இன்றைக்கு பெரும்பாலோனோர், ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாக மாதச் சம்பளத்தை பெற்று வருவதாகவும், அதில் பெரும்பாலும், 60% ஊழியர்கள் பேரம் பேசி ஊதியத்தை பெறாமல் பணியில் சேர்வதாகவும் 'Glassdoor' என்ற நிறுவனம் தெரிவிக்கிறது. இதில், குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அதிக வருமானப் பணிகளில் சேர்வதற்கான திறன்களைப் பெற்றிருக்கும் இளைஞர்கள் கூட குறைந்த ஊதியத்தில் சேர ஒப்புக் கொள்கின்றனர். இதற்கு, முக்கியக் காரணம், பேரம் பேசினால் பணிவாய்ப்பை இழந்து விடுவோம் என்ற அச்சம். ஆனால், இது தேவையற்ற அச்சம் என்றே நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சரியான ஊதியத்தை பெறுவது எப்படி? நேர்காணல் முடிந்தவுடன், பணி அழைப்பு கடிதம் (Job Offer letter) பெற்றவுடன், உடனடியாக சம்மதிக்காமல் சிறிது காலம் எடுத்துக் கொள்ளுங்கள். அழைப்புக் கடிதத்தில் அடிகோடிட்டு காட்டப்பட்டுள்ள சம்பள விவரங்களை முழுமையாக வாசியுங்கள். அடிப்படை சம்பளம், சலுகைத் தொகை (Compensation Package) , போனஸ் ஆகியவற்றை விரிவாக கணக்கிடுங்கள். சலுகைத் தொகுப்பில் ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு, குடும்பத்தினருக்கான ஆயுள் காப்பீடு ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கலாம். அத்துடன் வருமான வரி சட்டத்தின் கீழ் உள்ள பிடித்தங்கள் மற்றும் விலக்குகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
உதாரணமாக, திட்ட மேற்பார்வையாளர் (Project Supervisor) பதவிக்கான அழைப்பு கடிதத்தில் நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் CTC வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது என எடுத்துக் கொள்வோம். இதில், பிடித்தங்கள் போக உங்கள் கையில் ரூ.35,000 வருவதாக எடுத்துக் கொள்வோம். இந்த பணிக்கான சம்பள வரம்புகளை Glassdoor, Linkedin, Payscale போன்ற இணையதளங்கள் மூலம் ஒப்பீட்டுக் கொள்ள முடியும். அதே பணிக்கு மற்றொரு நிறுவனத்தில் பணிபுரியும் நபரின் சம்பளம் குறித்து ஆய்வு செய்து கண்டறிய முடியும். இத்தகைய ஒப்பீட்டின் மூலம், விரைவான, தீர்க்கமான முடிவை நம்மால் எடுக்க முடியும்.
ஒருவேளை, பிடித்தம்போக நீங்கள் எதிர்ப்பார்த்த சம்பளம் கிடைக்கவில்லை என்றால், அது குறித்து மனிதவள அதிகாரியை (HR) தொடர்பு கொண்டு வெளிப்படையாக பேசுங்கள். சம்பளம் பெற நினைக்கும் காரணங்களை அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துங்கள். அப்போது உங்கள் பணியும், நீங்கள் கேட்கும் சம்பள தொகையும் முறையாக இருந்தால் அதை உயர் அதிகாரிகள் ஏற்கொள்ள வாய்ப்புள்ளது.
அதேநேரம் நீங்கள் கேட்கும் சம்பளத்தை HR ஏற்றுக்கொள்வார் என்பதும் உறுதியல்ல. அதற்கு நீங்கள் கேட்கும் சம்பள தொகை அவர்கள் அந்த பதவிக்கு ஒதுக்கிய வரம்புக்குள் இருக்க வேண்டும். எனவே, அவர் சொல்லும் பதிலை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் எதிர்ப்பார்த்த சம்பளத்தை கேட்காமலேயே இருந்தால் அது மிகப்பெரிய தவறாக மாறிவிடும். எனவே நீங்கள் கேட்கும் சம்பள தொகை முறையாக இருந்தால் அது கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடவேண்டாம்.
Click here for latest employment news
Click here to join WhatsApp group for Daily employment news