Agri Info

Adding Green to your Life

June 18, 2022

எடை குறைக்கும் ஜப்பானிய உடற்பயிற்சி

June 18, 2022 0


 இன்றைய சூழலில் உடல் எடையைக் குறைப்பது பலருக்கும் சவாலாக உள்ளது. இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம். மருத்துவ மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களும் பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில், ஜப்பானியர்கள் அறிமுகம் செய்த 'டவல் உடற்பயிற்சி' பற்றி தெரிந்துகொள்வோம். வயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க இந்தப் பயிற்சி உதவுகிறது. ஜப்பானின் புகழ்பெற்ற மசாஜ் நிபுணரான மருத்துவர் தோஷிகி புகுட்சுட்ஸியால் இந்தப் பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டது. இது உடல் எடையைக் குறைப்பதுடன், முதுகு வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் இடுப்பைச் சுற்றி இருக்கும் அதிகப்படியான சதை மற்றும் உடல் எடை குறையும். 'டவல் உடற்பயிற்சி' 



செய்முறை:

 1. கை, கால்களை நன்றாக நீட்டி தளர்த்திய நிலையில், தரையில் விரிக்கப்பட்ட பாயின் மேல், மேற்கூரையைப் பார்த்தவாறு படுத்துக்கொள்ளுங்கள்.

2. தொப்புளுக்கு நேர் கீழே, முதுகுக்கு அடியில், ஒரு டவலை நன்றாக சுருட்டி வைத்துக்கொள்ளுங்கள். 

3. கால்கள் இரண்டையும் 10 செ.மீ. இடைவெளியில் நகர்த்தி, தோள்பட்டை தரையில் படுமாறு வைத்திருங்கள்.

 4. கைகளை தலைக்கு மேலே தூக்கி, உள்ளங்கைகள் தரையைப் பார்த்தவாறு இருப்பதுபோல் செய்யுங்கள்.

 5. இந்த நிலையில் குறைந்தது 5 நிமிடங்களாவது இருக்க வேண்டும். பிறகு உடலை மெதுவாகத் தளர்த்தி, இயல்பு நிலைக்கு வரவும்.


 மேலே குறிப்பிட்ட முறைப்படி தொடர்ந்து பயிற்சி செய்தால், விரைவாக உடல் எடை குறையும் என மருத்துவர் தோஷிகி கூறுகிறார். 



எடைக் குறைப்பு விஷயத்தில், மேற்கொள்ளும் பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றினால் மட்டுமே பலன் கிடைக்கும். 

அவ்வாறே, இந்த டவல் உடற்பயிற்சியினைத் தினமும் செய்தால் சரியான உடலமைப்பைப் பெற முடியும். உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி மட்டுமின்றி, உணவிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். 

துரித உணவுகள், கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள், ஆல்கஹால் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், குறைந்த கலோரி கொண்ட உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். தேவையான தண்ணீர் குடித்து, முறையாக உடற்பயிற்சி செய்து, சரியான நேரத்தில் தூங்கி எழுந்து, மனஅழுத்தம் இல்லாமல் வாழ்ந்தால், உடல் இளமையாகவும், அழகாகவும் இருக்கும்.

June 11, 2022

ரூ.1000 ஊக்கத்தொகையுடன் போட்டித் தேர்வு பயிற்சிகள்: அரசு முக்கிய அறிவிப்பு

June 11, 2022 0

 படித்த வேலையற்ற எஸ்சி/எஸ்டி சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இலவச போட்டித்தேர்வு பயிற்சிகள் வழங்கும் திட்டத்தை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் (National  Career  Service  Centre  for  SC/STs) அறிவித்துள்ளது.



இதுகுறித்து, துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பில், " சென்னை, புதுச்சேரியில்  11 மாத கால அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்கான போட்டித்தேர்வு பயிற்சி, கணினிப்பயிற்சி சுருக்கெழுத்து பயிற்சி ஆகியவை இலவசமாக திறன்வாய்ந்த தனியார் பயிற்சி நிறுவனம் மூலம் 01 ஜூலை 2022 முதல் ஆரம்பமாக உள்ளது.

பயிற்சி காலத்தில் உதவித்தொகை ரூ 1000/-,வழங்கப்படும் மற்றும் இலவசமாக போட்டி தேர்வு பயிற்சி புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்களும் வழங்கப்படும்.

