பால் பண்ணை ஆரம்பித்தவுடன் லட்சங்களில் வருமானம் கிடைத்து விடாது. மாட்டுப் பண்ணையைப் பற்றிய தெளிவான புரிதலும், சொந்த உழைப்பும், முழுமையான ஈடுபாடும் இருந்தால் மட்டுமே நல்ல வருமானம் பார்க்க முடியும்’’ என்கிறார் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆனந்த சுந்தரம்.
கன்னியாகுமரியில் இருந்து 4 கி.மீ தொலை வில் உள்ளது மகாதானபுரம். அங்குள்ள அக்ரஹாரத் தெருவில் இருக்கிறது ஆனந்த சுந்தரத்தின் வீடு. வீட்டின் ஒரு பகுதியாகவே இருக்கிறது மாட்டுப்பண்ணை. இதமான மழைச்சாரல் இருந்த ஒரு காலை நேரத்தில் அவரைச் சந்தித்தோம். “நம்ம மாட்டுப்பால்ல போட்ட காபியைக் குடிங்க இதமா இருக்கும்” என, ஆவி பறக்க சூடான காபியைக் கையில் கொடுத்தபடியே பேசத் தொடங்கினார். “அடிப்படையில் விவசாயக் குடும்பம். தாத்தா காலத்துல முழுமையா விவசாயம் நடந்துச்சு. வாழைதான் எங்க பகுதியில முக்கியமான சாகுபடி. ரஸ்தாலி, பூவன், செவ்வாழை ரக வாழைகளை ஆரம்பத்துல சாகுபடி செஞ்சோம். அப்பா டாக்டர்ங்கிறதுனால விவசாயத்துல சரியா கவனம் செலுத்த முடியல.