மன உறுதி குறிப்பிட்ட அளவில் வரையறுக்கப்பட்டது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், அதை மேலும் அதிகரிக்க சில சக்திவாய்ந்த உத்திகள் உள்ளன.
முக்கியமான வேலையைச் செய்யும் போது உங்கள் கவனத்தை சிதறடித்தல் மற்றும் கட்டுப்பாடான உணவு முறையில் இருக்கும் போது அதை மீறத் தூண்டுதல் போன்று நம் சுயக்கட்டுப்பாட்டை சோதிக்கவே வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றும் சில கோரமான நாட்களை நாம் அனைவரும் எதிர்கொள்கிறோம்.
இது போன்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் மன உறுதியை நீங்கள் நம்பியிருப்பீர்கள். குறுகிய கால தூண்டுதல்களைத் தவிர்ப்பதற்கும், தேவையற்ற எண்ணங்கள், உணர்வுகள் அல்லது தூண்டுதல்களில் சிக்காமல் இருப்பதற்கான திறனை மன உறுதி என உளவியலாளர்கள் வரையறுக்கின்றனர்.
சிலர் மற்றவர்களை விட அதிக மன உறுதி கொண்டவர்களாக இருப்பார்கள். ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனி மற்றும் தொலைக்காட்சியின் தூண்டுதல் காரணமாக உங்கள் உடற்பயிற்சி இலக்குகளை நீங்கள் கைவிடும் சூழலில், பணியில் எவ்வளவு கடினமான சூழல் இருந்தாலும் தவறாமல் உடற்பயிற்சி செய்யக் கூடிய சில அதிர்ஷ்டசாலிகளை நீங்கள் காணலாம்.
சுயக்கட்டுப்பாடு மற்றும் மனக்கவனம் ஆகியவை மனநிலையால் தீர்மானிக்கப்படும் நிலையில், ஆரோக்கியம், திறனாற்றல் மற்றும் மகிழ்ச்சியுடன் அதிக மன உறுதியை உருவாக்குவதற்கான சில சிறந்த உத்திகளை புதிய ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.
சுயக்கட்டுப்பாடு குறைதல்
சமீபகாலம் வரை நடைமுறையில் இருந்த உளவியல் கோட்பாடு, மன உறுதியை பேட்டரியுடன் ஒப்பிட்டது. நீங்கள் முழு மன உறுதியுடன் ஒரு நாளைத் தொடங்கலாம், ஆனால் ஒவ்வொரு முறையும் உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் அல்லது நடத்தையைக் கட்டுப்படுத்தும் போது, அந்த பேட்டரியின் ஆற்றல் குறைகிறது. ஓய்வெடுக்கவோ அல்லது உங்களைப் புதுப்பித்துக்கொள்ளவோ வாய்ப்பில்லாத போது குறைவான பேட்டரி ஆற்றலிலேயே நீங்கள் இயங்குகிறீகள். இதனால் உங்கள் பொறுமை மற்றும் கவனத்தை பேணுவதும், நீங்கள் தூண்டுதப்படுதலைத் தடுப்பதும் மிகவும் கடினம்.
இது தொடர்பான ஆய்வில் பங்கேற்வர்களிடம் அவர்களைத் தூண்டும் விதமாக மேஜையில் பிஸ்கட்களை வைத்துவிட்டு, அதைச் சாப்பிடாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு ஒரு சிக்கலான கணிதத்தைத் தீர்க்கும் போது அவர்கள் குறைவான விடாமுயற்சியைக் காட்டினார்கள். ஏனெனில் அவர்களின் மன உறுதி அளவு தீர்ந்து விட்டது. இது சுயக்கட்டுப்பாடு குறைதல் என்று அறியப்படுகிறது. அதிக சுயகட்டுப்பாடு கொண்டவர்கள் ஆரம்பத்தில் அதிக மன உறுதியைக் கொண்டிருக்கலாம். ஆனால் அழுத்தமான சூழலில் இருக்கும் போது அவர்களும் சோர்வடைவார்கள்.
ஆனால், 2010ஆம் ஆண்டு உளவியலாளர் வெரோனிகா ஜாப் இந்த கோட்பாட்டினை கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஓர் ஆய்வு முடிவை வெளியிட்டார். சுயக்கட்டுப்பாடு குறைதல் மக்களின் நம்பிக்கைகளை சார்ந்தது என்பது அவரது வாதம்.
வியன்னா பல்கலைக்கழக உளவியல் பேராசிரியரான ஜாப், சில கேள்விகள் கொண்ட ஒரு கேள்வித்தாளை வடிவமைத்து, ஆய்வில் பங்கேற்றவர்களிடம் அதற்கான பதிலாக 1 (வலுவாக ஒப்புக்கொள்கிறார்கள்) முதல் 6 (கடுமையாக உடன்படவில்லை) என்ற அளவில் மதிப்பிடுமாறு கேட்டுக் கொண்டார்.
தொடர்ச்சியான தூண்டுதலை எதிர்கொள்ளும் போது, அதை எதிர்கொள்வது மேலும் கடினமாகிறது.
