற்கென நேரம் ஒதுக்கி கொஞ்சம் கொஞ்சமாக முடியுங்கள். இதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் வீணான பதட்டத்தை குறைக்க முடியும்.
🔻 🔻 🔻