மலைகள், ஏரிகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்ற அழகான இயற்கை வளங்களை இந்தியா கொண்டுள்ளது. குறிப்பாக இங்குள்ள பல மலைவாசஸ்தலங்களின் முக்கிய நீர்வீழ்ச்சிகள் பெரும் அளவிலான மக்களை ஈர்த்து வருகிறது. பருவ தொடங்கியுள்ளதால் நீர் வரத்தும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அருவிகள் தவிர்த்து அருகில் உள்ள மாநிலங்களில் உள்ள இடங்களைத் தேடுவோம். அப்படி நமது மாநிலத்திற்கு அருகே உள்ள மாநிலமான ஆந்திராவில் உள்ள அற்புதமான அருவிகளை பற்றி தான் இந்த செய்தித் தொகுப்பில் சொல்ல இருக்கிறோம். ஆந்திரா பக்கம் டூர் சென்றால் இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க
தலகோனா நீர்வீழ்ச்சி, திருப்பதி : சேஷாசல மலைகளின் நடுவில் அமைந்துள்ள அடர்ந்த காடுகளுக்கு இடையில் இருக்கும் இது திருப்பதியில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு 60 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் அருவிக்கு அருகே ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்கள் உள்ளன. அதனால் இந்த அருவி தண்ணீருக்கு நோய் தீர்க்கும் சக்தி இருப்பதாக நம்புகின்றனர்.
கடிகா நீர்வீழ்ச்சி, விசாகப்பட்டினம்: கடிகி நீர்வீழ்ச்சி அருவி சுமார் 50 அடி உயரம் கொண்டது. இது போரா குகையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது கோஸ்தானி ஆற்றில் இருந்து தொடங்குகிறது. மலையேற்றப் பிரியர்களுக்கு இந்தப் பகுதி மிகவும் ஏற்றது. மேலும், நடந்து செல்பவர்கள் இங்குள்ள இயற்கை அழகை கண்டு மயங்கும் வண்ணம் இருக்கும்.
ரம்பா நீர்வீழ்ச்சி, கிழக்கு கோதாவரி: இது ஆந்திராவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த அருவியை அடைய 20 நிமிட மலையேற்றம் செய்யவேண்டும். ரம்பசோடவரத்திலிருந்து 10 கிமீ தொலைவிலும், ராஜமுந்திரியிலிருந்து 58 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் உள்ள இந்த அருவியில் குளிப்பது சிலிர்ப்பையும், புத்துணர்ச்சியையும் தரும்.
நாகலாபுரம் அருவி, சித்தூர் : திருப்பதியில் இருந்து 70 கி.மீ. நாகலாபுரம் மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி 'அருவிகளின் ராணி' என்று அழைக்கப்படுகிறது. இயற்கை அழகையும், அருவியையும் காண அதிகளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். கிழக்குத் தொடர்ச்சி மலையில் 'நாகலா மலையேற்றம்' மிகவும் பிரபலமான மலையேற்றமாகும்.