அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) தரவுகளின் படி, 2022-23ம் கல்வியாண்டில் பொறியியல் படித்த மாணவர்களில் 80 விழுக்காடு பேர் வளாக வேலைவாய்ப்புகள் வாயிலாக (Placement Campus) பணி நியமனங்களை பெற்றுள்ளனர். பொறியியல் படித்த மாணவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புக் கிடைக்காது இருந்த நிலையில், தற்போதைய போக்கு ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஏஐசிடிஇ தரவுகளின் படி, 2022-23ம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை, சான்றிதழ் பட்டயம் என அனைத்து நிலைகளின் கீழ் பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்களில், 80.9 விழுக்காடு மாணவர்கள் வளாக வேலைவாய்ப்புகள் வாயிலாக (Placement Campus) பணி நியமனங்களை பெற்றுள்ளனர். கொரோனா பெருந்தொற்று பரவிய காலகட்டங்களான 2020-21ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 62 விழுக்காடாகவும், 2021-22ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 62.9 விழுக்காடாகவும் இருந்தது. அதேபோன்று, கொரோனா தொற்றுக்கு முந்தைய 2018-19ம் கல்வியாண்டில் 48.9 விழுக்காடாகவும், 2019-20ம் கல்வியாண்டில் 57.3 விழுக்காடாகவும் மட்டுமே இருந்தது.
கொரோனா தாக்குதலுக்குப் பிந்தைய உலகில், தொழிலாளர் சந்தை (Labour Market) முழு வீச்சில் செயல்பட தொடங்கியதும், வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சிகளில் மாணவர்கள் அதிகம் ஈடுபட தொடங்கியதும் இந்த சமீபத்திய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், கொரோனா தொற்று முடிவடைந்த 2 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்திய பொருளாதாரம் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் உற்பத்தியை விரிவாக்கம் செய்து வருகின்றன . இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அதேபோன்று, ஏஐசிடிஇ நிர்வாகம் நிர்வகித்து வரும் internship portal-லும் இதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார். இந்த இன்டெர்ன்ஷிப் போர்டல் மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சி (இன்டெர்ன்ஷிப்) சேவையை வழங்கி வருகிறது. இந்த இணையப்பக்கம் இன்டெர்ன்ஷிப் தேடும் மாணவர்களையும், தனியார் வேலை வழங்குவோரையும் ஒருங்கிணைக்கிறது. உள்ளகப் பயிற்சியை முடித்த மாணவர்கள் அதே நிறுவனத்தில் பின்னாட்களில் பணி நியமனங்களைப் பெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், ரோபோடிக்ஸ் என்ஜினியரிங், பெட்ரோலியம் என்ஜினியரிங், வானூர்தி அறிவியல் (Aeronautics), செயற்கை நுண்ணறிவு / இயந்திரக் கற்றல் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகி வருவதாகவும் தெரிவித்தார்.
🔻🔻🔻