தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) ஆதிதிராவிட / பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில் தமிழ்நாடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது
இதில், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் (Self Employment Programme for Youth (SEPY) கீழ் படித்த, வேலையற்ற இளைஞர்கள் தாட்கோ நிறுவனத்திடம் இருந்து ரூ.2.25 லட்சம் வரை தொழில் மானியம் பெற்று வருவாய் ஈட்டும் தொழிலை மேற்கொள்ளலாம்.இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம்: படித்த, வேலையற்ற அல்லது குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் ஆதி திராவிட இளைஞர்கள் தங்களுக்கு தெரிந்த விருப்பமான தொழிலில் மானியம் மற்றும் கடன் உதவி பெற்று வருவாய் ஈட்டி பயன்பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் பொருட்டு இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தகுதி: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) மிகாமல் இருக்க வேண்டும்; வயது 18-க்கு மேல் 35-வயதிற்குள்ளாகவும் இருக்கவேண்டும்; கடன் மற்றும் மானியம் கோரும் தொழிலை பற்றி அறிந்தவராகவோ அனுபவம் உள்ளவராகவோ இருக்க வேண்டும்; விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்கக் கூடாது; தாட்கோ, மாநில அல்லது மத்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட தொழில் பயிற்சி நிறுவனங்களின் தகுதிச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
திட்டமதிப்பீட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக 30% அல்லது ரூ.2.25 இலட்சம் இதில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். இவ்வாறு விடுவிக்கப்படும் மானியம் முன் விடுவிப்பு மானியமாக (Front End Subsidy) இருக்கும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் கீழ்கண்ட நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்: - துவங்க உத்தேசித்துள்ள தொழிலை விண்ணப்பதாரரே தெரிவு செய்து கொள்ள வேண்டும்; இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்து விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே - பதிவு செய்யப்பட வேண்டும்; விண்ணப்பதாரர் தொழில் புரிவதற்காக கடன் மற்றும் மானியம் பெறப்பட்ட மாவட்டத்திலேயே தொழில் புரிய வேண்டும்.
விண்ணப்பம் பெறும் முறை:- விண்ணப்பம் இலவசமாக மாவட்ட மேலாளர்கள் அலுவலகத்தில் வழங்கப்படும் அல்லது தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.tn.gov.in) உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யலாம். இணையதளத்தில் Self Employment Programme for Youth என்ற இணைப்பைக் கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் (2 நகல்களில்) விண்ணப்பதாரரின் புகைப்படம் ஓட்டப்பட்டு கீழ்க்கண்ட ஆவணங்கள் இணைத்து மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சாதி சான்று; குடும்ப ஆண்டு வருமானச் சான்று; குடும்ப அட்டை நகல் / வட்டாட்சியர் கையொப்பமிடப்பட்ட இருப்பிட சான்று; விலைப்புள்ளி டின் எண்னுடன் (Quotation with TIN No.); ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் (வாகன கடனுக்கு மட்டும்); முன் அனுபவச் சான்றிதழ்; மாவட்ட மேலாளர் மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்கள்
திட்ட மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு சொத்து உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதை உறுதியளித்து விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதார்களைத் தெரிவு செய்யும் முறை: மாவட்ட மேலாளர்களால் பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து மாவட்ட அளவிலான கீழ்கண்ட அலுவலர்களைக் கொண்ட தேர்வுக் குழு விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும்.மாவட்ட மேலாளர் தலைவர்/ மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் உறுப்பினர்/ பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் - உறுப்பினர் ஆகியாரைக் கொண்ட தேர்வு குழுவினரால் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தாட்கோ மானியத் தொகைக்கான பரிந்துரையுடன் வங்கிக்கு அனுப்பப்படும்.
நிதி விடுவிக்கும் முறை:- வங்கிகடன் தொகை அளிப்பதற்கான ஒப்புதல் கடிதம் (Form III) பெறப்பட்டவுடன் தாட்கோ மானியம் மாவட்ட ஆட்சியரின் செயல்முறை ஆணைப்படி வங்கிக்கு நேரடியாக விடுவிக்கப்படும். வங்கி மேலாளர், திட்ட மதிப்பீட்டின்படி சொத்து உருவாக்குவதற்கான தொகையினை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள நிறுவனத்திற்கு தொழில் புரியத் தேவையான பொருட்கள் / வாகனங்கள் வாங்குவதற்காக நேரடியாக விடுவிப்பார்.
🔻🔻🔻