இந்த பயிற்சியில் சேர்ந்து பயனடைய விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய விருப்ப மனுவை கல்வி மற்றும் குடும்பம் பற்றிய சுய விபரங்களுடன் துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், மூன்றாம் தளம், வேலைவாய்ப்பு அலுவலகம் சாந்தோம், சென்னை , தமிழ்நாடு என்ற முகவரிக்கு 24.06.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டுகிறோம். இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் 27 வயதுக்குள் இருக்கவேண்டும்.

மேலும், விவரங்கள் மற்றும் வழிகாட்டுதலுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் www.labour.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.



கோடை கால பயணத்துக்கு அவசியமான குறிப்புகள்

June 11, 2022 0

 கோடை காலத்தில் தொடர் விடுமுறைகள் கிடைப்பதால் சுற்றுலா அல்லது உறவினர் வீடுகளுக்கு செல்வதற்கு பெரியவர்களும், குழந்தைகளும் ஆர்வமாக இருப்பார்கள். கொரோனா தொற்றை சமாளித்து மீண்ட இன்றைய சூழலில் வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். சுற்றுலா பயணத்திற்காக வீட்டிலிருந்து கிளம்பும்போது சமையல் எரிவாயு இணைப்பு, மின்சார இணைப்பு, போர்வெல் மோட்டார் சுவிட்ச், தண்ணீர் குழாய்கள், அறைகளில் ஒளிரும் மின்விளக்குகள் ஆகியவை அணைக்கப்பட்டிருப்பதை ஒருமுறைக்கு, இருமுறை பார்த்துக்கொள்ள வேண்டும்.


பயணங்களின்போது குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் உடன் இருந்தால், அவர்களுக்கு தேவையான வசதிகளை முன்னதாக திட்டமிட்டு ஏற்பாடு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டார மொழி, அங்குள்ள தகவல் தொடர்பு வசதிகள், தங்குமிடம் ஆகியவற்றில் கவனம் வேண்டும். கோடைகாலம் என்பதால் பருத்தி ஆடைகளே நல்லது. மேலும், வெப்பத்தை ஈர்க்கும் அடர்ந்த நிற ஆடைகள் அணிவதை தவிர்க்கவும். காரில் செல்பவர்கள் வெயில் அதிகம் இல்லாத காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிக்கலாம். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு, 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை ஓய்வெடுப்பது கட்டாயம். பயணம் செல்லும் வழித்தடங்களில் எங்கெங்கு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளன என்பதையும், வாகன பழுது பார்ப்பு வசதிகள் கிடைக்கும் என்பதையும் அறிந்திருப்பது அவசியம்.


வெளியிடங்களில் சாப்பிடும்போது அசைவ உணவுகள், பழக்கமில்லாத புதிய ரெசிபிகள், எண்ணெய்யில் வறுத்த சிற்றுண்டிகள் ஆகியவற்றை உண்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பயணங்களின்போது ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவு வகைகளே உடல் நலனுக்கு ஏற்றது. வெளியூர் பயணங்களின்போது அவசரத் தேவைக்காக முக்கிய மருந்துகள் அடங்கிய சிறிய முதலுதவி பெட்டியை எடுத்துச்செல்வது அவசியம். அதில், அன்றாடம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை தகுந்த அளவுக்கு இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான டயாப்பர், பால், பிஸ்கட் ஆகியவற்றை தேவையான அளவு கொண்டு செல்வது நல்லது. 


ரெயில் பயணங்களின்போது மற்றவர்கள் தரும் பானங்கள், பிஸ்கட்டுகள் உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளை வாங்கி சாப்பிடக்கூடாது. கொரோனா தாக்குதல் முற்றிலும் அகலாத நிலையில், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், நெரிசலில் இருந்து ஒதுங்கியிருத்தல், ரெயில் பெட்டிகளில் கதவு, ஜன்னல் உள்ளிட்ட இதர பகுதிகளை அவசியமில்லாமல் தொடுவதை தவிர்த்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்கவும். அவ்வாறு தொட நேர்ந்தால் சானிட்டைசர் கொண்டு கைகளை கழுவ வேண்டும்.


June 5, 2022

8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.25,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு !

June 05, 2022 0

 

8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.25,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு !

