இந்தியாவில் சமீப காலங்களில் பக்கவாதம் ஏற்படுவது 100 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக சில பகுப்பாய்வு முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. உண்மையில், பக்கவாதம் இப்போது நாட்டில் இறப்புக்கான இரண்டாவது முக்கிய காரணியாக உள்ளது.
ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரம் மக்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் கிட்டத்தட்ட ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதை காட்டுகிறது. மேலும், ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கு ஒருவர் பக்கவாதம் ஏற்பட்டு மரணிக்கிறார் என்ற தகவலும் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பக்கவாதம் தடுப்பு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் பாரம்பரிய மருத்துவம் பாராட்டுக்குரிய முன்னேற்றங்களைச் செய்திருந்தாலும், இயற்கையான முறைகளை மேம்படுத்தினால் இந்தியாவில் ஏற்படும் பக்கவாத பாதிப்புகளை கணிசமாக குறைக்கலாம் என கூறப்படுகிறது.
வாழ்க்கை முறையில் நல்ல மாற்றங்களை சீராக செயல்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.
பக்கவாதம் எப்படி ஏற்படுகிறது?
மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் ரத்தத்தை வழங்குவதற்குப் பொறுப்பான ரத்த நாளங்கள் தடுக்கப்பட்டால் அல்லது ரத்தம் செல்வதில் ஏதேனும் குளறுபடிகள் ஏற்பட்டால் பக்கவாதம் ஏற்படுகிறது. இது மூளையின் ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். இதனால் மூளையின் செல்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு அவை அழிந்து போகும்.
2 வகையான பக்கவாதம் உள்ளன. அவை கீழே வருமாறு…
இஸ்கிமிக் பக்கவாதம்: ரத்த உறைவு காரணமாக இது ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 80 விழுக்காடு பக்கவாத நோயாளிகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
ரத்தக்கசிவு பக்கவாதம்: இந்த வகை மூளையில் அல்லது அதற்கு அருகில் உள்ள ரத்தக் குழாய் வெடிக்கும்போது ஏற்படுகிறது.
பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை இயற்கையாக குறைப்பது எப்படி?
ஜிண்டால் நேச்சர்க்யூர் இன்ஸ்டிடியூட் உதவி தலைமை மருத்துவ அலுவலர் ஸ்ரீகாந்த் எச்.எஸ், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கான சில இயற்கை வழிகளைப் பகிர்ந்து கொண்டார்:
ஆரோக்கியமான எடை: பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதில் எடையை பராமரிப்பது முக்கியம். அதிக எடை மற்றும் உடல் பருமன் இரண்டும் பக்கவாதத்திற்கான முதன்மை ஆபத்து காரணிகளாக அமைகின்றன. மேலும் அவை உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பிற நோய்களுடன் தொடர்பு கொண்டுள்ளதால், உயிருக்கு ஆபத்தாக அமைகின்றன.
தினமும் உடற்பயிற்சி: ஆபத்தைக் குறைப்பதற்காக தினமும் சாதாரண உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இது நம் உடலில் ஆரோக்கியமான எடையை கட்டுப்பாடுடன் வைத்திருக்க உதவுகிறது.
உணவில் கவனம்: சத்தான உணவை எடுத்துக்கொள்வது எடை நிர்வாகத்திற்கு பெரிதும் உதவுவது. அதுமட்டுமல்லாமல் பக்கவாதம் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடைய பிற காரணிகளிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நல்ல தூக்கம்: வளர்ந்து வரும் வேலை அழுத்தங்கள், பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொள்ளாமல் நன்றாக எப்படி தூங்குவது என்பது குறித்து சிந்தியுங்கள். தூக்கத்தின் தரத்திற்கும், பக்கவாதம் ஏற்படும் அபாயத்திற்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க தொடர்பை பல ஆய்வு முடிவுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. போதிய தூக்கமின்மை, சோர்வு, நினைவாற்றல் குறைபாடு, பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்றவை பக்கவாதம் ஏற்படுவதற்கான தாக்கங்களையும் கொண்டுள்ளது.
புகைபிடிப்பதை கைவிடவும்: சிகரெட் புகையில் உள்ள நிகோடின் ரத்தத்தில் தீங்கு விளைவிக்கும் எமனாக செயல்படுகிறது. அதன் உறைவு தன்மையை புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரிப்பதால் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை உடலில் வளர்க்கிறது. எனவே, புகைபிடிப்பதைத் தவிர்ப்பது பக்கவாதத்தின் அபாயத்தைக் குறைப்பதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் ஒரு முக்கியமான படியாகும்.
மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்: மன அழுத்த சூழ்நிலைகளுக்கு உங்களை வெளிப்படுத்துவது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். போதிய ஓய்வு, நீட்டிக்கப்பட்ட வேலை நேரம், மன உளைச்சல் ஆகியன மன அழுத்தத்தை அதிகரிக்க பங்களிக்கின்றன. இவை அனைத்தும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்திற்கு பங்களிக்கும் என்பதை மறைந்துவிடாதீர்கள்.
நீரிழிவு நோயை நிர்வகிக்கவும்: நீரிழிவு நோய் பக்கவாதத்திற்கு குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாக உள்ளது. உயர் ரத்த சர்க்கரை அளவு ரத்த நாளங்களில் சேதம் ஏற்படுத்துவதால், அதனை கட்டுக்குள் வைத்திருப்பதை உறுதி செய்யவும். எந்த ஒரு சூழலிலும் சுய மருத்துவம் செய்யாமல், தேவையானவற்றை மருத்துவரின் ஆலோசனைபடி அணுகுவது சிறந்ததாக இருக்கும்.
🔻 🔻 🔻