தீவிரமான மனச் செயல்பாடு உங்கள் ஆற்றலை தீர்ந்துவிடும். அதன் பிறகு நீங்கள் மீண்டும் உங்களைப் புதுப்பிக்க வேண்டும்.
நீங்கள் ஒரு வலுவான தூண்டுதலை நிராகரித்தால், நீங்கள் பலமடைவீர்கள். மேலும் புதிய தூண்டுதலையும் உங்களால் தாங்கிக்கொள்ள முடியும்.
உங்கள் மன உறுதி தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கிறது. கடுமையான மன ஆற்றல் செலவழிப்பிற்குப் பிறகும், நீங்கள் தொடர்ந்து செயல்படலாம்.
மேற்கண்ட நான்கு கேள்விகளில் முதல் இரண்டு கேள்விகளுடன் ஒத்துப்போனால் வரையறுக்கப்பட்ட அளவில் மன உறுதி உள்ளவராக நீங்கள் கருதப்படுவீர்கள். பிந்தைய இரண்டு கேள்விகளுடன் ஒத்துப்போனால் அளவற்ற மன உறுதி உடையவராகக் கருதப்படுவீர்கள்.
அடுத்ததாக பங்கேற்பாளர்களை மனதின் கவனத்தை பரிசோதிக்கும் சில நிலையான ஆய்வக சோதனைகளில் ஜாப் ஈடுபடுத்தினார். வரம்புக்குட்பட்ட மன உறுதி கொண்டவர்களிடம் சுயக்கட்டுப்பாடு குறைவதை ஜாப் கண்டறிந்தார். அதிக ஆற்றல் தேவைப்படும் ஒரு பணியைச் செய்த பிறகு அடுத்தடுத்த செயல்பாட்டில் கவனம் செலுத்துவது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனினும், அளவற்ற மன உறுதி கொண்டவர்களிடம் சுயக் கட்டுப்பாடு குறைவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.
மன உறுதி எளிதில் குறைந்துவிடும் என்று அவர்கள் நம்பினால், தூண்டுதலையும் கவனச்சிதறலையும் எதிர்கொள்ளும் திறன் விரைவில் குறைந்துவிடும். ஆனால் மன உறுதி தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் என்று அவர்கள் நம்பும்போது மேலே கூறியது நடந்தது.
சமீபத்திய ஆண்டுகளில் சில விஞ்ஞானிகள் சுயக்கட்டுப்பாடு குறைதல் தொடர்பான ஆய்வக சோதனைகளின் நம்பகத்தன்மையை விவாதத்திற்கு உள்ளாக்கினர். ஆனால் மக்களின் மன உறுதி மனப்பான்மை நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடையதை ஜாப் நிரூபித்துள்ளார். தொடர்ச்சியாக இரண்டு வார கால இடைவெளியில் பல்கலைக்கழக மாணவர்களிடம் அவர்களின் செயல்பாடுகள் குறித்த கேள்வித்தாளுக்கு தினசரி இருமுறை பதிலளிக்குமாறு ஜாப் கேட்டுக் கொண்டார்.
சில நாட்களில் அதிக தேவைகள் இருந்ததால் அவை மாணவர்களைச் சோர்வடைய வழிவகுத்தன. பெரும்பாலான பங்கேற்பாளர்கள் ஒரே இரவில் அதிலிருந்து ஓரளவுக்கு மீண்டனர். ஆனால் வரம்பற்ற மன உறுதி கொண்டவர்கள் கூடுதல் அழுத்தத்தால் உற்சாகமடைந்தது போல, மறுநாள் அவர்களின் உற்பத்தித்திறன் அதிகரித்தது. இது மீண்டும் மன உறுதி தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் என்ற அவர்களின் நம்பிக்கை யதார்த்தமாகிவிட்டது போல தோன்றியது.
கூடுதல் ஆய்வுகள், தேர்வுகளுக்கு முன்னதாக மாணவர்களின் காலங்கடத்தும் நிலைகளை மன உறுதி மூலம் கணிக்க முடியும் என்று காட்டியது. வரம்பற்ற மன உறுதி கொண்டவர்கள் குறைவான நேரத்தை வீணடித்தனர். தங்கள் கல்வி தொடர்பாக அதிக அழுத்தத்தை எதிர்கொள்ளும் போது, வரம்பற்ற மன உறுதி கொண்ட மாணவர்களால் வாழ்க்கையின் பிற பகுதிகளில் தங்கள் சுயக்கட்டுப்பாட்டை சிறப்பாக பராமரிக்க முடிந்தது.
மன உறுதி, உடற்பயிற்சி போன்ற மற்ற விஷயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். உதாரணமாக, அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழக சுகாதார அறிவியல் உதவிப் பேராசிரியர் நவீன் கௌஷல் மற்றும் அவரது சக பணியாளர்கள், உடற்பயிற்சிப் பழக்கத்தை மன உறுதியால் பாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். அளவற்ற மன உறுதியை கொண்டவர்களாகக் கருதப்படுபவர்களிடம் உடற்பயிற்சி செய்வதற்கான உந்துதல் அதிகம் இருப்பதைக் காண முடிந்தது.