Psychiatrist, Medical Officer பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாத தொடக்கத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு என 14 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


TNHRCE வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பின் படி, மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் Psychiatrist பணிக்கு MBBS with Diploma In Psychiatric Medicine, Medical Officer பணிக்கு MBBS மற்றும் Nurse பணிக்கு Diploma in Nursing Home Guardian பணிக்கு Degree in Masters of Social welfare, MSW, Social Worker பணிக்கு Bachelor of Social welfare (BSW), Maintenance Assistant மற்றும் Vocational Trainer பணிக்கு ஏதேனும் ஒரு Degree மற்றும் Watchman பணிக்கு 08 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
  • 01.05.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதார்கள் இந்த பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் குறைந்தது ரூ.9,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை வழங்கப்பட உள்ளது. மேலும் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TNHRCE Palani Notification & Application

Download TNHRCE Official Website

TET - ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எப்போது நடைபெறும்?

June 05, 2022 0

 ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக 2020, 2021-ம் ஆண்டுகளில் டெட் தேர்வு நடத்தப்படவில்லை.

கரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு டெட் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, தேர்வுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

6.33 லட்சம் பேர் விண்ணப்பம்

இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்-1, பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 இரண்டையும் சேர்த்து டெட் தேர்வுக்கு 6 லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான அறிவிக்கையில் தேர்வு எப்போது நடத்தப்படும் எந்த முறையில் (ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்) நடத்தப்படும்என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.

டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தனியார் பயிற்சி மையங்கள் வாயிலாகவும், சுயமாகவும் படித்து வருகிறார்கள். ஆனால் தேர்வு தேதி குறித்து எவ்வித அறிவிப்பும் ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை வெளியிடாததால் தேர்வர்கள் சோர்வடைந்துள்ளனர்.

அதிகாரி தகவல்

இந்நிலையில், டெட் தேர்வு நாள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘டெட் தேர்வை ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித்தேர்வு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் பணி ஓய்வுபெற்று வரும் நிலையில், ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

For More All Job Notification Link : Click Here

June 3, 2022

போட்டித் தேர்வுகள் எதை சார்ந்துஇயங்குகின்றன -அறிவை சார்ந்ததா, ஆளுமை சார்ந்ததா? - நீந்திக் கடப்போம்… வா!

June 03, 2022 0

 போட்டித் தேர்வுகள் எதை சார்ந்துஇயங்குகின்றன என்று முதலில்யோசிப்போம். அவை அறிவை சார்ந்ததா, ஆளுமை சார்ந்ததா? அல்லது, இரண்டும் கலந்த கலவையா?

அறிவை சார்ந்தது என்று முடிவுக்கு வந்தால், அறிவின் அடிப்படை தகவலை சார்ந்தது. தகவல்களின் திரட்சி அறிவு என இன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக, அரசுப் பணிகள், நிர்வாகக் கட்டமைப்பின் அடிப்படையில் 3 வகைப்படும். ஒன்று,கீழ்நிலைப் பணிகள். 2-வது, இடைநிலைப் பணிகள். 3-வது, மேல்நிலைப் பணிகள். இதில் வெறும் தகவல் சார்ந்த வினாக்கள் கீழ்நிலைப் பணிகளுக்கே கேட்கப்படுகின்றன.

இதில் கீழ்நிலைப் பணியாளர்களின் தன்மை எது என்று கேட்டால், உயரதிகாரியால் கொடுக்கப்படும் பணிகளை செய்து முடிப்பது. அவற்றை பொருத்தவரை சிக்கல் தீர்க்கிற, முடிவெடுக்கிற திறன் எதிர்பார்க்கப்படுவது இல்லை. இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் போன்ற குரூப்-4 பணிகளைச் சார்ந்த அவர்களுக்கு வேலைக்கான தேர்வுகளில் தகவல்சார்ந்த கேள்விகளே கேட்கப்படுகின்றன. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியே போதுமானதாகிறது. சுருக்கெழுத்தர், தட்டச்சர் போன்றோருக்கு கூடுதலாக, அதுசார்ந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படுகிறது.

