மொபைல் கேம்கள், எப்போதும் ஆன்லைனில் நேரத்தை செலவிடுவது, ஜங்க் உணவுகள் என இன்றைய தலைமுறையினர், குறிப்பாக குழந்தைகளின் வாழ்க்கைமுறை அடியோடு மாறிவிட்டது. வெளியே சென்று ஓடியாடி விளையாடுவதற்கு பதில் வீட்டிற்குள்ளேயே மொபைல் கேம் விளையாடுகிறார்கள். சதா சர்வ காலமும் ஆன்லைனில் தான் இருக்கிறார்கள். நிச்சியம் இது நல்ல பழக்கம் அல்ல. அதிகமாக ஜங்க் உணவுகளை எடுத்துக்கொள்வது, குறைவான உடல் இயக்கம், மொபைல் ஸ்கீரினை அதிக நேரம் பார்ப்பது போன்றவற்றால் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றன. உடல் அசைவின்றி ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கும் வாழ்க்கைமுறை பெரியவர்களை மட்டுமல்லாமல் குழந்தைகளின் வாழ்க்கையிலும் நுழைந்துவிட்டது. ஆகவே, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை எப்படி கொடுப்பது? என்ன ஊட்டச்சத்துகள், என்ன விட்டமின்கள், வாழ்க்கைமுறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்து ஹெர்பி ஏஞ்சல் மருத்துவமணையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையின் தலைமை மருத்துவர், டாக்டர். சுவாதி ராமமூர்த்தி நம்மிடம் விளக்குகிறார். “குழந்தைகளுக்கு என்னென்ன சத்துக்கள் முக்கியமாக தேவை என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது சத்துள்ள உணவு. சரிவிகித உணவை நாம் கொடுக்கும் போது, அது குழந்தைகளின் ஓட்டுமொத்த வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல்நல பிரச்சனைகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். உங்கள் குழந்தை புத்திசாலியாகவும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் சக்தியோடும் இருப்பதற்கு சத்துள்ள உணவு மிகவும் அவசியம்”. குழந்தைகளின் சத்தான டயட்டிற்கு 6 வழிகள்..
1. சரிவிகித உணவு: கார்போஹைட்ரேட்ஸ், புரதங்கள், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் நல்ல கொழுப்புகள் அடங்கிய பழங்கள், காய்கறிகள், பருப்புகள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றை உங்கள் குழந்தைகள் கண்டிப்பாக உண்ண வேண்டும். இந்த உணவை தினசரி 4-5 முறை உங்கள் குழந்தைக்கு கொடுங்கள். இதன் மூலம் உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.
2. நீர்ச்சத்து மிகவும் முக்கியம்: தினசரி உங்கள் குழந்தை போதுமான அளவிற்கு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யுங்கள். தாகம் எடுக்கும் போது குளிர்பானங்களை குடிக்க விடாதீர்கள். அதிக நீர்ச்சத்து கொண்ட தர்பூசணி, முலாம் பழம், வெள்ளரிக்காய், இளநீர், லிச்சி, திராட்சை போன்றவற்றை தவறாமல் உங்கள் குழந்தைகளுகு கொடுங்கள்.
3. ஜங்க் உணவை குறையுங்கள்: சிறு வயதிலேயே ஆரோக்கியமான, சுவையான தின்பண்டங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள். வெறும் கலோரி நிறைந்த நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதற்குப் பதில் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுமாறு உங்களை குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகள், சர்க்கரை நிறைந்த திண்பண்டங்களுக்கு பதிலாக பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகளை கொடுத்து பழக்குங்கள். சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உங்கள் குழந்தைகளுக்கு புரதம், மினரல்ஸ் மற்றும் நார்ச்சத்து கிடைக்கும் அதே சமயத்தில் கொழுப்புகள் மற்றும் சர்க்கரை அடங்கிய திண்பண்டங்கள் சாப்பிடுவதை குறைக்கலாம்.
4. மூளை வளர்ச்சிக்கு ஒமேகா 3 ஃபேட்டி ஆசிடை சேர்த்துக் கொள்ளுங்கள்: APA, ALA, & DHA , இவற்றோடு மக்னீசியம், விட்டமின் பி காம்பளக்ஸ் ஆகியவை உங்கள் குழந்தையின் அறிவு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே உங்கள் குழந்தைகளின் டயட்டில் இவை போதுமான அளவிற்கு இருப்பதை பார்த்துக் கொள்ளுங்கள். மீன் எண்ணெயில் அதிகளவு ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. நீங்கள் சைவப் பிரியர்களா? கவலையை விடுங்கள். வறுத்த வால்நட், ஊற வைத்த பாதாம், சியா விதைகள், ஆளி விதைகள், நெய்களில் போதுமான சத்துக்கள் அடங்கியுள்ளது.
5. கால்சியம் மிகவும் முக்கியம்: உங்கள் குழந்தையின் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் முக்கியம். ஆகவே தினசரி உணவில் போதுமான அளவிற்கு கால்சியம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பால், சீஸ், தயிர் போன்றவை இந்த சத்துக்களை ஈடுகட்டும். உங்கள் குழந்தைக்கு பால் அருந்துவது அலர்ஜியாக இருந்தால், கீரைகள், காய்கறிகள், பாதாம், பீன்ஸ், டோஃபு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, விட்டமின் டி கிடைக்க வேண்டுமானால் உங்கள் குழந்தையின் உடலில் சூரிய ஒளி பட வேண்டும். ஆகவே கொஞ்ச நேரம் வெளியே விளையாட அனுமதியுங்கள்.
6. வளர்ச்சிக்கும் சக்திக்கும் இரும்புச்சத்தை உணவில் சேருங்கள்: சிவப்பு ரத்த செல்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, செரோடோன் ஹார்மோனை (நம் மனநிலையை உற்சாகப்படுத்துவது) மேம்படுத்துவதற்கும் இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. ADHD-யின் அறிகுறிகளை குறைக்கவும் இரும்புச்சத்து உதவுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, இரும்புச்சத்து அதிகமாக உள்ள இறைச்சிகள், கோழிக்கறி, மீன், பீன்ஸ், பருப்புகள், கீரைகளை உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். இந்த உணவுகளோடு விட்டமின் சி அதிகமாக உள்ள நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி, மிளகுத்தூளையும் சேர்த்துக்கொள்ளும் போது இரும்புச்சத்தின் பலன் முழுமையாக கிடைக்கும்.
7. தேவையான விட்டமின் மற்றும் மினரல்ஸை வழங்குங்கள்: விட்டமின் A, B, C, D, E, மற்றும் K ஆகியவை நோய் எதிர்ப்பு சக்திக்கும் கண் நலத்திற்கும் மிகவும் முக்கியம். இவையெல்லாம் உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டுமென்றால் கேரட், சிட்ரஸ் பழங்கள், கீரைகள், பால் பொருட்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை வானவில் டயட் என கூறுவார்கள். எல்லா விட்டமின்களும் உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க இந்த டயட்டைப் பின்பற்றுங்கள்.