இன்று பலரும் இரவு நேரங்களில் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒரு மனிதன் மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் ஒரு நாளைக்கு குறைந்தது 7லிருந்து 9 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
ஒவ்வொருவரின் தூங்கும் நேரம் ஆனது மாறுபட்டாலும் இந்த குறிப்பிட்ட நேர அளவைகளுக்குள் தூங்கினால் மட்டுமே புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும். ஆனால் இன்று மாறிவரும் உணவு பழக்க வழக்க முறைகளினாலும் தவறான வாழ்க்கை முறைகளினாலும் பலரும் தூங்குவதில் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஒருவேளை இரவில் நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையான அவதிப்பட்டு வந்தால் இரவு தூங்கச் செல்வதற்கு முன் இந்த குறிப்பிட்ட உணவு வகைகளை உட்கொண்டாலே போதும்.
பால் : பாலில் உள்ள ட்ரைட்டோபான் மற்றும் வைட்டமின் டி ஆகியவை ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்ள உதவி செய்கிறது. கிடைத்துள்ள ஆய்வறிக்கையின் படி தினசரி உணவு பழக்கத்தில் பால் அல்லது வேறு பல டைரி ப்ராடக்டுகளை சேர்த்துக் கொள்பவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் கிடைக்கிறது என தெரியவந்துள்ளது.
நட்ஸ் : நட்ஸ் வகைகளில் உள்ள நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், தாது பொருட்கள் ஆகியவை அடங்கியுள்ளன. பல்வேறு வகையான நட்ஸ் வகைகள் மற்றும் விதைகளில் மெலடோனின், துத்தநாகம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை அடங்கியுள்ளன. இவை நல்ல உறக்கத்தை பெறுவதற்கு உதவி செய்கிறது. இவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது வால் நட்ஸில் அதிகம் காணப்படுகிறது. துத்தநாகம் மற்றும் மெலடோனின் ஆகியவை பாதாம் பருப்புகளில் அதிகம் காணப்படுகிறது. இவற்றை தவிர உடலுக்கு முக்கியமாக தேவைப்படும் மெக்னீசியமானது இந்த நட்ஸ் வகைகளில் நமக்கு கிடைக்கிறது. ஒருவேளை மெக்னீசியம் குறைவாக இருந்தால் அதன் காரணமாக கூட தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம். இந்த நட்ஸ் வகைகளை உட்கொள்வதன் மூலம் தூக்கமின்மை பிரச்சனை சரியாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மூலிகை தேநீர் : பண்டைய காலங்களில் இருந்தே மூலிகைகளை பயன்படுத்தி தேநீர் தயாரித்து உட்கொள்வது ஒரு மருத்துவ செயல் முறையாகவே இருந்து வந்துள்ளது. மூலிகை தாவரங்களின் பாகங்களை கொண்டு வாசனையுடன், மருத்துவ குணங்களுடன் கூடிய தேநீர் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்வதற்கும் சில மூலிகைகளை பயன்படுத்தி தேநீர் குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. உதாரணத்திற்கு லாவண்டர் ஆனது வாசனைப் பொருட்களாகவும் அதே சமயத்தில் அதனை பயன்படுத்தி தேநீரும் தயாரிக்கவும் உதவுகிறது. இவை மனதை ரிலாக்சாக வைத்துக் கொள்வதுடன் ஆழ்ந்த உறக்கத்திற்கும் உதவி செய்கிறது.
டார்க் சாக்லேட் : டார்க் சாக்லேட்டுகள் ஆரோக்கியமானவை அல்ல என்பது போன்ற கருத்துக்கள் பலகாலமாக நிலவி வந்தாலும், அதில் உள்ள செரடோனின் ஆனது மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவி செய்கிறது. டார்க் சாக்லேட் பயன்படுத்தி தயார் செய்யப்படும் உணவு வகைகளை தூங்குவதற்கு முன் உட்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தை பெற முயற்சி செய்யலாம்.
வாழைப்பழம் : வாழைப்பழத்தில் மெக்னிசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளது. இவை தசைகள் மற்றும் நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்வதோடு, அதில் உள்ள வைட்டமின் பி6 ஆனது ட்ரைட்டோபானை செரடோனினாக மற்றும் தன்மையுடையது. இது நமது மனநிலையை அமைதிப்படுத்தி ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்ள உதவி செய்கிறது.