அதற்கு மேல் இடைநிலைப் பணிகள். இவர்களைப் பொருத்தவரை, கீழ்நிலை ஊழியர்கள் தங்கள் பணிகளை சரியாக செய்தார்களா என்று மேற்பார்வையிடும் பொறுப்பு உண்டு. மாநில அரசு நிர்வாகத்தை பொருத்தவரை இது குரூப்-2, 2A போன்ற பிரிவாகக் கருதப்பட்டு, இவர்களுக்கான கல்வித் தகுதியாக பட்டப் படிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


இந்த இரண்டும் மத்திய அரசுப் பணிகளுக்கும் பொருந்தும். இங்கு TNPSC எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போல, மத்தியில் SSC எனப்படும் Staff Selection Commission இதற்கான அதிகாரப்பூர்வ தேர்வு வாரியம் ஆகும். SSC தேர்வு முறைப்படி, கீழ்நிலைப் பணிகளுக்கு NTS எனும் பிரிவிலும், இடைநிலைப் பணிக்கு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு நிலை தேர்வும் நடத்தப்படுகிறது.

இப்போது, மேல்நிலைக்கு வருவோம். அதாவது குரூப்-2 பிரிவு.இப்பிரிவில் தேர்வாகிறவர்கள் அதிகாரிகளாகப் பொறுப்பேற்கிறார்கள். அவர்கள் கீழ்நிலையில் உள்ள எழுத்தர்கள் போலவோ, இடை நிலையில் உள்ள மேற்பார்வையாளர்கள் போலவோ செயல்பட முடியாது. அவர்கள் ஆளுமையை பயன்படுத்துபவர்களாக, கொள்கை வகுப்பாளர்களாக, முடிவெடுப்பவர்களாக, துறையின் நோக்கத்தையும், போக்கையும் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். இதில் மாநில அரசுப் பணியாக இருந்தால் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 பிரிவு அலுவலர்கள். அதாவது, துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட பதிவாளர், கூட்டுறவு சங்கதுணை பதிவாளர், வணிக வரி உதவிஆணையர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு, மீட்புப் பணிகள் அலுவலர் ஆகியோர்.

இதுவே மத்திய அரசுப் பணியாக இருந்தால், UPSC நடத்தும் IAS, IPS, IRS, IFS போன்று 24 விதமான உயர் பதவிகள் இருக்கின்றன. இப்பதவிக்கும் கல்வித்தகுதி பட்டப் படிப்பே. ஆனால் குரூப்-1 தேர்வு - குரூப்-2 தேர்வு இரண்டுக்கான போட்டித் தேர்வு முறைகளில்தான் வேறுபாடு இருக்கிறது.

UPSC நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வில் 3 நிலைகள் உள்ளன. முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam), முதன்மைத் தேர்வு (Main Exam), மற்றும் ஆளுமைத் தேர்வு (Personality Test). ஏன் இப்படி மூன்று நிலைகள்? அடிப்படையில் இது வடிகட்டல் முறை. இதில் முதல்நிலைத் தேர்வில் அனைத்து வினாக்களும் கொள்குறி வினாக்கள் (Objective Type Questions). பல லட்சம் பேர் விண்ணப்பிக்கும் இத்தேர்வில் எத்தனை பேருக்கு சிந்தனைத் தெளிவு இருக்கிறது, எத்தனை பேரிடம்தெளிவான தகவல் அறிவு புதைந்திருக்கிறது என்பது சோதிக்கப்படுகிறது. அதாவது Concept Clearing and Knowledge Clearing ஆகிய இரண்டையும் சோதிக்கும் களமாக முதல்நிலைத் தேர்வு இருக்கிறது.

முதல்நிலைத் தேர்வு என்ற சிறுநதியைக் கடந்து கரையேறுபவர்களுக்கு அடுத்த களம் முதன்மைத் தேர்வு. இது அனைத்து கேள்விகளுக்கும் சொந்தமான நடையில் விவரித்து விடையளிக்கும் (Descriptive) தன்மையில் அமைந்துள்ளது. அதிலும் பக்கம் பக்கமாக நாம் கதை எழுத முடியாது. ஒரு வினா கேட்கப்பட்டு, 30 வரிகள் இடம் விடப்பட்டிருந்தால் அந்த அனுமதிக்கப்பட்ட வரிகளுக்குள் உங்களால் தெளிவான பதிலை அளிக்க முடிகிறதா என்பதை சோதிக்கும் முயற்சியே அது.

முதல்நிலைத் தேர்வில் சரியானவற்றை தேர்வு செய்யும் திறனும்,முதன்மைத் தேர்வில் கொடுக்கப்பட்ட சிக்கலுக்கு சரியான தீர்வு எழுதும் திறனும் சோதிக்கப்படுகிறது. இறுதியாக ஆளுமைத் தேர்வு.

