விரைவில், மாவட்ட கலைத்திருவிழாவும், அதைத் தொடர்ந்து மாநில கலைத்திருவிழா போட்டிகளும் நடக்கவுள்ளதால், திறமை காட்ட மாணவ, மாணவியர் இப்போதிருந்தே தயாராக வேண்டியுள்ளது.பள்ளி கல்வித்துறை சார்பில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் தனித்திறனை வெளிக்கொணர, கலைத்திருவிழாக்கள் நடத்தப்படுகிறது.
இதில், தனிநபர், குழு நடனம் துவங்கி, பாடல் ஒப்புவித்தல், கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடப்போட்டி, பேச்சு மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல், மெல்லிசை, களிமண் பொம்மை செய்தல், நாட்டுப்புற கலை சார்ந்த நடனம் உள்ளிட்ட, 27 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி அளவிலான கலைத்திருவிழா, அக்., மூன்றாவது வாரம் நடத்தி முடிக்கப்பட்டது.
ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பிடம் பெற்ற மாணவியர் தற்போது, வட்டார அளவில் நடந்து வரும் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்று வருகின்றனர். நடப்பு வாரம் இப்போட்டிகள் முடிந்த பின், நவ., 11 முதல், 20ம் தேதி வரை, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி நடத்தப்பட உள்ளது.
கலையரசன், கலையரசி யார்?
இப்போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகிறது. மாநில போட்டியில் பங்கேற்று, வெற்றி பெறுவோருக்கு கலையரசன், கலையரசி விருது மற்றும் சான்றிதழ் தமிழக அரசின் மூலம் வழங்கப்படுகிறது. விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து சாதித்து வரும் திருப்பூர், கலைத்திருவிழா போட்டிகளில் கலக்க வேண்டும்.