ஃப்ரேசர் வேலி பல்கலைக்கழக உளவியல் பேராசிரியரான ஜோ பிரான்சிஸ் மேற்கொண்ட ஆய்வில் வியக்கத்தக்க வகையில் இதே மாதிரியான முடிவுகள் கிடைத்தன. 300க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடம் மூன்று வாரங்கள் நடந்த ஆய்வில் வரம்பற்ற மன உறுதி கொண்டவர்கள் வரம்புடைய மன உறுதி கொண்டவர்களைவிட உடற்பயிற்சி செய்ய அதிக ஆர்வம் காட்டுவதையும், நொறுக்குத்தீனி சாப்பிட குறைந்த ஆர்வம் காட்டுவதையும் அவர் கண்டறிந்தார்.
மன உறுதியை அதிகரித்தல்
நீங்கள் ஏற்கனவே மன உறுதி குறித்த வரம்பற்ற மனநிலை கொண்டிருந்தால், இந்த ஆய்வு முடிவுகள் உங்களுக்கு சுய திருப்தியைத் தரலாம். ஆனால், சுயக்கட்டுப்பாடு எளிதில் குறைந்துவிடும் என்ற அனுமானத்தின் கீழ் வாழ்ந்தால் நாம் என்ன செய்யலாம்?
இது குறித்து அறிவதன் மூலம் குறைந்த பட்சம் குறுகிய காலத்திலாவது மக்களின் நம்பிக்கைகளில் மாற்றம் ஏற்படும் என்று ஜாப்பின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்படியெனில், இந்தக் கட்டுரையை வெறுமனே படிப்பது ஏற்கனவே உங்கள் மன உறுதியை அதிகரிக்கத் தொடங்கியிருக்கலாம். நீங்கள் கற்றுக்கொண்டதை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் இதை மேலும் மேம்படுத்தலாம்.
மன உறுதியின் வரம்பற்ற தன்மை தொடர்பான பாடங்களை இளம் வயதிலேயே பயிற்றுவிக்கலாம். உடற்பயிற்சி செய்வது சோர்வடைய வைப்பதற்குப் பதிலாக மன உறுதியை அதிகரிக்க உதவும் என்று குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் வகையில் ஸ்டான்போர்ட் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு கதைப் புத்தகத்தை வடிவமைத்துள்ளனர்.
இந்தக் கதையைக் கேட்ட குழந்தைகள், மனநிறைவை தாமதிக்கும் சோதனையில் மற்ற குழந்தைகளைவிட அதிக சுயக்கட்டுப்பாட்டை வெளிப்படுத்தினர். இந்த சோதனையில் பெரிய விருந்தைப் பெறுவதற்கு முன்பாக குழந்தைகள் சிறிய விருந்தைத் துறக்க வைக்கப்பட்டனர்.
முழு மனநிறைவுடன் நீங்கள் செயல்பட்ட நேரத்தை நினைவில் வைத்துக் கொள்வது உங்கள் மனநிலையை மாற்றுவதற்கான ஒரு பயனுள்ள உத்தி. உதாரணமாக அது உங்களது அலுவலகப் பணியாக இருக்கலாம். மற்றவர்களுக்கு கடினமாக தெரிந்தது உங்களுக்கு திருப்தி தரக் கூடியதாக இருக்கலாம். அல்லது, இது உங்களுக்குப் பிடித்த ஏதேனும் பொழுதுபோக்காகவும் இருக்கலாம்.
இந்த வகையான நினைவூட்டலில் ஈடுபடுவது மக்களின் நம்பிக்கைகளை இயற்கையாகவே வரம்பற்ற மனநிலைக்கு மாற்றுவதாக ஒரு சமீபத்திய ஆய்வில் தெரியவந்தது.
உங்கள் வாழ்க்கையில் விரும்பிய மாற்றத்தை கொண்டு வரும் சிறிய சுயக்கட்டுப்பாட்டு சோதனையுடன் இதை நீங்கள் தொடங்கலாம். சில வாரங்களுக்கு நொறுக்குத்தீனி சாப்பிடுவதைத் தவிர்ப்பது, நீங்கள் வேலை செய்யும் போது சமூக ஊடகங்களில் இருந்து விலகியிருப்பது அல்லது எரிச்சலூட்டும் உங்கள் அன்புக்குரியவருடன் பொறுமையைக் கடைபிடிப்பது போன்ற சுயக்கட்டுப்பாட்டுடன் இதை நீங்கள் தொடங்கலாம்.
மன உறுதி அதிகரிக்கும் என்பதை உங்களுக்கு நீங்களே நிரூபித்தவுடன், மற்ற வகையான தூண்டுதல்கள் அல்லது கவனச்சிதறல்களை நீங்கள் எளிதாக எதிர்கொள்வதைக் காண முடியும்.
உடனடியாக அற்புதங்கள் நிகழ வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. விடாமுயற்சியுடன் உங்கள் மனநிலை மாறுவதை நீங்கள் காண வேண்டும்.