இதில் பெரிதாக பாட வினாக்கள் கேட்கப்படுவது இல்லை. அரை மணி நேரம் உங்களோடு உரையாடுவதில் இருந்து, உங்கள் ஆளுமையை எடைபோடும் முயற்சி. வெகு சாதாரணமான கேள்விகள்கூட கேட்கப்படலாம். உங்கள் சொந்த ஆளுமையைக் கண்டறிந்து, கொடுக்கப்படும் பணிக்கு இவர் சரிப்பட்டு வருவாரா? என்று பொருத்திப் பார்க்கும் நடைமுறை இது. டிஎன்பிஎஸ்சியிலும் சில பணிகளுக்கு ஆளுமைத் தேர்வு இருக்கிறது. ஆளுமைத் தேர்வு பல்வேறு ஆளுமை கூறுகளைக் கண்டறியும் முயற்சியே அன்றி வேறில்லை. முதல் இரண்டும் சிறு, பெரு நதிகள் என்றால், மூன்றாவதான ஆளுமைத் தேர்வானது நதி கடலோடு சேரும் கழிமுகப் பகுதியாக உள்ள ஒரு காயல் போன்றது. சரியான பயிற்சி இருந்தால், இந்த மூன்றையும் மூச்சடக்காமலே நீந்திக் கடக்கலாம்... வா..!

TNPSC EXAMS | வெற்றிக்கான மூன்று சூத்திரங்கள்! | TNPSC போட்டித்தேர்வு

June 03, 2022 0

 போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் புதிய பகுதி ‘வெற்றி மேடை உனதே’. வருமான வரித் துறை கூடுதல் ஆணையரும், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியாளருமான வீ.நந்தகுமார் ஐஆர்எஸ், நல்ல பல வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை இத்தொடரில் உங்களுக்காக வழங்க உள்ளார். வாசிக்கத் தயாராகுங்கள். இனி, ‘வெற்றி மேடை உனதே!’

- 1 -

போட்டித் தேர்வு எனும் பந்தயக் களத்தில் இருவேறு மாணவர்களை சந்தித்துக்கொண்டே வருகிறேன். இதில் வெல்பவர்களைவிட தோற்பவர்களே அதிகம். அவர்களை தோல்வியாளர்கள் என்பதைவிட வெற்றியைவிட்டு சற்று விலகி நிற்பவர்கள் என்றே கூறவேண்டும். ஏனென்றால், இந்த பிரபஞ்சத்தில் தோற்றவர்கள் என்று யாருமே கிடையாது. மனிதனாகப் பிறப்பெடுத்ததே உயிரியல் உலகில் ஓர் உயிரணுவின் வெற்றி என்றுதான் கொள்ள வேண்டும்.

அப்படி வெற்றியைவிட்டு விலகி நிற்பவர்களிடம் பேசும்போது அவர்கள் கூறுவது, பொதுவான காரணங்களாகவே உள்ளன. ‘‘பயிற்சி வகுப்புக்குசெல்ல முடியவில்லை, பயிற்சிக்கான புத்தகங்கள் கிடைக்கவில்லை, சரியான வழிகாட்டுதல் இல்லை, தொடர் பயிற்சி எடுக்க முடியவில்லை, நேரம் போதவில்லை..’’ என்பன போன்ற சுய காரணங்கள் முதல் ரகம்.

‘‘நன்றாகத்தான் படித்தேன், எதிர்பார்த்த மாதிரி வினாத்தாள் இல்லை, என் சூழ்நிலை சரியில்லை..’’ என்பன போன்ற சூழ்நிலை காரணங்கள் இரண்டாவது ரகம்.

இதையும் தாண்டி சிலர் சொல்லும் காரணம் ஒன்று உண்டு. ‘‘நன்றாகத்தான் எழுதினேன், சூழ்நிலையும் ஒத்துழைத்தது. ஆனால் என் கெட்ட நேரம் 2 மதிப்பெண்ணில் வாய்ப்பை இழந்துவிட்டேன்’’ என்பார்கள்.

