பகல் நேரத்தில் நாம் எப்படிச் சாப்பிட்டாலும் நாம் செய்யும் வேலைக்கு அவை ஜீரணித்துவிடும். ஆனால், இரவு நேரத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும். எனவே, இரவு நேரத்தில் நாம் எளிதில் ஜீரணமாகக்கூடிய எளிமையான உணவை உண்ண வேண்டும். இல்லையெனில், அஜீரணக்கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். இரவில் சாப்பிடக் கூடாத 20 உணவுகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
தக்காளி : தக்காளியில் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடிய அமிலங்கள் அதிகமாக இருப்பதால், இவற்றை இரவில் தவிர்ப்பது நல்லது.
ஐஸ்கிரீம் : நடு ராத்திரியில் ஐஸ்கிரீம் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கும். இதனால், இரவில் தூங்குவதற்கு சிரமம் ஏற்படும்.
காபி மற்றும் டீ : இரவில் நீங்கள் பருகும் ஒரு கப் காபி மற்றும் டீயின் விளைவு எட்டு முதல் பதினான்கு மணி நேரம் வரை நீடிக்கலாம். அதுமட்டும் அல்ல, இது உங்கள் தூக்கத்தை கட்டுப்படுத்தும். எனவே, இவற்றை காலையில் பருகுவது நல்லது.
மது : இரவில் மது அருந்துவது அதிக சிறுநீர் கழிக்க தூண்டும். இதனால் அடிக்கடி எழுந்துகொள்ள நேரும். இதனால், உங்கள் தூக்கம் கெடும்.
சாக்லேட் : இரவு உணவிற்குப் பிறகு சிறிது இனிப்புகளை சாப்பிட விரும்பினால், டார்க் சாக்லேட்டை உண்ண வேண்டாம். ஏனென்றால், இதில் சிறிது அளவு காஃபினும் உள்ளது.
புரதம் நிறைந்த உணவுகள் : புரதம் அதிகம் உள்ள உணவை உட்கொள்ளும் போது, உடலில் குறைவான டிரிப்டோபான் சுரக்கிறது. இதனால், செரோடோனின் சுரப்பும் குறையும். இதனால் உங்கள் தூக்கம் பாதிக்கப்படும்.
உலர் பழங்கள் : இரவில் அதிகமாக உலர் பழங்களை சாப்பிடுவதால் இரவில் வயிற்று வலி மற்றும் மூச்சு பிடிப்புகள் ஏற்படலாம்.
பீட்ஸா : பீட்ஸாவில் மைதா, சீஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்க்கப்படுகிறது. இந்த சேர்க்கை கெட்ட அமிலங்களை உருவாக்கும். இது உங்கள் தூக்கத்தை பாதிக்கலாம்.
அதிகமாக தண்ணீர் குடிப்பது : நாம் இயல்பாக பகலில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என அனைவருக்கும் தெரியும். ஆனால், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நுகர்வை குறைக்க வேண்டும் என கூறப்படுகிறது. இரவில் அதிகமாக நீர் பருகினால், அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ வேண்டியது இருக்கும். இது உங்கள் தூக்கத்தை பாதிக்கும்.
புதினா மிட்டாய் : உணவுக்கு பின் புதினா மிட்டாய்களை உண்ணும் உங்களின் ஆர்வத்தைக் கட்டுப்படுத்துங்கள். புதினா புத்துணர்ச்சி அளிக்கும் என்பதால் நல்ல தூக்கம் வருவதையும் தடுக்கும்.
வயிறு நிறைய சாப்பிடுவது : நீங்கள் நன்றாக தூங்க நினைக்கும் போது வயிறு நிறைய சாப்பிடுவது சிறந்த யோசனை அல்ல. தூங்க செல்வதற்கு முன் வயிறு நிறைய மூச்சு முட்டும் அளவுக்கு சாப்பிடுவது அஜீரணத்தை ஏற்படுத்தும். செரிமானம் , வயிற்று கோளாறு காரணமாக தூக்கமும் தடைபடும்.
காரமான உணவுகள் : உணவில் அதிகப்படியான காரம் சேர்ப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். எனவே, இவை தூங்கும் திறனைக் குறைக்கும்.
அதிக இனிப்பான உணவுகள் : அதிக சர்க்கரை உள்ள உணவு அல்லது தானியங்களை உட்கொள்வது இரத்தத்தின் சர்க்கரையை அதிகரிக்கும். அதுமட்டும் அல்ல, உங்களின் தூக்கத்தையும் குறைக்கும்.
சிட்ரஸ் நிறைந்த பழங்கள் : ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் நெஞ்செரிச்சலை அதிகரிக்கும். எனவே, இரவு நேரத்தில் சிட்ரஸ் நிறைந்த பழங்களை தவிர்ப்பது நல்லது.
வெங்காயம் : வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அவற்றை இரவில் சாப்பிடுவது நல்லதல்ல. இரவு நேரத்தில் வெங்காயம் சேர்த்த சாலட் சாப்பிடுவதால் வயிற்றில் வாயு உருவாகும். இதனால், உங்கள் தொண்டை பகுதியில் ரிஃப்ளக்ஸ் அமிலம் சுரக்கப்படும்.
க்ரீன் டீ : க்ரீன் டீயில் காஃபி மற்றும் டீயை விட அதிக அமிலம் உள்ளது. இதை, இரவில் குடிக்கும் போது அதிக இதயத் துடிப்பு, பதட்டம் மற்றும் கவலை ஆகியவை ஏற்படலாம். எனவே, க்ரீன் டீயை பகல் நேரத்தில் குடிப்பது நல்லது.
சீஸ் : இரவு நேரத்தில் சீஸ் உட்கொள்வது தூக்கத்தின் தரத்தை குறைப்பதுடன், விழிப்புணர்வை அதிகரிக்கும்.
பொரித்த உணவு மற்றும் கெட்ச் அப் : பொரித்த உருளைக்கிழங்கு மற்றும் கெட்ச்அப் -யில் அதிக அமிலம் உள்ளது. இவை இரண்டையும் ஒன்றாக இரவு நேரத்தில் சாப்பிடுவது பல உபாதைகளை ஏற்படுத்தும்.
ஒயின் : நீங்கள் ஒயின் குடிக்கும் போது உங்கள் உடலால் அதன் REM சுழற்சியில் முழுமையாக ஈடுபட முடியாது. எனவே, இரவு நேரங்களில் இதை தவிர்ப்பது நல்லது.