நீங்கள் மற்ற மாநிலங்கள் அல்லது நாடுகளுக்கு பயணம் செய்யும்போது அந்த ஊர் கிளைமேட் மற்றும் கலாச்சாரம், இயற்கை அமைப்புகள் புதிதாக இருக்கும். அந்த தகவமைப்புகளுக்கு உங்கள் உடல் பழக்கப்படாமல் இருப்பதால் எளிதாக தொற்றுகள், பாக்டீரியாக்கள் தொற்றக்கூடும். குறிப்பாக உள்ளூர் உணவுகளை சுவைக்கவும் நீங்கள் விரும்பலாம். அதையும் கவனமுடனே சாப்பிட வேண்டும். புதிதாக செல்லும் இடங்களில் சரியான பின்பற்றுதல்கள் இல்லை எனில் நாம் ஜாலியாக பிளான் செய்த பயணத் திட்டமே பெரும் வேதனையாக மாறிவிடும். எனவே பயணத்தின் போது சில உணவுகளை தவிர்த்துவிட்டாலே நாம் திட்டமிட்ட படி பயனத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.
வேக வைக்காத அல்லது நன்கு வேக வைத்த இறைச்சி உணவுகள் : முழுமையாக வேக வைக்காத இறைச்சிகளில் பாக்டீரியாக்கள் இருக்கக் கூடும். அது நமக்கு ஃபுட் பாய்சனாக மாறலாம். எனவே சரியாக சமைக்காத, வேக வைக்காத இறைச்சி உணவுகளை தவிர்ப்பது நல்லது.
தெருவோர உணவுகள் : பொதுவாகவே தெருவோர உணவுகளை பார்த்தாலே சாப்பிட எச்சில் ஊறும். ஆனால் அது சுகாதாரமானதா என்கிற கேள்விக்கு பதில் இல்லை. ஒருவேளை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று தோன்றினால் அந்த இடம் சுகாதாரமாக உள்ளதா, சுத்தமான பாத்திரம், உணவுப் பொருட்களை சீராக சுத்தம் செய்து சமைக்கிறார்களா, வேலை செய்பவர் சுத்தத்தை கடைப்பிடிக்கிறாரா என்பதை உறுதி செய்த பின் சாப்பிடுங்கள்.
பதப்படுத்தப்படாத பால் உணவுகள் : முறையாக பதப்படுத்தாமல் பயன்படுத்தும் சீஸ், பனீர் போன்ற பால் சார்ந்த உணவுகளில் ஆபத்து நிறைந்த பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே அப்படிப்பட்ட உணவுகளை தவிர்த்தல் நல்லது.
குழாய் தண்ணீர் : செல்லும் இடங்களில் தாகமாக உள்ளது எனில் குழாய் தண்ணீர் தானே என குடித்துவிடாதீர்கள். புது இடங்களில் ஆபத்தான பாக்டீரியாக்கள், தொற்றுகள் இருக்கக் கூடும். அவை உங்கள் உடலுக்கு பழக்கமில்லாதவையாக இருக்கும். எனவே உடனே அவை உங்கள் நோய் எதிர்ப்பு திறனை அழித்து கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே எப்போதும் நீங்கள் கொண்டு செல்லும் அல்லது வாட்டர் பாட்டின் தண்ணீரை குடிப்பது நல்லது.
குளுர்ச்சியான உணவுகள் : குளுர்ச்சியான பானங்கள் குடிப்பதை தவிருங்கள். நீங்கள் குடிக்கும் பானங்களில் ஐஸ் கட்டி போட்டு குடிப்பதையும் தவிருங்கள். இது உங்களுக்கு சளி அல்லது தொண்டை கரகரப்பு, இருமலை தரலாம்.
கழுவாத பழங்கள் : காய்கறிகள் மற்றும் பழங்களை நன்கு கழுவாமல் சாப்பிட்டால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடும். எனவே நன்கு கழுவிய பழங்கள் மற்றும் வேக வைத்த காய்கறிகளை மட்டுமே சாப்பிடுங்கள்.
ஷெல் ஃபிஷ் : ஷெல் ஃபிஷ் மீன் வகைகளான இறால், நத்தை போன்றவை சாப்பிட சுவையாக இருக்கலாம். ஆனால் அதில் பாதிக்கக் கூடிய பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுக்கள் இருக்கக் கூடும். நன்கு சமைக்கப்படாமல் பச்சையாக இருக்கக் கூடும். எனவே முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.
ஃபிரைடு உணவுகள் : வறுத்த மற்றும் பொறித்த உணவுகளில் கொழுப்பு அதிகமாக இருக்கும். இதனால் செரிமானிக்க சிரமமாக இருக்கும். இதனால் வயிற்று கோளாறுகளை அனுபவிக்கலாம். எனவே பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
காரமான உணவுகள் : காரசாரமான உணவுகள் சாப்பிட ருசியாக இருந்தாலும் வயிறு எரிச்சல், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடாமல் ருசிக்காக கொஞ்சம் சாப்பிடலாம்.
பழக்கமில்லாத உணவுகள் : புதிய இடங்களில் புதிய உணவுகளை சாப்பிட முயற்சி செய்கிறீர்கள் எனில் அதை உங்கள் உடல் ஏற்றுக்கொள்கிறதா என்பதை கவனியுங்கள். சாப்பிடவுடன் சருமத்தில் அரிப்பு, ஒவ்வாமை ஏற்படுகிறது எனில் அந்த உணவில் கலந்துள்ள ஏதோ ஒரு பொருள் ஒத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தம். எனவே அதை தவிர்ப்பது நல்லது.