100 கேள்விகள் கொண்ட ஒரு தேர்வை எடுத்துக்கொள்வோம். ஒருவேளை அதில் 50 கேள்விகளுக்கு சரியாக விடையளித்து, 50 மதிப்பெண் பெற்றால் முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்று விடலாம் என்றும் வைத்துக்கொள்வோம். தோற்றவரிடம் கேட்டால், ‘‘48 கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தேன். ஜஸ்ட் 2 மார்க்குல போய்டுச்சு’’ என்பார்.

இதுபோன்றவர்களின் இலக்கு குறைந்தபட்ச தேவை எதுவோ, அதை நோக்கியே இருந்திருக்கிறது. 50 எடுத்தால் தேர்ச்சி என்றால், அந்த 50-ஐ நோக்கியே பயணிப்பார்கள். 70, 80 என்பது இவர்களது இலக்காக இருப்பதில்லை.

பார்க்கப்போனால், முழு மதிப்பெண் 100 என்றால், நமது இலக்கும் அந்த உச்சபட்ச எல்லையை நோக்கியதாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் குறைந்தபட்ச எல்லையை உறுதியாக எட்ட முடியும்.

எவ்வளவு கட்-ஆஃப் மதிப்பெண்ணோ, அதை மட்டும் எட்டினால் போதும் என்று நினைப்பவர்களின் அணுகுமுறையில் நிறைய தடைகள் இருக்கின்றன. அவை களையப்பட வேண்டும். அந்த தடைகளை எப்படி உடைப்பது என்பதை, நீண்ட நாள் போட்டித் தேர்வு பயிற்சி அளித்த என் அனுபவங்களில் இருந்து கற்றுத்தர விரும்புகிறேன்.

எந்தெந்த காரணங்களால் போட்டித் தேர்வில் தோல்விகள் நேர்கிறது? அவற்றை எப்படி களைவது என்பதை சொல்வதுடன், வெற்றிக்கான காரணங்கள் எவை என்பது பற்றியும் சொல்லித்தர விரும்புகிறேன்.

வெற்றிக்கான சூத்திரங்கள் மூன்றுவழிகளில் காத்திருக்கின்றன. ஒன்று,கவனக் குவிப்போடு தயாராவது, இரண்டாவது, பயிற்சி எடுத்துக்கொண்டு தயாராவது, மூன்றாவது நாம் படிப்பதெல்லாம் தேர்வில் வருமா என்பதை கணித்து தயாராவது.

ஆக, எந்த ரூபத்திலாவது நாம் வெற்றியின் பக்கம் இருக்க வேண்டும் என்ற எண்ணமே, போட்டித் தேர்வர்கள் மனதில் கொள்ளவேண்டிய பிள்ளையார் சுழி.

இக்கட்டுரையில் வெற்றிக்கான சிந்தனை, வெற்றிக்கான செயல் இரண்டையும் பார்ப்போம்.

முதலில் போட்டியாளர்கள் பற்றிபார்ப்போம். பொதுவாக, பள்ளிப்பருவத்தில் இருந்தே போட்டி என்று வந்துவிட்டால் குறிப்பிட்ட ஒருசிலரே பெயர் கொடுப்பதை பார்த்திருப்போம். போட்டிக்கென்று பிறந்தவர்கள் போலவே இருப்பார்கள். அவர்கள் பெயர் கொடுக்காவிட்டாலும், ஆசிரியர்களே அவர்களது பெயரை எழுதிக்கொள்வார்கள். 40 பேர் கொண்ட ஒரு வகுப்பில், போட்டிகளில் பங்கேற்பவர்கள் 7, 8 பேர்தான் இருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள்.

அப்படி வேடிக்கை பார்ப்பவர்கள்கூட, பின்னாளில் படித்து முடித்து வேலைக்கு என்று முயற்சிக்கிறபோது பிறரோடு போட்டி போட்டுத்தான் ஆகவேண்டி உள்ளது.

ஆனால் பள்ளி, கல்லூரிகளில் பேச்சுப்போட்டிக்கு பெயர் கொடுக்கும்போது, பேச்சுத் திறமையுள்ள மாணவனைப் பார்த்து தயங்கி, நாம் பெயர் கொடுக்காமல் ஒதுங்கிப் போவதுபோல, போட்டித் தேர்வுகளிலும் யாரோ ஒரு அறிவாளியோடு நாம் போட்டி போட வேண்டி இருக்குமோ என்று பயந்து, போட்டித் தேர்வுகளை கண்டு தப்பித்து ஓடுகிறோம்.

