உலகின் மிகப் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேத மருத்துவத்தில் பெரும்பாலான நோய்களுக்கு சிகிச்சை முறைகள் உள்ளன.
பருவ நிலைக்கு ஏற்றவாறு உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, மூலிகைகள் என்று சில எளிய பயிற்சிகள் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள ஆயுர்வேத பரிந்துரைகள் உள்ளன.
அந்த வகையில் ஓரல் ஹெல்து என்று சொல்லப்படும் பற்கள் மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கான மிகச் சிறந்த பயிற்சியாக எண்ணெய் கொப்பளித்தல் என்ற முறை பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.
ஆயில் புல்லிங் என்று சொன்னால் பலரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். பல் வலி, சொத்தை, ஈறுகளில் வலி, வீக்கம் உள்ளிட்ட பல்வேறு பற்கள் மற்றும் ஓரல் பிரச்சனைகளுக்கு ஆயில் புல்லிங் மிகச் சிறந்த நிவாரணமாக மற்றும் தடுப்பு முறையாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் தினமும் எண்ணெய் கொப்பளிப்பது வாயில் பாக்டீரியா சேரவிடாமல் தடுத்து, நச்சுக்களை நீக்கி, உடலுக்கு தேவையான என்சைம்களையும் வெளியிடுகிறது.
ஆயில் புல்லிங் வாய் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது மற்றும் எப்படி ஆயில் புல்லிங் வேண்டும் என்பதை பற்றிய முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
ஆயில் புல்லிங் என்றால் என்ன.?
எண்ணெய் கொப்பளித்தல் என்பது பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் ஆயுர்வேத சிகிச்சை முறையாகும். 30 க்கும் மேற்பட்ட உடலியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆயில் புல்லிங் நிவாரணமாக இருக்கிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. அது மட்டுமல்லாமல் மேலே கூறியது போல வாய் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளையும் தடுக்கிறது. ஆயுர்வேதத்தில் எண்ணெய் கொப்புளித்தல் கவாலா-கண்டுஷா என்று கூறப்படுகிறது.
கவாலா என்றால் கொப்புளித்தல் மற்றும் கண்டுஷா என்றால் வாய்க்குள் திரவத்தை வைத்துக் கொள்வது என்று அர்த்தமாகும். சிறிய அளவு எண்ணெயை வாய்க்குள் ஊற்றி, வாய் முழுவதும் படுமாறு சில நிமிடங்கள் வரை கொப்புளிக்க வேண்டும்.
ஆயில் புல்லிங் எப்போது மற்றும் எப்படி செய்ய வேண்டும்.?
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஆயில் புல்லிங் செய்ய வேண்டும்.
ஒன்று அல்லது இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெயை 15 – 20 நிமிடங்கள் வரை வாய்க்குள் வைத்து கொப்பளிக்க வேண்டும்.
எண்ணெய்யின் தன்மை மாறி, வெள்ளை நிறத்தில் லேசான நுரையோடு, பிசுபிசுப்பின்றி மாறும் வரை வாய்க்குள் கொப்பளிக்க வேண்டும். அதன் பிறகு அதை முழுவதுமாக வெளியே துப்பிவிட்டு, வாய்க்குள் தண்ணீர் விட்டு மீண்டும் கொப்பளித்து, சுத்தம் செய்ய வேண்டும்.
இதைச் செய்வதற்கு 10 – 20 நிமிடங்கள் வரை தேவைப்படுவதால் அவசரப்படாமல் நிதானமாக இதற்கென்று கால அவகாசத்தை ஒதுக்கிவிட்டு ஆயில் புல்லிங் செய்யலாம்.
ஆயில் புல்லிங் செய்த பிறகு வாயை நன்றாக தண்ணீர் விட்டு அலசுவது மிக மிக முக்கியம். அதன் பிறகு சில நிமிடங்கள் கழித்து நீங்கள் சூடான பானங்கள் அருந்தலாம் அல்லது உணவு சாப்பிடலாம்.
ஆயில் புல்லிங் செய்த பிறகு உடனே பல் துலக்க வேண்டாம். ஆயில் புல்லிங் செய்த எண்ணைய்யை முழுங்கக் கூடாது, அதை நீங்கள் வெளியே துப்பிவிட வேண்டும்.
ஆயில் புல்லிங் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் மற்றும் நெய் ஆகிய மூன்றையும் பயன்படுத்தலாம்.
ஆயில் புல்லிங் பற்றிய மற்ற விவரங்கள்
எண்ணையைப் பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்யும் பொழுது உங்களுக்கு செல் டேமேஜ் நீங்கும். அதுமட்டுமல்லாமல் பற்களில் மற்றும் வாயில் இருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நுண் கிருமிகள் அழிக்கப்படும்.
ஓரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் முழுவதுமாக நீங்கும். அது மட்டுமல்லாமல் இந்த எண்ணெய் பற்கள் மற்றும் ஈறுகளில் கோட்டிங் செய்வதால் பிளேக் உருவாக்கம் தவிர்க்கப்படும். வாய் துர்நாற்றத்திற்கு மிகச் சிறந்த தீர்வாக அமையும். மேலும் இதழ்கள் உலர்ந்து போவது, தொண்டை வலி, வறட்சி ஆகியவற்றுக்கும் நிவாரணமாக அமையும்.
தொடக்கத்தில் ஆயில் புல்லிங் செய்யும் பொழுது குமட்டுவது போல உணர்வு தோன்றும். ஆனால் நான்கைந்து நாட்கள் மட்டும் தான் இவ்வாறு இருக்கும். அதன் பிறகு பழகி விடும். ஆயில் புல்லிங் ஓரல் ஹெல்த்க்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.
முகத்திற்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, சருமத்தை இறுக்கமாக்கி இளமையான தோற்றத்தைத் தருகிறது. ஆயில் புல்லிங் ஓரல் ஹெல்த் சம்பந்தமான பிரச்சினைகளை தடுப்பதற்கு உதவுகிறதே தவிர இது நோய்க்கு சிகிச்சை கிடையாது.