இளம் வயதிலேயே நிறைய குழந்தைகளுக்கு கூன் விழுந்ததுபோல முதுகு வளைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அதை தவிர்க்கவும், குழந்தைகள் நேராக நடக்கவும், நிமிர்ந்து உட்கார பழகவும், தசைப்பிடிப்பு வராமல் ஓடவும்... சிறுசிறு உடற்பயிற்சிகள், சிறுவயதில் இருந்தே அவசியம். இது உடலை மட்டுமல்ல, மனதையும் வலுவாக்கும். மூளை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி, நினைவாற்றலை மேம்படுத்தும்.
எல்லா குழந்தைகளுடனும் பழகும் மனப்பக்குவத்தை உருவாக்கும். கணிதத் திறனை வளர்க்கும். அவர்களை எப்போதும் உற்சாகமாக வைத்துக் கொள்ளும்.
விளையாட்டு துறைகளில் சாதிக்கும் குழந்தைகள் கூட இந்த பயிற்சிகள் வாயிலாக உடலை வளைத்து நெளித்து வலுப்படுத்துகிறார்கள்.அவர்களது உடலை, விளையாட்டு பயிற்சிகளுக்காக பழக்கப்படுத்துகிறார்கள்.
இந்த விஷயத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர்தான், முன்மாதிரியாக இருக்க வேண்டும். குறிப்பாக அம்மாக்களின் வழிகாட்டுதல்களும், உடற்பயிற்சி முன்னெடுப்புகளும் அவசியம். ஏனெனில் பெற்றோர்களை பார்த்துதான், குழந்தைகள் பேச, சிரிக்க, விளையாட பழகுகிறார்கள். அந்தவகையில், குழந்தைகளுக்கு பெற்றோர்கள்தான் உடற்பயிற்சிகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும்.
வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே, உடலையும், உடல் பாகங்களையும் அசைக்கும் வகையிலான எளிய பயிற்சிகளாக இருக்கும். உட்கார்ந்து நிமிர்வது, நாற்காலி மீது ஏறி இறங்குவது, படிகளில் ஏறுவது... இப்படி அன்றாட வாழ்க்கையின் இயல்பான வேலைகளைத்தான், இதற்கு தீர்வாக மாற்றி இருக்கிறேன்.