உண்மையில் இங்கு 3 விதமான போட்டியாளர்களே உண்டு. ஒன்று, அறிவிப்பு வெளியானதும் விண்ணப்பித்துவிட்டு, பின்பு ஏறத்தாழ மறந்துவிட்டு கடைசி நாளில் பெயருக்கு படித்துவிட்டு தேர்வுக்கு செல்பவர்கள்.

இரண்டாவது, விண்ணப்பித்தபிறகு நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்து தயாராகிறவர்கள்.

மூன்றாவது, விண்ணப்பித்த நாளில் இருந்தோ, அல்லது அதற்கும் முன்பிருந்தோ, தமது எண்ணம், செயல், நேரம் அனைத்தையும் அர்ப்பணித்து தேர்வுக்கு என்றே தயாராகும் ஒரு சிறிய குழுவினர்.

இந்த மூன்றாவது ரகத்தை சேர்ந்தவர்கள் வெறும் 10 சதவீதம் மட்டுமே. இவர்கள் எல்லாம் கவனக் குவிப்போடு கடமையாற்றுபவர்கள்.


June 2, 2022

காலை எழுந்ததும் வெதுவெதுப்பான நீர்... அதனால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா?

June 02, 2022 0

 காலையில் தூங்கி எழுந்ததும் பெரும்பாலான மக்கள் சூடாக ஒரு கப் டீ அல்லது காஃபி அருந்துவதை விரும்புகின்றனர். வேறுசிலர் வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கின்றனர். ஆனால், அதிகாலையில் நம் சோம்பலை முறித்து, நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள ஒரு கப் வெந்நீர் போதுமானது என ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.



அதே சமயம், காலையில் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துபவர்களுக்கு, அதீத அசிடிட்டி, அல்சர், உடல் உஷ்ணம் போன்ற பிரச்சனைகள் இருக்க கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். காலை வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் உடலுக்கு பல்வேறு விதமான நலன்கள் கிடைக்கும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.


ஆயுர்வேத மருத்துவர் தீக்‌ஷா பாவ்ஸர், வெந்நீர் அருந்துவதன் பலன் குறித்து இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக பல கருத்துக்களை கூறியுள்ளார். அவரது பதிவில் கூறியிருப்பதாவது:

காலையில் தினமும் முதல் வேலையாக வெந்நீர் அருந்துவதால் உங்களுக்கு ஒருபோதும் கவலை ஏற்படாது. ஆனால், அசிடிட்டி, அல்சர், உடல் உஷ்ணம் போன்ற பிரச்சனை இருந்தால் கவனமுடன் இருக்க வேண்டும். காலை நேரத்தில், குறிப்பாக பயணம் செய்யும் காலத்தில் வெந்நீர் அருந்தினால், உடலில் நல்ல மாற்றங்கள் தென்படுவதை நீங்கள் உணர முடியும்.

* நம் மலக்குடலை சுத்தம் செய்யும் பணியை எளிமையாக்குகிறது.
* உங்கள் பசி உணர்வு அதிகரிக்கும்.
* வயிறு உப்புசம் மற்றும் கேஸ்ட்ரிக் தொடர்புடைய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது.
* நமது சருமம் தெளிவாக இருக்க உதவுகிறது.
* இது மட்டும் அல்லாமல், பயணத்தின் போது நாம் சாப்பிடும் அதிகப்படியான உணவுகளால் நமது உடல் எடை அதிகரித்து விடாமல் தடுக்கிறது.

எந்த அளவு சூடாக தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் :

உங்கள் உடல் வாகு அல்லது தோஷ வாகுவை பொறுத்து குடிநீர் எந்த அளவுக்கு சூடாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது..


* உடலில் கபம் மிகுதியாக இருந்தால் நீங்கள் மிகுந்த சூடான தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். இது கபத்தால் ஏற்படும் நச்சுக் கழிவுகளை வெளியேற்றும்.
* உடலில் பித்தம் அதிகமாக இருந்தால், வெந்நீரை ஆற வைத்து உங்கள் உடல் வெப்ப அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* வாதம் மிகுதியாக இருப்பவர்கள் சூடாகவும் இல்லாமல், குளுமையாகவும் இல்லாமல் வெதுவெதுப்பான அளவில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் அல்லது சீராக வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் காலையில் வெந்நீர் குடிப்பது உதவியாக இருக்கும். உடலில் வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கக் கூடியதாக இது இருக்கும்.